ஆறுமுகனின் அவதார நன்னாள்!

ஆறுதலை வழங்கும் ஆறுமுகப்பெருமான் அவதாரம் செய்த அற்புதத் திருநாளே வைகாசி விசாகம்!
ஆறுமுகனின் அவதார நன்னாள்!
Updated on
1 min read

ஆறுதலை வழங்கும் ஆறுமுகப்பெருமான் அவதாரம் செய்த அற்புதத் திருநாளே வைகாசி விசாகம்!

"ஞாலம் ஏற்றி வழிபடும் ஆறுபேர்க்கு மகவென

நாணல் பூத்த படுகையில் வருவோனே!''

என அற்புத சொற்பதங்களால் வைகாசி விசாகத்தில் விழிமலர்ந்த வேலவனைப்

போற்றிப் புகழ்கின்றார் அருணகிரிநாதர்.

சரவணம் என்று சிறப்பிக்கப்படும் நாணற்காட்டில் தர்ப்பை வனத்தில் ஆறு குழந்தைகளாக முருகன் ஆடல் புரிந்தான் என கந்தபுராணம் கார்த்திகேயனைப் புகழ்கிறது.

"ஆட ஓர் உருவம்! செங்கை அறைய ஓர் உருவம்

பாட ஓர் உருவம்! நாடிப்  பார்க்க ஓர் உருவம்!

ஓட ஓர் உருவம்! ஓர்பால் ஒளிக்க ஓர் உருவம்!''

இப்படி கார்த்திகைப் பெண்களிடம் தவழ்ந்த முருகனை ஒரு சேரக்கட்டி அணைத்து ஓர் உருவம், ஆறுதலையாக ஆக்கினாள் அம்பிகை. "கந்தன்' என்றால் சேர்த்துக் கட்டிய திருமேனி கொண்டவன் என்பதே பொருள்.

சம்பூதி, அநசூயை, நிருதி, சன்னதி, கமை, க்யாதி என கார்த்திகை மாதர் அறுவரின் பெயர்களை புராணம் குறிப்பிடுகிறது. முருகனை வளர்த்தவர்கள் ஆறுபேர்; முருகனுக்கு உகந்தது ஆறாவது திதி சஷ்டி;

முருகனுக்குப் படை வீடுகள் ஆறு; முருகனின் மூல மந்திரமும் சரவணபவ என்னும் ஆறெழுத்து; முருகனுக்கு உரிய ஆறு திருவிழாக்களில் அவன் அவதாரத் திருவிழாவாக ஆறுபடை வீடுகளிலும் அமோகமாகக் கொண்டாடப்படுவதுதான் வைகாசி விசாகம். தமிழாண்டில் முதலில் வருவதும் அதுவே. தொடர்ந்து ஆடிகிருத்திகை, கந்தசஷ்டி, கார்த்திகை தீபம், தைப்பூசம், பங்குனி உத்திரம் என மற்ற ஐந்து விழாக்களும் வருகின்றன.

வேலவன் குழந்தை தெய்வம்! முருகப்பெருமானின் திருக்கோயில்களில் எல்லாம் அபிஷேகம், ஆராதனை, விபூதி, சந்தன காப்புகள், அன்னதானம், காவடி வைபவம் என அநேக கொண்டாட்டங்கள் உண்டு. இருபத்து ஏழாக இலங்குகின்ற நட்சத்திர கூட்டத்தில் பதினாறாவதாக பளிச்சிடுகிறது விசாகம்! விசாகத்தில் வேலவனை வழிபட்டால் பக்தர்களுக்குத் தன் பன்னிரெண்டு கைகளால் பதினாறு பேறுகளையும் அருளுவான் என்பதுதானே நிதர்சனம்.

"இன்சொல் விசாகா...கிருபாகரா...!' என திருப்புகழ் பாடி திருமுருகனை வழிபடுவதே சிறப்பாகும்.

- மதிவண்ணன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com