திருக்கார்த்திகை

நாள்தோறும் உழைத்துக் களைத்த மக்கள் தங்கள் உடலுக்கு ஓய்வு கொடுத்து இன்புற்று மகிழ்ந்திருக்க, ஒன்று கூடி விழாக்களை நடத்துவர்.
திருக்கார்த்திகை
Updated on
3 min read

திருக்கார்த்திகை குறித்து தமிழறிஞர்கள் எழுதிய கட்டுரைகளிலிருந்து சில பகுதிகள்... 
தமிழ் இலக்கியத்தில் கார்த்திகை தீபம்!
நாள்தோறும் உழைத்துக் களைத்த மக்கள் தங்கள் உடலுக்கு ஓய்வு கொடுத்து இன்புற்று மகிழ்ந்திருக்க, ஒன்று கூடி விழாக்களை நடத்துவர். அவற்றில் சமயச் சார்பற்ற, சமயச் சார்புள்ள என இருவகை விழாக்கள் உண்டு. சமய விழாக்களில் கார்த்திகை தீபமும் ஒன்று.
கார்த்திகை தீப விழாவை பழந்தமிழர் சங்க காலம் தொட்டே வழிபட்டு வந்தனர். இவ்வுண்மையினை... "தொல் கார்த்திகை நாள்' என்னும் திருஞானசம்பந்தரது கூற்று மெய்ப்பிக்கின்றது. தமிழ் இலக்கியங்களில் கார்த்திகை தீப விழாவினைப் பற்றிய செய்திகள் சில இடங்களில் காணப்படுகின்றன. சங்க இலக்கியத்தில் "அழல்', "எரி' என்னும் சொற்கள் கார்த்திகையை குறிப்பதாக உள்ளது. சிலப்பதிகாரம் கார்த்திகையை "அழல்' என்று கூறுகின்றது. பௌர்ணமி நாளில் கார்த்திகை நட்சத்திரம் கூடும் நாளில் தெருக்களில் விளக்குகளை ஏற்றி வைத்து, வீட்டின் வாசற்படிகளில் மாலைகளைத் தொங்கவிட்டு கார்த்திகை விழாவை கொண்டாடியதை அகநானூறு செய்யுளில் காணலாம்.
"நலமிகு கார்த்திகை நாட்டவர் இட்ட 
தலைநாள் விளக்கின் தகையுடையவாகிப் 
புலமெல்லாம் பூத்தன தோன்றி சிலமொழி
தூதொடு வந்த மழை' 
என்னும் செய்யுள் அடிகள் பலவற்றில் கார்த்திகை தீபவிழாவைப் பற்றிய செய்திகள் அறியமுடிகிறது. இச்செய்யுளில் "தலை நாள் விளக்கின்' என்பதிலிருந்து இவ்விழா பலநாள் கொண்டாடப்படும் விழா எனத் தெளியலாம். இறுதிநாளில் சிறப்பாகக் கொண்டாடப்படும் விழாவே கார்த்திகை தீபவிழா எனக்கொள்ளலாம். அதுவே மகா கார்த்திகை எனவும் வழங்கப்படும். இதனையே சீவக சிந்தாமணியும், 
"குன்றிற் கார்த்திகை விளக்கிட்டன்ன 
கடிகமழ் குவளை பைந்தார்' 
என கூறுகிறது. நீதி இலக்கியங்களில் ஒன்றான பழமொழி, குன்றின்மேலிட்ட விளக்கு' என்று கூறுவதும் இக்கார்த்திகை தீப விழாவையே. 
திருமால் கார்த்திகை மாதத்தில் கண் விழித்து எழுவதாக வைணவர்கள் குறிப்பர். இக்கார்த்திகை தீபவிழா கார்த்திகை மாதம் ஐந்து நாள்கள் நடக்கும் என்பர். இறுதிநாள் மகா கார்த்திகை அன்று வைணவர்கள் தானம் வழங்கியும் புனித பணி செய்தும் இறைவனை வழிபடுவர். இதனை நற்றிணை போன்ற சங்க இலக்கியங்களில் காணலாம். திருமால் பிரம்மயாகத்தை அறிந்து தானே தீப்பிழம்பான விழாவே கார்த்திகை தீபவிழா என்பர். வைணவர்கள் காஞ்சியில் திருமாலை "விளக்கொளி பெருமாள்' என்றே போற்றுவர்.
- எஸ். பவானி
தீபத்திருவிழா!
சிவபெருமான் அசுரர்களையும் அவர்களின் உறைவிடமான திரிபுரங்களையும் அழித்து தேவர்களை காப்பாற்றி அருள்புரிந்தார். இந்த கார்த்திகை திருநாளில்தான் திரிபுர சம்காரம் நடந்தது. எனவே இந்நாள் சிவனுக்கு விருப்பமான நாளாகக் கொண்டாடப்படுகிறது. விண்ணுக்கும் மண்ணுக்கும் நெருப்புப் பிழம்பாக சிவபெருமான் உயர்ந்தோங்கி நின்ற திருத்தலம் திருவண்ணாமலை. நிகழ்வு நடைபெற்ற மாதம் கார்த்திகை, திதி பௌர்ணமி, நட்சத்திரம் கிருத்திகை. அந்தப் புனிதமான நாளை சிறப்பிக்கும் விதமாக வருடந்தோறும் மலைமீது மகர தீபம் ஏற்றப்படுகிறது. இந்த வருடம் 12.12.16 அன்று திருவண்ணாமலை சென்று மகர தீபம் காணுங்கள். 
