சப்த ரிஷிகள் பாதயாத்திரையாகச் சென்றபோது ஓரிடத்தில் தங்கி பூஜைகள் செய்தனர். அவ்விடம் சப்த ரிஷிபுலம் என்று வழங்கப்பட்டு, பின்னர் கத்தரிப்புலம் என்றானது. நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் வட்டத்தில் வேதாரண்யத்திலிருந்து 10 கி.மீ. வடகிழக்கில் ஆயக்காரன் புலம், கருப்பம்புலம், குரவப்புலம், தென்னம்புலம் ஆகிய ஊர்களுக்கிடையே அமைந்துள்ள கத்தரிப்புலம் கிராமம், வயல்களும் தோப்புகளும் நீர்நிலைகளும் நிறைந்த எழில்மிகு அழகிய கிராமமாக விளங்குகிறது.
கத்தரிப்புலத்தில் அமைந்துள்ள சிவன் கோயில் புராணத் தொடர்புடைய பழைமையான கோயிலாகும். இத்தலத்தில் எழுந்தருளி அருள்பாலிக்கும் இறைவன் காசிநாத சுவாமிகள், இறைவி வேத நாயகி அம்பாள். சுயம்புலிங்கமான காசிநாதர் காசியப மகரிஷியால் பூஜிக்கப்பட்டதாகவும் அதன் காரணமாக காசிநாதர் என்று அழைக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
இந்த லிங்கம் மண்ணில் புதையுண்டு கிடந்து வயலை உழுதபோது வெளிப்பட்டது. கிராமத்தினர் சிவாலயம் ஒன்றை நிர்மாணித்து அதில் இந்த லிங்கத்தை ஸ்தாபனம் செய்துள்ளார்கள். இவ்வாலயத்தில் வேதநாயகி அம்மனுக்கும் பிள்ளையார், முருகன், சண்டிகேஸ்வரர் ஆகிய தெய்வங்களுக்கும் தனித்தனி சந்நிதிகள் அமைக்கப்பட்டுள்ளன. சனி, சூரியன், பைரவர் ஆகியோர் ஒரே சந்நிதியில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளனர். நவக்கிரகங்கள் ஒரு சிறு மண்டபத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.
இவ்வாலயத்தின் புனித தீர்த்தங்கள், சூரிய புஷ்கரணி, சந்திர புஷ்கரணி, மணிகட்டிக்குளம், மயிலடிக் குட்டை ஆகியவை. இந்த புஷ்கரணிகளில் நீராடுவது காசியில் நீராடுவதற்குச் சமம் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
சிவாலயத்துக்கு அருகில் இருந்த பெருமாள் கோயில் பல ஆண்டுகளுக்கு முன் சிதிலமடைந்து வழிபாடில்லாமல் இருந்து வந்தது. அங்கிருந்த பெருமாள் சிலை கவனிப்பாரின்றி இருந்ததால் அதைப்பற்றி யாரும் கவலைப்படவில்லை. வெகுநாள்கள் அச்சிலை சூரிய புஷ்கரணி தண்ணீருக்குள் மூழிகிக் கிடந்தது. எவரும் சிலை தண்ணீருக்குள் இருப்பதை அறியவில்லை.
ஒருசமயம், புஷ்கரணியில் நீராடிய பக்தர்கள் சிலையை கண்டனர். பின்னர் அச்சிலையை சிவன் கோயிலில் சூரியன், சனி, பைரவர் ஆகியோர் ஸ்தாபிக்கப்பட்டுள்ள சந்நிதியில் முறைப்படி பிரதிஷ்டை செய்துள்ளனர். பெருமாளுக்கும் தினசரி பூஜை செய்யப்படுகிறது. சிவன்கோயிலில் பெருமாளுக்கும் பூஜை செய்யப்படுவது ஹரியும் ஹரனும் ஒன்றே என்ற தத்துவத்தை உணர்த்துகிறது.
பிரதோஷம் மற்றும் பண்டிகை நாள்களில் இங்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.
பக்தர்கள் கோரிக்கை நிறைவேற பிரார்த்தனை தெய்வமாக விளங்குகிறார் காசிநாத சுவாமிகள். சுற்று வட்டார மக்களிடையே பிரபலமடைந்துள்ளது இந்தத் திருக்கோயில்.
திருத்துறைப் பூண்டியிலிருந்து செங்காத்தலை பாலம் வழியாக வேதாரண்யம் செல்லும் வழித்தடத்தில் "கத்தரிப் புலம் சாலை' பேருந்து நிறுத்தத்திலிருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் திருக்கோயிலைச் சென்றடையலாம்.
தொடர்புக்கு: மகாகணேச குருக்கள் - 97512 41104.
- கே. சுவர்ணா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.