வேண்டாமே வீண் விரயம்

ஆற்றில் போட்டாலும் அளந்து போடு என்னும் பழமொழி அளவறிந்து வாழும் வாழ்வு வளமாய் அமையும்;
வேண்டாமே வீண் விரயம்
Updated on
2 min read

ஆற்றில் போட்டாலும் அளந்து போடு என்னும் பழமொழி அளவறிந்து வாழும் வாழ்வு வளமாய் அமையும்; வீண் விரயம் ஏற்படாது என்பதை எடுத்துரைக்கிறது. தனி மனிதனின் விரயம் அவனையும் அவனின் குடும்பத்தையும் பாதிக்கும். தணிக்கை அறிக்கைகள் சுட்டிக்காட்டும் பொது அல்லது அரசு நிதிகளில் ஏற்படும் விரயம் நாட்டைப் பாதிப்பதையும் காண்கிறோம்.

அதனாலேயே ""உங்களின் தேவைக்கதிகமாக உள்ளதை தருமம் செய்யுங்கள்'' என்று குர்ஆனின் 2:219 வசனம் கூற, 17-26 ஆவது வசனம், ""உறவினர்களுக்கும் வறியவர்களுக்கும் வழிபோக்கர்களுக்கும் உரியதைக் கொடுங்கள். வீண் செலவு செய்யாதீர்'' என்று எச்சரிக்க, 7-31 ஆவது வசனம் ""உண்ணுங்கள் பருகுங்கள் ஆனால் விரயம் செய்யாதீர்கள். திண்ணமாக இறைவன் விரயம் செய்வோரை நேசிப்பதில்லை'' என்று எச்சரிக்கிறது.

"பொருள்களை வீணாக்குவதை அல்லாஹ் வெறுக்கிறான்'' என்ற ஏந்தல் நபி (ஸல்) அவர்களின் அறிவிப்பை அபூஹீரைரா (ரலி) கூறுவது முஸ்லிம் நூலில் குறிப்பிடப்படுகிறது. அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அறிவிப்பிற்கு ஆதாரமான அருமறை குர்ஆனின் வசனங்கள், "அளவு கடந்து வீண் செலவு செய்ய வேண்டாம்'' (17-26) ""மிதமிஞ்சி செலவு செய்பவர்கள் சாத்தானின் சகோதரர்களாக இருக்கின்றனர்.

சாத்தானோ இறைவனுக்கு நன்றி செலுத்தாதவன்'' (17-27) "நம்பிக்கையுடையோரே! அல்லாஹ் உங்களுக்கு அனுமதித்த நல்லவைகளை விலக்கிக் கொள்ளாதீர்கள்; அனுமதித்தவற்றில் அளவைக் கடக்காதீர்கள். அல்லாஹ் அளவு மீறுபவர்களை நேசிக்க மாட்டான்'' (5-87) ""நீங்கள் விரயம் செய்யாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் விரயம் செய்பவர்களை நேசிக்க மாட்டான் (6-141).

கலீபா ஹாரூன் கட்டிய பெரிய மாளிகையையும் அதிலிருந்த அலங்காரங்களையும் அவரின் சகோதரர் பஹ்ருல் (ரஹ்) ""ஹாரூனே! நீ மண்ணை உயர்த்தி மார்க்கத்தைத் தாழ்த்தி விட்டாய்; சுண்ணாம்பு காரையை உயர்த்தி குர்ஆன் நபிமொழிகளைத் தாழ்த்தி விட்டாய். இச்செலவு உன் சொந்த பணமாயின் வீண் செலவு செய்து விட்டாய். விரயம் செய்தவரை இறைவன் பொருந்தி கொள்ளமாட்டான். அந்நியரின் பொருளில் (பொது நிதியில்) இருந்து செலவு செய்திருந்தால் நீ அக்கிரமம் செய்து விட்டாய். அக்கிரமக்காரர்களை அல்லாஹ் நேசிக்க மாட்டான்'' என்று சொன்னார்.

