பூமியில் பிறரோடு உறவாடி பிறழாத பெருந்தன்மையாம் பொறுமையுடன் சமூக, சமுதாய, நாட்டு நல்லிணக்கத்தைப் பேணுவோரே பூமியாளும் பொறுப்புக்குரியவர் என்பதை பொறுத்தார் பூமியாள்வார் என்னும் பழமொழி பக்குவமாய் பகர்கிறது. உலக பொறுமை நாள் நவம்பர் 16 இல் கொண்டாடப்படுகிறது. பொறுமையைவிட விசாலமான கொடை ஏதுமில்லை என்ற ஏந்தல் நபி (ஸல்) அவர்களின் நந்மொழியை நவில்பவர்- அபூஸயீதினில் குத்ரி (ரலி) நூல் - புகாரி.
நூஹ்நபி ஏக இறை கொள்கையை பிரச்சாரம் செய்யும்பொழுது அதனை ஏற்காதவர்கள் நூஹ் நபியை மயங்கி விழும் வரை அடிப்பார்கள். ""நீர் பொறுமையுடன் இருப்பீராக! நிச்சயமாக முடிவு பயபக்தி உள்ளவர்களுக்குத்தான்'' என்ற குர்ஆனின் 11-49 ஆவது வசனப்படி நூஹ் நபி மயக்கம் தெளிந்து எழுந்ததும் ""என் சமூகத்தினருக்கு நேர்வழி காட்டுவாயாக! நிச்சயமாக அவர்கள் அறியாதவர்கள்'' என்று இறைஞ்சினார்கள்.
தாவூது நபி அவர்களுக்கு பத்தொன்பது ஆண் மக்கள். தாவூது நபி ஒரு பேரரசர். அவர்களின் பதினெட்டு மகன்களும் அரசுரிமையை பெறவே போட்டியிட்டனர். இறைவன் கட்டளைப்படி பத்தொன்பது மகன்களையும் ஒன்று கூட்டி தாவூது நபி கேள்வி கேட்டார்கள். பதினெட்டு பேர்களும் பதில் கூறாது பேதலித்து நின்றனர். ஒரு மகன் சுலைமான் நபி அவர்கள் பத்தொன்பது வினாக்களுக்கும் விடை கூறினார்கள். அப்பத்தொன்பது கேள்விகளில் ஒன்று, ஒரு மனிதனுக்குப் புகழ் தருவது எது? இக்கேள்விக்கு ""கோபத்திலும் பொறுமையை கடைபிடிப்பது கிடைத்தற்கரிய புகழை ஈட்டி தரும்'' என்று சுலைமான் நபி பதில் சொன்னார்கள். பொறுமையை பற்றி புரிந்து பூமியாளும் பொறுமையுடைய சுலைமான் நபி அவர்களே ஆளத் தகுதியுயைவர்கள் என்று அவர்களுக்கு அரசுரிமையை அளித்தார்கள் தாவூது நபி. சுலைமான் நபி 13 வயதில் ஆட்சி பொறுப்பை ஏற்று 40 ஆண்டுகள் ஆட்சி புரிந்து 53 ஆவது வயதில் இறந்தார்கள்.
நீங்கள் அல்லாஹ்விடம் உதவி தேடுங்கள். இந்த பூமி அல்லாஹ்விற்குச் சொந்தமானது; என்று மூசா நபி அவர்களைப் பின்பற்றியோருக்கு அறிவுறுத்தியதை அறிவிக்கிறது அருமறை குர்ஆனின் 7-128 ஆவது வசனம். பொறுமையுடையோருக்கும் நன்றி செலுத்துவோருக்கும் நல்ல படிப்பினைகள் உள்ளதாக உரைக்கிறது உயர் குர்ஆனின் 14-5 ஆவது வசனம்.