சிவபெருமானின் சிவசக்தி வடிவமாகவே தீபம் ஏற்றப்படுகிறது. தீய சக்திகளை அழிக்கும் தீப ஜோதி தரிசனத்தைக் காணுங்கள். நினைத்தாலே முக்தி தரும் தலம் திருவண்ணாமலை. சைவத்தின் தலைநகரான திருவண்ணாமலை, முக்திபுரி, சோணாசலம், அருணாசலம் என்று பலவாறு அழைக்கப்படுகின்றது. இந்திரியங்களினால் உண்டாகும் விருப்பு, மயக்கம், அஞ்ஞானம் போன்றவை எரிந்து எப்போதும் சிவானந்த ஜோதியே சிறந்தது என்ற தத்துவத்தை உணர்த்துவதே கார்த்திகை தீபவிழா. அடிமுடி காணாத அண்ணாமலையானே அனைத்திலும் உயர்ந்தவன் என்பதை நினைவூட்டுவதே அண்ணாமலை தீபம்.
- புலவர் க.சுகுமாறன் 
காசினி போற்றும் கார்த்திகை விளக்கு!
கார்த்திகை விழா  தொன்று தொட்டு தமிழகத்தில் நடந்து வந்ததற்கான குறிப்புகள் இலக்கியங்களில் காணப்படுகின்றன. நினைத்தாலே முக்தி தரும் புராணச் சிறப்புடன் கூடிய திருவண்ணாமலையில் தீபம் ஏற்றுவதன் சிறப்பைக் கற்பனைக் களஞ்சியம் நல்லாற்றூர் சிவப்பிரகாசர் பலவாறு பாடியுள்ளார். 
அன்றே, அதை ஓர் ஆன்மிகச் சுற்றுலாத் தலமாக அறிமுகப்படுத்திய பெருமை, சிவப்பிரகாசர் அத்தலத்தைப் பற்றி எழுதிய "சோனாசைலமாலை' என்னும் நூலுக்கே உண்டு.  
இன்று, பௌர்ணமி தோறும் மலைவலம் சிறப்புள்ளது போல கி.பி. 17 ஆம் நூற்றாண்டிலும் உள்ளதை அந்நூல் கூறுகிறது. நிலவானது முழு
நிலவாய் மலையின் உச்சியில் தோன்றும்போது ஏற்றப்படும் தீபத்தைக் கற்பனை செய்யும் சிவப்பிரகாசர், தாமரை மலரை நெருங்கும் அன்னம்போல் உள்ளதாகக் கற்பனை செய்யும்போது செந்நிறமான தீப விளக்கு தாமரை போலவும் வெண்ணிற முழுநிலவு வெண்ணிற அன்னம் போலவும் உள்ளதாம். மேலும்,
கார்த்திகை விளக்கு மணிமுடி சுமந்து 
கண்டவர் அகத்து இருள் அனைத்தும் 
சாய்த்துநின்று எழுந்து விளங்குறும் சோண
சைலனே கயிலை நாயகனே..  என்ற பாடலில் உலக விளக்குகள் எல்லாம் புற இருளை மட்டுமே நீக்க, இக்கார்த்திகை விளக்கோ புறத்திருளோடு அகத்திருளையும் அதாவது அஞ்ஞான இருளையும் நீக்க வல்லதாய் இருக்கும் அற்புதத்தைச் சிவப்பிரகாசர் கூறுகிறார்.
இந்தக் கார்த்திகை விளக்கு ஏற்றப்பெறும் திருவண்ணாமலையை மனிதர்கள் சுற்றி வரக் கால்களை அவர்கள் பெற்றுள்ளதுபோல் நமக்குக் கால்கள் இல்லையே என்று மேலுலகத்துத் தேவர்கள் வருத்தமும் பொறாமையும் அடைவதாகச் சிவப்பிரகாசர் திருவண்ணாமலையின் மலை வழிபாட்டைச் சிறப்பிக்கிறார்.
வில்லிபுத்தூரார் பாடிய பாரதத்தில் அர்ச்சுனன் தலயாத்திரை வந்தபோது,
கற்றார் தொழும் அருணாசலம் 
அன்போடு கைதொழுதான் 
எனப் பாடப்பட்டுள்ளது. குக
நமச்சிவாயரும் குருநமச்சிவாயரும் வாழ்ந்த மலை அண்ணாமலை, குருநமச்சிவாயர் பாடிய அண்ணாமலை வெண்பாவில், ""ஞானத் தயோதனரை வா என்று அழைக்குமலை அண்ணாமலை'' என்றார்.