அவசிய செலவுகளைச் செய்யாது கஞ்சனாக இருப்பதையும் இறைமறையின் 17- 29 ஆவது வசனம் சாடுகிறது'' உங்களின் பொருள்களைச் செலவிடாது உங்கள் கையைக் கழுத்தில் மாட்டி விடாதீர்கள். அன்றி, உங்களுடைய கையை முற்றிலும் விரித்து விடாதீர்கள். அதனால் நீங்கள் நிந்திக்கப்படும் இரப்போராக ஆகி விடாதீர்கள்''

தாபித் இப்னு கைஸ் (ரலி) ஐநூறு ஈச்ச மரங்களை வளர்த்தார். அவைகள் பழுத்ததும் அத்தனை மரங்களையும் ஒரே நாளில் அங்கிருந்த பலருக்கும் பங்கிட்டு கொடுத்தார். அவரின் குடும்பத்திற்கு எதையும் வைத்துக் கொள்ளவில்லை. இவ்வாறு செய்வதும் விரயமே என்று இவ்வசனத்திற்கு விளக்கம் அளிக்கிறார்கள் அறிஞர்கள்.

"அவர்கள் செலவு செய்தால் அளவைக் கடந்து விட மாட்டார்கள். கஞ்சத்தனமும் செய்ய மாட்டார்கள். இதற்கு மத்தியில் நடுநிலையாக அது இருக்கும்'' என்ற இறைமறை குர்ஆனின் 25- 67 ஆவது வசனம் வரையறைத்து அவ்வரையறைக்குள் செலவிட்டு செழிப்போடு வாழ்வதைக் குறிப்பதோடு அளவு கடந்து என்ற சொற்றொடர் வீண் விரயத்தைக் குறிக்கிறது.

தங்கம், வெள்ளி பாத்திரங்களில் உணவு உண்பதையும் நீர் பருகுவதையும் நீதர் நபி (ஸல்) அவர்கள் தடுத்த தகவலைத் தருகிறார் ஹுதைபா (ரலி) நூல்-புகாரி, முஸ்லிம்.

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களுக்கு வெள்ளி தட்டில் தேன் மாவு ஆகியவற்றால் செய்யப்பட்ட இனிப்பு பலகாரம் பாலூதா கொண்டு வரப்பட்டது. அனஸ் (ரலி) வெள்ளி பாத்திரத்தில் அதனைச் சாப்பிடாது மரத்தாலான கலன்ஜ் என்ற பாத்திரத்தில் பலகாரத்தை மாற்றி வைத்து சாப்பிட்டார்கள். அறிவிப்பவர் -அனஸ் பின் சிரீன் (ரலி) நூல்- பைஹக்கீ.

"தேவையின்றி அதிகமாக பேசுவதை, அதிகமாக கேட்பதை, செல்வத்தை வீணாக்குவதை அல்லாஹ் வெறுக்கிறான்'' என்ற நபிமொழியை நவில்பவர் - முகீரா பின் ஷுஅபா (ரலி) நூல்- புகாரி.

கால, நேர விரயத்தையும் கண்டித்தார்கள் கருணை நபி (ஸல்) அவர்கள். முன்னிரவு தொழுகையான இஷா (இரவு 08.00 மணி) தொழுகைக்கு முன் தூங்குவது கூடாது. இஷாவுக்குப்பின் அவசிய அவசர தேவையின்றி பேசுவதைப் பெருமானார் (ஸல்) அவர்கள் தடுத்ததை எடுத்தியம்புகிறார்- அபூபர்ஜா (ரலி) நூல்- புகாரி.

குர்ஆன் கூறும் முறையில் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்து காட்டிய வழியில் காலம், நேரம், அறிவு, ஆற்றலை, திரவியத்தை விரயம் செய்யாது சிக்கனமாய் வாழ்வோம். நாமும் நலம் பெறுவோம். நாடும் வளம் பெறும்.

- மு.அ. அபுல் அமீன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com