
என் பேத்திக்கு 2 வயது. சதை அழற்சி நோய் என்று கூறுகிறார்கள். மூளையிலிருந்து சதைகளுக்கு நரம்பு மண்டலம் மூலம் கட்டளைகள் சரியாகச் செல்லவில்லை. சுயமாக நிற்கமுடியாது. தற்சமயம் நடப்பது சூரியதசை என்று கூறினார்கள். இது நல்ல காலம் என்றும் கூறினார்கள். ஆரோக்கியத்திற்கு உரிய கிரகம் எது? என் பேத்திக்கு இது குணமடையுமா? பரிகாரம் எதுவும் செய்ய வேண்டுமா?
- வாசகர்
உங்கள் பேத்திக்கு ரிஷப லக்னம், கன்னி ராசி, உத்திரம் நட்சத்திரம் 3 ஆம் பாதம். பிறப்பில் சூரிய மகாதசையில் இருப்பு 2 வருடங்கள், 8 மாதங்கள், 28 நாள்கள் என்று வருகிறது. லக்னம் மற்றும் ஆறாம் வீட்டுக்கதிபதியான சுக்கிரபகவான் எட்டாம் வீட்டில் சுயசாரத்தில் (பூராடம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் தன் ஆட்சி வீடான துலாம் ராசியை அடைகிறார். லக்னாதிபதி ஆறாமதிபதியுமாகி எட்டாம் வீட்டில் அமர்ந்து இருப்பது விபரீத யோகம் என்று கூற வேண்டும். இரண்டாவதாக அவர் சுயசாரத்தில் இருக்கிறார். மூன்றாவதாக, அவர் நவாம்சத்தில் ஆட்சி பெற்று இருக்கிறார். இவை அனைத்திற்கும் மேலாக லக்னமும் வர்கோத்தமமாக (ராசியிலும் நவாம்சத்திலும் ஒரே வீட்டில் இருக்கும் நிலை) அமைந்திருக்கிறது. மேலும் குடும்ப ஸ்தானத்திலிருந்து பூர்வபுண்ணிய புத்திரகாரகரான குருபகவான் தன் ஆட்சி வீடான தனுசு ராசியையும் அங்கு அமர்ந்திருக்கும் லக்னாதிபதியையும் பார்வை செய்கிறார். இதனால் லக்னாதிபதியான சுக்கிரபகவான் முழுமையான பலம் பெற்றிருக்கிறார் என்று கூறவேண்டும்.
தனம், வாக்கு, குடும்பம் மற்றும் பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதியான புதபகவான் பாக்கிய ஸ்தானத்தில் அமர்ந்து நவாம்சத்தில் கடகராசியை அடைகிறார். ரிஷப லக்னத்திற்கு யோககாரகர் என்று அழைக்கப்படுகிற ஒன்பது பத்தாம் வீடுகளுக்கு அதிபதியாகி, தர்மகர்மாதிபதி யோகத்தையும் தரும் ஒரே கிரகமான சனிபகவான் ஆறாம் வீட்டில் உச்சம் பெற்று அமர்ந்து நவாம்சத்தில் தன் நட்பு ராசியான மிதுன ராசியை அடைகிறார். ஸ்திர லக்னத்திற்கு ஒன்பதாம் வீடு பாதக வீடாகவும் அமைவதால் அந்த வீட்டுக்கு அதிபதியான சனிபகவான் ஆறாம் வீட்டில் அமர்வதால் அவருக்கு பாதகாதிபத்யமும் நீங்கிவிடுகிறது. இதனால் மூன்று திரிகோணாதிபதிகளும் முழுமையான பலத்துடன் இருக்கிறார்கள் என்று கூறவேண்டும். சுக ஸ்தானாதிபதியான சூரியபகவான் ஒன்பதாம் வீடான பாக்கிய ஸ்தானத்தில் சுயசாரத்தில் (உத்திராடம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் மீன ராசியில் குருபகவானுடன் இணைந்து இருக்கிறார். சப்தம அயன ஸ்தானாதிபதியான செவ்வாய்பகவான் பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் சந்திரபகவானுடன் இணைந்து சந்திரமங்கள யோகத்தைப் பெற்று நவாம்சத்தில் சிம்மராசியை அடைகிறார்.
ராகு- கேது பகவான்கள் முறையே ஆறு மற்றும் பன்னிரண்டாம் வீடுகளில் அமர்ந்திருக்கிறார்கள். அவர்கள் நவாம்சத்தில் தனுசு, மிதுன ராசிகளை அடைகிறார்கள். ஆறாம் வீட்டில் ராகுபகவான் அமர்ந்து சந்திரபகவான் குருபகவானுக்குக் கேந்திரம் பெற்று (கஜகேசரி யோகம்) அமர்ந்திருந்தால் முழுமையான அஷ்டலட்சுமி யோகம் உண்டாகும் என்று பலமுறை எழுதியிருக்கிறோம். குருபகவானின் ஐந்தாம் பார்வை சனி, ராகுபகவான்களின் மீது படிவதால் அவர்களின் சுபத்துவம் கூடிவிடும். ஏழாம் பார்வையாக லக்னாதிபதியைப் பார்வை செய்வதால் அவரும் பலம் பெறுகிறார். ஒன்பதாம் பார்வையால் தொழில் ஸ்தானமான கும்ப ராசியைப் பார்வை செய்கிறார்.
