ஏந்தல் நபி (ஸல்) அவர்களும் அவர்களின் தோழர்களும் ஏக இறை கொள்கையை எடுத்து இயம்பிய பொழுது பல தெய்வ வணக்க வழிபாட்டினர் வரையறையின்றி தொடர்ந்து தொல்லை கொடுத்து எல்லையில்லா துன்பத்திற்கு ஆளாக்கிய பொழுது ஆளுமையுடைய அண்ணல் நபி (ஸல்) அவர்கள் எதிரிகளைத் தடுத்து செய்த தற்காப்பு போர்களே இஸ்லாமிய போர்கள்.
குர்ஆனின் அறுபது வசனங்களில் போர் செய்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. ஆயினும் நிராகரிப்பவர்களின் அநியாயத்தில் சிக்கி நிர்ப்பந்திக்கப்பட்டவர்களுக்கு நிராகரிப்பவர்களை எதிர்த்து போர்புரிய அனுமதி அளிக்கிறது அருமறை குர்ஆனின் 22-39 ஆவது வசனம். அத் தற்காப்பு போரில் எப்படி போர் புரிய வேண்டும் என்பதை 2-190 ஆவது வசனம் வரையறுக்கிறது.
""உங்களை எதிர்த்து போர் புரிய முற்பட்டோரை அல்லாஹ்வின் வழியில் நீங்களும் எதிர்த்து போரிடுங்கள். எல்லை கடந்து விட வேண்டாம். ஏனெனில் அல்லாஹ் அத்து
மீறுபவர்களை நேசிப்பதில்லை'' 4-71 ஆவது வசனம் ""எதிரிகளிடம் எப்பொழுதும் எச்சரிக்கையாக இருங்கள். உங்களின் தற்காப்பு சாதனங்களை உங்களுடன் எடுத்து செல்லுங்கள். சிறுசிறு கூட்டங்களாகவோ அல்லது அனைவரும் ஒன்று சேர்ந்து செல்லுங்கள்'' என்று எச்சரிக்கின்றது.
பொற்புடைய நபி (ஸல்) அவர்கள் பொழுது புலர்ந்தபின் போரைத் துவக்கி நண்பகல் வரை போரிட்டு பொழுது சாயும் நிலையில் போரை நிறுத்தி விடுவார்கள். பொழுது சாய்ந்ததும் போரைத் துவக்கி அஸர் (மாலை) தொழுகை தொழுதுவிட்டு போரைத் தொடர்வார்கள் என்று நுஃமான் இப்னு முகர்ரின் (ரலி) அறிவிப்பது அபூதாவூத், திர்மிதீ நூல்களில் உள்ளது.
பத்ரு போரின் பொழுது எதிரிகள் நெருங்கி வந்தால் அவர்கள் மீது அம்பு எய்துமாறும் அவர்கள் தொலைவில் இருக்கும்பொழுது அம்பெய்தி அம்புகளை வீணாக்காதிருக்க விழுமிய நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டதைக் கூறுகிறார். அபூஉûஸத் மாலிக் பின் ரபீ ஆ (ரலி) நூல் -புகாரி.
"பலவீனர்களும் நோயாளிகளும் போருக்குச் செலவிடும் பொருளில்லாதவர்களும் போரில் ஈடுபடாதிருப்பது குற்றமல்ல'' என்று கூறுகிறது குர்ஆனின் 9-91 ஆவது வசனம். 48-17 ஆவது வசனம் ""குருடன், நொண்டி, நோயாளிகள் போரில் கலந்து கொள்ளாதது குற்றமல்ல'' என்று கூறுகிறது.
போரில் பெண்களையும் சிறுவர்களையும் கொல்வதைக் கோமான் நபி (ஸல்) அவர்கள் தடை செய்ததை செப்புகிறார் இப்னு உமர் (ரலி) நூல்- புகாரி முஸ்லிம், முஅக்தா, அபூதாவூத், திர்மிதீ. ""போரிடுபவர்கள் போர் புரியாது விலகினால் நீங்கள் அவர்களோடு போரிட வேண்டாம்'' என்று புகல்கிறது புனித குர்ஆனின் 2-192 ஆவது வசனம். 4-86 ஆவது வசனம் ""கலகக் காரர்கள் கலகத்திலிருந்து விலகிவிடின் அவர்களுக்கு மன்னிப்பு உண்டு. அநியாயம் செய்பவர்களைத் தவிர்த்து மற்றவர்கள் மீது அத்துமீறல் அறவே கூடாது'' என்று அப்பாவி மக்களைக் காப்பாற்ற கற்பிக்கிறது.
