

நாவுக்கரசு பெருமானைக் கொல்ல நினைத்தவர்கள் மதயானையை ஏவினார்கள். எல்லோரையும் மிதித்து அழித்துக் கலக்கிய யானை, நாவுக்கரசரை மட்டும் வணங்கிச் சென்றது. நமச்சிவாய என்னும் திருநாமத்தின் சிறப்பால் புறம்போந்த யானையைப் பார்த்தவர்கள் அடுத்து எப்படியொரு அழிவு கொண்டு வருவது என்று யோசித்தார்கள்.
அதற்கொரு வழியும் கண்டார்கள். கருங்கல்லில் கட்டிக் கடலில் தூக்கிப் போட்டால் என்ன?
திருநாவுக்கரசர், அது அரசன் ஆணை என்பதால் அசையாது நின்றார். கருங்கல்லில் கட்டினார்கள். அள்ளித் தூக்கி அலைகடலில் வீசினார்கள்.
அதோடு அவர் அழிந்துபடுவார் என்பது அவர்களின் எண்ணம். ஆனால்?
கடலில் தள்ளப்படும்போதே இறைவனை எண்ணிப் பாடத் தொடங்கினார் பெருமான்.
கடலுக்குள் அமிழ்ந்துவிடும் என்று அவர்கள் நினைத்த கருங்கல், தெப்பம் மிதப்பதுபோல் மிதந்தது. தெப்பத்தின் மீது அமர்ந்திருந்தார் நாவுக்கரசர். தெப்பம் கரை நோக்கி மிதந்தது. கரையேறினார் நாயனார்.
கடலில் தள்ளியபோது
நாவுக்கரசர் பாடிய நமச்சிவாயப் பதிகம்
"சொற்றுணை வேதியன் சோதி வானவன்
பொற்றுணை திருந்தடி பொருந்தக் கைதொழக்
கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
நற்றுணையாவது நமச்சி வாயவே.''
இந்நிகழ்ச்சி நிகழ்ந்தது இப்போதைய கடலூருக்கு அருகாமையில் ஆகும். கடலில் மிதந்து வந்த கல் தெப்பம் கரையை வந்து அணைந்தது. கடலூர் வண்டிப்பாளையத்திற்கு அருகே அப்பகுதி, இப்போது ""கரையேறவிட்ட குப்பம்'' என்றழைக்கப்படுகிறது. ஆண்டு
தோறும் நாவுக்கரசர் கரை மீண்ட விழா விமரிசையாக நடைபெறுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.