வளமான வாழ்வருளும் வனதுர்கை!

காலத்தால் அழியாத, சுமார் ஆயிரம் வருடங்களுக்கும் மேலாக இன்றும் அருள் அலைகள் அளவு கடந்து வெளிப்படும் அன்னை
வளமான வாழ்வருளும் வனதுர்கை!
Published on
Updated on
2 min read

காலத்தால் அழியாத, சுமார் ஆயிரம் வருடங்களுக்கும் மேலாக இன்றும் அருள் அலைகள் அளவு கடந்து வெளிப்படும் அன்னை ஸ்ரீ துர்க்காதேவிக்கென்றே அமைக்கப்பட்ட ஆலயங்கள் நம் பாரத தேசம் முழுவதும் நிறைந்துள்ளன. அவ்வகையில் சாந்நித்யம் மிகுந்த வனதுர்க்கை தேவிக்கு ஒரு தனி சந்நிதி அமைந்துள்ளது.  
சென்னை மாநகரில் கோயம்பேட்டில் கோயில் கொண்டுள்ளாள் வனதுர்க்கை! இவளே ஒன்பது துர்க்கைகளின் ஸ்வரூபமாகத் திகழ்கிறாள். "வன' என்பதை மாற்றினால் "நவ' என்றாகும். "நவ' என்றால் "ஒன்பது. ஆக, இந்த துர்க்கா நவதுர்க்கா ரூபினி என்று தெரிந்து கொள்ளலாம். இவளைக் குறித்து ஏற்பட்டுள்ள வனதுர்க்கா மந்திரம் எல்லா மந்திரங்களையும் தனக்குள் இழுத்து மற்ற மந்திரங்களின் வலிமையையும், வல்லமையையும் அடங்கும் ஆற்றல் கொண்டது. சங்ககாலத்தில் கொற்றவை (துர்க்கை) வழிபாடு மிகச் சிறந்த நிலையில் இருந்ததாக தமிழ் இலக்கியங்கள் பறை சாற்றும்.
ஒரு காலத்தில் கோயம்பேடு பகுதி வனாந்திர காடாக இருந்ததாம். புராண வரலாறு கூறும் தகவல்படி சீதாப்பிராட்டி ராமர் பட்டாபிஷேகம் முடிந்தபிறகு விதிவசத்தால் இரண்டாம் தடவை வனவாசம் செய்ய நேர்ந்தபோது இங்குதான் தங்க நேர்ந்தது அப்போது, ஸ்ரீராமரின் புத்திரர்களான லவன் லிங்க பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்த இடமே தற்போது லவபுரீசுவரர் திருக்கோயில் என்றும்; குசனால் உருவாக்கப்பட்ட ஆலயம் குறுங்காலீஸ்வரர் கோயில் என்றும் தற்போது வழிபடப்படுகின்றது. மயிலாடுதுறை அருகில் கதிராமங்கலத்தில் உள்ள வனதுர்க்கை அருளால் கம்பர் ராமாயணத்தை இயற்றினார் என்பர். அதேபோன்று,  வால்மீகி, ராமாயணத்தை உருவாக்கியது கோயம்பேடு வனதுர்க்கை அருளால் என்றும் செவிவழிச் செய்தியாக கூறப்படுகிறது. சீதை வனவாசத்தின்போதுதான் வால்மீகி மகரிஷி அவளுக்கு பாதுகாப்பாக இருந்து லவ குசர்களுக்கு ஆசானாகவும் திகழ்ந்தார். அவ்வமயம், அவர் இயற்றியதே வால்மீகி ராமாயணம் என்று சொல்லப்படுகின்றது.
அருள்மிகு லவபுரீசுவரர் திருக்கோயிலில் கோயில் கொண்டிருக்கும் ஈசனின் திருநாமம், லவபுரீசுவரர். அம்பிகை அழகம்மை (செüந்திரவல்லி). இறைவன் சந்நிதிக்கு எதிரே தெய்வீகத் தன்மை வாய்ந்த வன்னிமரத்தின் எதிரே அமைந்துள்ளது வனதுர்க்கையம்மன் சந்நிதி. நின்றகோலத்தில் மேற்கரங்களில் சங்கு சக்கரம் தாங்கி கீழிரு கரங்களில் அபயவரத முத்திரைத்தாங்கி சாந்தஸ்வரூபமாக தன்னை வழிபடுவோருக்கு அருள்வழங்கும் அற்புதக் கோலத்தைத் தரிசிக்கலாம். இங்கு துர்க்கையின் காலடியில் மகிடன் தலை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இரு காதுகளிலும் கல்லினால் செய்யப்பட்ட பன ஓலை காதணி அணிந்திருக்கின்றாள். இன்றளவும் இவ்வாலயத்தில் காலை சூரிய உதயத்தின் போது சூரிய ஒளி சிவபெருமான் மீது படுவதைக் காணலாம். மேலும் மாலை வேளையில் சூரிய ஒளி வனதுர்க்கையின் பாதத்திலிருந்து துவங்கி முகமண்டலம் வரை பரவுவது குறிப்பிடத்தக்கது.
இந்த துர்க்கை சந்நிதியில் ஒவ்வொரு செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமை, பரணி, தேய்பிறை, வளர்பிறை, அஷ்டமி திதிகளில், பெüர்ணமி நாள்களில் சிறப்பு பூஜை வழிபாடுகள் நடைபெறுகின்றது. அச்சமயங்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். மேலும் கார்த்திகை மாதத்தில் வனதுர்க்கை வழிபாடு மிகவும் சிறப்பானது என்றும், ஒவ்வொரு நாள்களுக்கும் ஒவ்வொரு பிரத்யேக பலன்கள் கிடைக்கப்பெறலாம் என்றும் புராணங்களில் சொல்லப்பட்டுள்ளது.
லவபுரீசுவரர் ஆலயம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் ரோகிணி தியேட்டர் எதிரில் மெட்ரோ ரயில் நிலையம் அருகில் உள்ளது.  
தொடர்பிற்கு : 044-24796237.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com