

மதுரை மாநகரை குணபூஷண பாண்டிய மன்னன் ஆண்டு கொண்டிருந்த காலம். பாண்டிய நாடு முழுமையையும் பஞ்சம் பிடித்தாட்டியது. மழையும் பொய்த்து வளமையும் சுருங்கி நாட்டு மக்கள் பசியாலும் வறுமையாலும் வாடி வதங்கினர்.
அரசன் பரிதவித்தான். ஆலவாய் அண்ணல் சொக்கேசர் திருக்கோயில் சென்று முறையிட்டான். ""மக்கள் வளம் குன்றினால், மன்னன் காப்பாற்ற வேண்டியது கடமையல்லவா? ஐயனே, நான் என்ன செய்வேன்?'' என்று அலறினான்.
நாட்டு வயல்கள் விளைச்சலின்றி காய்ந்து கிடந்தன. மக்களின் பிணி போக்கும் மகேசன் உடனருள் புரிந்தார்.
திருக்கோயிலில், மன்னன் முறையிட்டு அழுது கொண்டிருக்க, அவன் முன் ஒரு பொற்கிழி தோன்றியது.
மன்னன் வியப்புடன் பார்த்தான்.
""இந்தக் கிழி, உலவாக் கிழி. இதனிலிருந்து பொன்னை எடுக்க எடுக்க வந்துகொண்டே இருக்கும். இதனின்று பொன்னெடுத்து, வேறு பிரதேசங்களுக்கு அனுப்பிப் பண்டங்கள் பெற்று மக்களைக் காப்பாற்று'' என்றார் கடவுள்.
உலவாக்கிழி ஒரு உடனடி நிவாரணம். மழை பெய்து பின் விளைச்சல் வர வேண்டுமானால், சில மாதங்களாவது ஆகும். எனவே, அப்போதைக்கு அற்புதப் பொற்கிழி தந்து, பின்னர் மழையும் பெய்ய வைத்தார் பரமேஸ்வரன்.
உலவாக்கிழி பெற்றதை உணர்த்தும்
திருவிளையாடற் புராணப் பாடல்
அடுத்து வணங்கி வலஞ்செய்திட் டம்பொற் கிழியைப் பொதிநீக்கி
எடுத்து முத்தீ வினைஞர்க்கும் யாகங் களுக்கும் யாவர்க்கும்
மடுத்து நாளும் வரையாது வழங்க வழங்க அடியார்க்குக்
கொடுக்கக் குறையா வீட்டின்ப மாயிற் றையர் கொடுத்தகிழி.
இதுபோன்றே, பஞ்சத்தால் வளம் சுருங்கியபோது, திருவீழிமிழலையில் ஞானசம்பந்தருக்கும் நாவுக்கரசருக்கும் படிக்காசு தந்து பஞ்சம் போக்கினார் பரம்பொருள்.
சுமார் 250 ஆண்டுகளுக்கு முன் எட்டையபுரத்தில் மழையின்றித் தவித்தபோது அமிர்தவர்ஷிணி ராகத்தில் கீர்த்தனம் பாடி மழை பெய்ய வைத்தார் சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசாமி தீக்ஷிதர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.