காலத்ததால் அழியாத கற்கோயில்களை நம்முடைய முன்னோர்கள் ஏற்படுத்தி பூஜித்து வந்தனர். அப்படிப்பட்ட அற்புத சக்தி வாய்ந்த திருக்கோயில்களை சித்தபுருஷர்களும், மகான்களும் ஆராதித்து வந்துள்ளனர். இறைவனுக்கும் இறைவிக்கும் பெருமளவிற்கு சக்தியை ஏற்படுத்த ஹோமங்களும், ஜெபங்களும் மேற்கொண்டுள்ளனர்.
சுமார் 1000 ஆண்டுகளுக்கு முற்பட்ட திருக்கோயில் ஒன்று வேலூர் மாவட்டத்தில் மேலபுலம்புதூர் என்ற கிராமத்தில் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலில் அருள்மிகு ஸ்ரீ ஞானாம்பிகை உடனுறை ஸ்ரீ காளத்திநாதர் எழுந்தருளி பக்தர்களின் குறை நீக்கி பெருங்கருணை காட்டி பேரருள் நல்குகின்றனர்.
தெய்வப் பிரசனங்கள் கூறும் தகவல்களின்படி இத்திருக்கோயிலில் அருள்பாலிக்கும் காளத்தி நாதனை பல சித்தபுருஷர்களும், மகான்
களும் இன்றளவும் நாகரூபத்தில் பூஜித்து வருவதாக ஐதீகம். ஜாதகத்தில் நாகதோஷம் ஏற்பட்டிருப்பின் ஸ்ரீ காளத்திநாதரை வணங்கும் பட்சத்தில் அது விலகும் என்றும் நாகதோஷம் உள்ளவர்கள் காளஹஸ்தி தலத்தில் செய்வது போன்று பரிகார பூஜை செய்து கொண்டால் உத்தமமான பலனை ஏற்படுத்தும் என்றும் கூறுகின்றனர். இத்தல காளத்திநாதரை வழிபடுவோர்க்கு வாழ்வில் ஏற்படும் தடைகள், கல்வியில் ஏற்படும் தடைகள், காரியத் தடைகள் மற்றும் ஏனைய தடைகள் நீங்கி வாழ்வில் வளம் பெருகும்.
தீர்த்தம்: இத்திருக்கோயிலின் தீர்த்தம் நாகதீர்த்தம் ஆகும். அக்காலத்தில் இத்திருக்குளத்தில் பக்தர்கள் நீராடி பரிகார பூஜை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. தீர்த்தக் குளம் தற்போது மண் மேடாகி யிருக்கலாம் என்று கூறப்படுகின்றது. இத்தல மரம் நாகலிங்க மரமாகும்.
இத்திருக்கோயிலின் அமைப்பு: மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றிலும் சிறப்பு வாய்ந்த இத்திருக்கோயிலின் வாயிலில் நுழைந்ததும் பலிபீடத்தை அடுத்து நந்திபெருமான் சிறிய மண்டபத்தில் அழகுற வீற்றிருக்கிறார். மூலவருக்கு வெளிப்புறம் வலது பக்கம் துவார கணபதியும், இடதுபுறம் துவார பாலமுருகனும் வீற்றுள்ளனர். ஆலயம், மகாமண்டபம் அர்த்தமண்டபம், கருவறை என்ற அமைப்பில் அமைந்துள்ளது. தெற்கு நோக்கி அம்பிகை ஸ்ரீ ஞானாம்பிகை நின்ற கோலத்தில் அபய ஹஸ்தம் வரத முத்திரையுடன் கருணையோடு அருளுகின்றார்.
உட்பிரகார திருச்சுற்றில் நால்வர் சந்நிதியும், நாகலிங்கம், பைரவர் ஆகியோர் அமைந்துள்ளனர். தென்மேற்கில் நாகர் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. கோஷ்டங்களில் நர்த்தன கணபதி, தட்சணாமூர்த்தி, மஹாவிஷ்ணு, பிரம்மா, சிவதுர்கை வீற்றிருந்து அருளுகின்றனர்.
தெற்கு நோக்கி ஸ்ரீ சண்டிகேஸ்வரப் பெருமான் வீற்றிருந்து அருளுகிறார். வடகிழக்கில் நவகிரக சந்நிதி அமைந்துள்ளது. தற்போது இத்திருக்கோயிலில் திருப்பணி வேலைகள் நடைபெற்று வருகின்றன.
திருக்குடமுழுக்கு: இவ்வாலயத்தின் அஷ்டபந்தன மகாகும்பாபிஷேகம் டிசம்பர் -9 ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று காலை 7.30 மணிக்குமேல் 9.00 மணிக்குள் நடைபெறுகின்றது. முன்னதாக யாகசாலை பூஜைகள் டிசம்பர் -7 இல் துவங்குகிறது. பக்தர்கள் இந்த இறைபணியில் பங்குகொண்டு இறைவனின் திருவருளை பெறலாம். இது மகத்தான சிவபுண்ய கைங்கர்யமாகும்.
காஞ்சிபுரத்திலிருந்து பனப்பாக்கம் செல்லும் வழியில் மேலபுலம்புதூர் என்று கேட்டு இறங்கவும். வேலூரிலிருந்து தடம் எண்: 486 மற்றும் ஆற்காட்டிலிருந்து தடம் எண்: 23 பனப்பாக்கம் செல்கிறது.
தொடர்புக்கு : 80127 81232 / 93828 05559.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.