சரி, உங்கள் பேத்தியின் வியாதிக்கு வருவோம். அவருக்கு சதை வலுக்குறைந்து இருக்கிறது என்று எழுதியிருக்கிறீர்கள். மூளையிலிருந்து செல்லும் கட்டளைகள் நரம்பு மண்டலம் மூலமாக சதைகளுக்குச் சென்று அதை இயங்கச் செய்ய வேண்டும். இது சரியாக நடக்கவில்லை என்று எழுதியுள்ளீர்கள். குருபகவான் மூளையையும் சதையையும் புதபகவான் நரம்பு மண்டலத்தையும் கட்டுக்குள் வைத்துள்ளார்கள். கபாலத்தை சூரியபகவான் கைக்கொண்டுள்ளார் என்பதை அனைவரும் அறிந்ததே. இந்த மூன்று கிரகங்களும் சிறப்பாக சுபபலம் பெற்றிருக்கிறார்கள் என்பதை மறுப்பதற்கில்லை. சந்திரனை தனு (உடல் ) காரகர் என்று அழைப்பார்கள். ராசியில் சந்திரபகவானும் செவ்வாய்பகவானும் குடும்ப ஸ்தானத்தில் உச்ச சனி மற்றும் ராகு பகவான்களும் சுக ஸ்தானத்தில் தன பாக்கியாதிபதியான சுக்கிரபகவானும் பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் புத ஆதித்தியர்களும் இருக்கிறார்கள். ஆறாம் வீட்டிற்கு பாபகர்த்தாரி யோகம் உண்டாகியுள்ளதா என்று பார்த்தால், ஆறாம் வீட்டிற்கு பன்னிரண்டாம் வீடு ராசி வீடாகிறது. இரண்டாம் வீடு சுத்தமாக உள்ளது. அதனால் ஆறாம் வீட்டிற்குப் பாபகர்த்தாரி யோகமும் உண்டாகவில்லை என்று கூறவேண்டும். இதனால் நிரந்தரமான வியாதியுடன் ஆயுள் முழுவதும் பீடிக்கப்பட்டிருப்பதற்கு வாய்ப்பில்லை என்று கூற வேண்டும்.
லக்னத்திலிருந்து ஆறாம் வீடு, ராசியிலிருந்து ஆறாம் வீடு இரண்டும் சுபபலம் பெற்றுள்ளது என்றும் புரிந்து கொள்ள வேண்டும். லக்னம், ராசி இரண்டிலிருந்து கிரக நிலைகளைப் பார்த்தால் அதில் எது பலமாக உள்ளதோ அதை வைத்துக்கொண்டு பலன் கூறவேண்டுமென்பது சத்யாச்சாரியாரின் வாக்காகும். மேலும் கிரகங்களின் பலத்தை அளவிடும்போது ஸ்தான ஆதிபத்யத்தைவிட காரகாதிபத்யத்தையும் கணக்கில் கொள்ள வேண்டும் என்பதும் விதி. ஆறாம் வீட்டிற்கு ஸ்தான ஆதிபத்யம் பெற்ற கிரகம் சுக்கிரபகவானாகிறார். ஆரோக்கியத்திற்கு காரகராக ஜோதிடம் யாரைக் குறிக்கிறது என்றால் அவர் சூரியபகவானாவார் என்பதை கீழ்க்கண்ட சுலோகம் மூலம் அறியலாம்.
ஆரோக்யம் பாஸ்கராத் இச்சேத்
ஸ்ரியம் இச்சேத் ஹுதா சனாத்
ஞானம் ஈஸ்வராத் இச்சேத்
மோக்ஷம் இச்சேத் ஜனார்தனாத்
ஆரோக்கியத்தை பாஸ்கரன் என்கிற சூரியபகவானிடமும் "ஸ்ரியம்' என்றால் செல்வம், அதை யாகாதிகள் மூலமாகவும் (அதாவது அக்னி மூலம் செய்யும் யாகங்கள்) ஞானத்தை பரமேஸ்வரனிடமிருந்தும் மோட்சத்தை (வீடு பேறு) ஸ்ரீமந்நாராயணனிடமிருந்தும் (இச்சேத்) விரும்பிப் பெறவேண்டும். சிலப்பதிகாரத்திலும் ஞாயிறு போற்றுதும் திங்களைப் போற்றுதும் என்று வருவது இங்கே ஒப்புநோக்கத் தக்கதாகும்.
சூரியபகவான் பித்ரு காரகராகிறார். ஒருவருக்கு கர்ம வினையால் வியாதி உண்டாகுமோ என்று பார்க்கும்போது சூரியபகவான் இருக்கும் இடத்திலிருந்து கிரகங்கள் இருக்கும் இடத்தைப் பார்க்க வேண்டும்.
உங்கள் பேத்திக்கு சூரியபகவான் இருக்குமிடத்திலிருந்து ஐந்தாம் வீடு லக்னமாகிறது. ஒன்பதாம் வீட்டில் சந்திர செவ்வாய் பகவான்கள் உள்ளார்கள். லக்னத்தில் ஆறு, ஒன்பதாமதிபதியான புதபகவான் இருப்பதும் பலகீனம் என்று கூறமுடியாது. இங்கு ஜோதிடவிதிப்படி ஐந்தாம் வீட்டில் அசுபக் கிரகங்களான செவ்வாய், சனி, ராகு- கேது பகவான்கள் இருந்தால் இருதயக் கோளாறு, புத்திமாறாட்டம், புத்திரதோஷம் ஆகியவை உண்டாகும் என்று கூறப்பட்டுள்ளது. உங்கள் பேத்திக்கு 19.10.2016 உடன் சூரிய மகாதசை முடிந்து விடுகிறது. அதற்குப்பிறகு அவரின் ஆரோக்கியம் படிப்படியாக சீரடைந்துவிடும். அதனால் இது அவருக்கு நிரந்தர வியாதி அல்ல. பிரதி திங்கள்கிழமைகளில் பார்வதி பரமேஸ்வரர்களை வழிபட்டு வரவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.