"இணை வைப்போரில் எவரும் உங்களிடம் பாதுகாப்பு கோரினால் அல்லாஹ்வின் அருள் மறையைச் செவியுறும் வரையில் பாதுகாப்பு கொடுங்கள். அதனைச் செவியுற்றும் நம்பிக்கை கொள்ளாவிட்டால் அவனை அவனுக்குப் பாதுகாப்பான வேறிடத்திற்கு அனுப்பி விடுங்கள்'' என்று அபயம் கேட்போருக்கு அபயமளித்து ஆதரவு நல்க நவில்கிறது நற்குர்ஆனின் 9-6 ஆவது வசனம்.
"போரில் கிடைத்த பொருள்கள் பொது சொத்து. அதை எடுத்தவர் மறைத்து தனக்கென வைத்துக் கொள்வது கூடாது'' என்று கூறுகிறது 8-1 ஆவது வசனம். போரில் கிடைத்த பொருள்களைத் திருடுவதையும் பிடிபட்ட கைதிகளை உயிர் பிராணிகளைச் சித்திரவதைச் செய்வதையும் செம்மல் நபி (ஸல்) அவர்கள் தடுத்ததை எடுத்துரைக்கிறார் அப்துல்லாஹ் இப்னு யஜீதுல் அஸ்ஸனி (ரலி) நூல் -புகாரி. ""போரில் கிடைத்த பொருள்களைத் திருடியவரைக் காட்டி கொடுக்காது காப்பாற்றுபவரும் திருடியவரைப் போன்றவரே'' என்று பூமான் நபி (ஸல்) புகன்றதைக் கூறுகிறார் ஸமுரதுப்னு ஜீன்துப் (ரலி) நூல் -அபூதாவூத். திருடியவர்களின் பொருளை எரித்துவிட்டு தண்டனை வழங்கி திருடியவருக்குப் போரில் கிடைத்த பொருள்களில் பங்கு தராமல் தடுத்து விட்டனர் அபூபக்கர் (ரலி) மற்றும் உமர் (ரலி) என்று அறிவிப்பவர் அப்துல்லாஹ் இப்னு அம்ருப்னுல்ஆஸ் (ரலி) நூல்- அபூதாவூத்.
போரில் கிடைத்த பொருள்களின் பங்கீட்டில் பங்கைப் பெற தகுதியுடையவர்கள் போரில் ஈடுபட்டவர்களின் உறவினர்கள், அநாதைகள், ஏழைகள், வழிப்போக்கர்கள், மக்காவிலிருந்து மதீனாவிற்கு அபயம் தேடி வந்தவர்கள், மதீனாவில் அபயமளித்தவர்கள் என்று பட்டியலிடும் பாங்கான குர்ஆனின் 59-7 முதல் 10 வரையுள்ள வசனங்கள் இப்பங்கீட்டால் செல்வம் செல்வந்தர்களிடம் மட்டும் சுற்றி கொண்டிராமல் பரவலாக பலருக்கும் பயன்படும் சமுதாய நீதியை நிலைநிறுத்துகின்றன.
இன்று நாடுகளுக்குள்ளேயே கலகங்கள் செய்யும் புரட்சி என்ற பெயர் பூண்ட உள்நாட்டு போர்களிலும் எல்லையில் தொல்லை கொடுத்து நாடுகளிடையே நடக்கும் போர்களிலும் அப்பாவி மக்களை அநியாயாமாய்க் கொன்று குவிப்போர் நின்று நிதானித்து கவனத்தில் கொள்ள வேண்டியதே இக்கட்டுரையில் சுட்டப்படும் போற்றற்குரிய போர் ஒழுக்கம்.
- மு.அ. அபுல் அமீன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.