ஒரு வாகனத்தில் பயணம் செய்யும்பொழுது பெருமானார் (ஸல்) அவர்கள் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுக்குச் சங்கடம் வரும்பொழுது பொறுமையாக இருக்குமாறும் பொறுமையாக இருந்தால் இறைவனின் உதவி கிடைக்கும்; நெருக்கடிக்குப்பின் நிம்மதி வரும் என்றும் போதித்தார்கள்.
நபிமார்கள் சிரமம் ஏற்படும்பொழுது பொறுமையுடன் இறைவனைத் தொழுது துதிப்பார்கள். அல்லாஹ்வின் அருள் கிட்டும். இந்த நெறிப்படி ஒருமுறை பயணம் செல்கையில் மகன் இறந்த செய்தியைக் கேட்டதும் பதறாது பொறுமையாக வாகனத்திலிருந்து இறங்கி இரண்டு ரக் அத் இறைவனைத் தொழுதார்கள் இப்னு அப்பாஸ் (ரலி).
ஹாம்பின் ஹய்யான் என்ற இறைநேசரின் மரண தருவாயில் அவரின் சீடர்கள் மரண சாசனம் செய்ய வேண்டினர். அவரோ மரண சாசனம் செய்ய பொருள் எதுவுமில்லை. எந்த நிலையிலும் நீங்கள் பொறுமையோடிருக்க வேண்டும் என்பதே அவரின் மரண சாசனம் என்றுரைத்தார். நூல்- சாஜின்.
முஸ்லிம் என்னும் நபிமொழி நன்னூலுக்கு விளக்கம் எழுதிய இமாம் நவவீ (ரலி) அவர்களின் நூலில் உள்ள பொறுமைக்கு இலக்கணம் வகுக்கும். இஸ்லாமிய பெரியோர்களின் கூற்று, ""பொறுமை என்பது இறை கட்டளைகள், நபி வழிபடி நடப்பது''- இப்ராஹீம் கவ்வாஸ் (ரலி). ""பொறுமை என்பது சோதனை ஏற்படும்பொழுது நாவையடக்கி வைத்திருப்பது'' -இப்னு அத்தார் (ரஹ்). "பொறுமையின் தத்துவம் அல்லாஹ் நாடியதே நமக்கு நடக்கிறது என்று ஏற்பது'' - உஸ்தாத் அபூ அலி தக்காக் (ரஹ்).
"அல்லாஹ்வினும் பொறுமையாளன் எவனுமில்லை. இணைதுணை இல்லாத அல்லாஹ்விற்கு இணை வைத்து சந்ததியைக் கற்பனை செய்து மாறுபடுவோருக்கும் உணவு கொடுத்து உடல்நலத்தோடு வாழ செய்கிறான்'' என்ற வள்ளல் நபி (ஸல்) அவர்களின் வாக்கை வாகாய் நவில்பவர் -அபூமூஸô (ரலி) நூல்- புகாரி.
"நூல் உங்களைப் பயத்தைக் கொண்டும் பசி பட்டினியைக் கொண்டும் உயிர் பழவகைகளில் குறைவு ஏற்படுத்தியும் பரிசோதிப்போம். அப்பொழுது பொறுமையை கையாளுங்கள்'' என்று குர்ஆனின் 2- 155, 156 ஆவது வசனங்கள் அறிவுறுத்த, 2-45, 2-153 ஆவது வசனங்கள் இவ்வுலகம் கடும் சோதனைக்குரிய இடம். சோதனையில் வெல்ல பொறுமையை கொண்டும் தொழுகையை கொண்டும் உதவி தேட உரைக்கின்றன.
"அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கிறான்'' என்ற இறைமறை குர்ஆனின் 22-44 ஆவது வசனப்படி பொறுமை காத்து பொறுமையாளன் அல்லாஹ்வின் அண்மையை பெற்று நன்மைகள் செய்து நல்வாழ்வு வாழ்வோம்.
- மு.அ. அபுல் அமீன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.