ஆன்மிக உலகில் கலங்கரை விளக்குப்போல் உள்ள கார்த்திகை விளக்கு காட்டும் ஒளி நோக்கிச் சென்று வாழ்க்கை என்னும் கப்பலைத் திகைப்பு நீங்க தவஒழுக்கக் கரையில் அணைத்து வாழ்வோமாக!
- தமிழாகரர் தெ. முருகசாமி
சைவமும் வைணவமும் கலந்த கார்த்திகை!
"கர்ணனுக்குப்பின் கொடையுமில்லை. கார்த்திகைக்குப்பின் மழையுமில்லை' என்பது முதுமொழி. கார்த்திகை என்றாலே அடைமழை என்று பொருள். இம்மாதத்தில் எப்போதும் வானில் கருமேகம் சூழ்ந்திருக்கும். இந்த புற இருளை நீக்க, வீடுகளில் தீபம் ஏற்றி வழிபடுவர். சிவபெருமானின் பஞ்சபூதத் தலங்களுள் ஒன்று தேயு தலமான திருஅண்ணாமலை. அண்ணாமலையை நினைத்தாலே முக்தி கிடைக்கும். இத்தல இறைவனை அருணாசலம், சோணாசலம் என்பர். அருண, சோண என்பதற்கு "சிவப்பு' என்று பொருள். ஜோதியும் சிவப்பாய் எரிவதாகும்.
கார்த்திகை மாதம் சைவ, வைணவ ஒற்றுமையை பாராட்டும் மாதமாகும். முருகப் பெருமானும் சுவாமி ஐயப்பனும் சிவன் திருமாலோடு தொடர்புடையவர்கள். முருகன் பெருமையுரைக்கும் திருக்கார்த்திகையும் ஐயப்பன் விரதமாலை அணியும் மாதமும் இம்மாதத்தில் அமைந்துள்ளதே தனிச்சிறப்பாகும்.
கார்த்திகை மாதம் நீர்நிலைகளில் தானே நீராக மாறி திருமால் வாசம் செய்வதாக ஐதீகம். மார்கழியைப் போன்று மாதவனுக்கு உகந்த இன்னொரு மாதம் கார்த்திகை. புனித நீராடல், புண்ணியம் சேர தானம் அளித்தல், இறைநாமம் பாராயணம் செய்தல் என அனைத்திற்கும் கார்த்திகை உகந்தது. இம்மாதத்தில் செய்யும் தானம், தவம், ஜபம் போன்றன ஒன்றுக்குப் பலவாகப் பெருகும் என்கிறது கந்தபுராணம். 
மிகப் பழங்காலத்திலேயே கார்த்திகை விளக்குகள் இருந்துள்ளன என்பதை அகழ்வாய்வுகள் தெரிவிக்கின்றன. தொல்காப்பியம் "வேலின் நோக்கிய விளக்குநிலை' என்று புறத்திணையில் குறிப்பிடுகின்றது. இதற்கு உரையாசிரியர் நச்சினார்க்கினியர் ""இது கார்த்திகை மாதம் கார்த்திகை நாளில் ஏற்றிய விளக்கும் கீழும் மேலும் வலமும் இடமும் திருபரந்து சுடர் ஓங்கிக் கொழுந்துவிட்டு எழுந்தன என்று அறிவோர் ஆக்கம் கூறப்படுவதாகும்'' என்பர்.
கார்த்திகை மாதம் மேகம் திரளாகக் காணப்படும். அடைமழையும் சேர்ந்து மண்ணும் விண்ணும் மாலைப் பொழுதில் இருண்மையாக இருக்கும். நிலவு காணா மக்கள் கதிரவன் ஒளியைக் காண விரும்பி விளக்கிட்டு மகிழும் தன்மையே திருக்கார்த்திகையாகும். கார்த்திகை தீபத்தை "அழல்குட்டம்' எனப் புறநானூறும் "அழல்சேர் குட்டத்து' எனச்சிலம்பும் உரைக்கின்றது. "நலமிகு கார்த்திகை நாட்டவர் இட்ட தலைநாள் விளக்கில்' என கார்நாற்பதும்; "கார்த்திகை சாற்றில் கழி விளக்குப் போன்றனவே' என களவழி நாற்பதும் உரைக்கின்றன. நாள்தோறும் இல்லத்தில் விளக்கு ஏற்றி நெல்லும் மலரும் தூவி தெய்வத்தை வழிபட்டமையை நெடுநல்வாடை கூறுகின்றது. ஞானசம்பந்தர் பூம்பாவையை உயிரூட்டிய பாடலின்போது திருக்கார்த்திகையை பாடியுள்ளார்.  
திருவண்ணாமலை போன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் மருந்துவாழ்மலை, கடுக்கரை மலைகளில் தீபம் ஏற்றப்படுவது உண்டு. இந் நாளில் வீடுகளில் நல்ல மணம் வீசும் திரளி இலையில் கொழுக்கட்டை, இலை பணியாரம், சுண்டல் போன்றவை செய்து, தீபங்கள் ஏற்றி வைத்து இறைவனுக்குப் படைப்பர்.
- முனைவர் தா. நீலகண்டபிள்ளை 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com