தாழ்த்தும் தற்பெருமை

தற்பெருமை அற்பமானது; பொற்புடையது அல்ல. எனவே தற்பெருமையை தவிர்க்க வேண்டும்.
Updated on
2 min read

தற்பெருமை அற்பமானது; பொற்புடையது அல்ல. எனவே தற்பெருமையை தவிர்க்க வேண்டும். தற்பெருமையை தவிர்ப்பதால் அற்ப செயல்கள் நம்மை அண்டாது; வேண்டாத செலவுகளும் ஏற்படாது; விரையத்திற்கு இரையாகாமல் இருக்கலாம்; வீணான விவகாரங்களிலிருந்தும் விலகிவிடலாம்; வாழ்வும் இலகுவாய் இலங்கும்.

தற்பெருமையால் அழிந்தவர்களின் இழிந்த வரலாற்றை இடித்துறைக்கிறது இறைமறை குர்ஆன். ஆதி மனிதன் ஆதம் நபியினும் உயர்ந்த படைப்பு என்று தன்னைத் தானே பெருமை படுத்திக்கொண்டு அல்லாஹ் அறிவித்தபடி ஆதம் நபிக்குப் பணிய மறுத்த இப்லீஸ் இறைவனின் நிரந்தர சாபத்திற்கு ஆளானான்.

எகிப்தை ஆண்ட அரசன் பிர் அவ்ன் ஆளும் அரசனும் அவனே அகிலத்தைக் காக்கும் காவலனும் அவனே என்று தற்பெருமையுடன் தருக்கி திரிந்ததால் நைல் நதியில் மூழ்கடிக்கப்பட்டான். பெருஞ்செல்வத்தால் பெருமை கொண்டு பேராபத்தைத் தேடி கொண்டவன் காரூன். அவனின் அரண்மனையையும் அத்தனை செல்வங்களையும் மொத்தமாய் விழுங்கியது பூமி.

இனிய நபி (ஸல்) அவர்கள் போதித்த இஸ்லாத்தை ஏற்றவர்களைத் தூற்றி துன்புறுத்தி கொன்று தற்பெருமை செருக்கில் போரிட வந்த அபுஜஹில் முதலிய குறைஷிகள் பத்ரில் பரிதாபமாக மடிந்தனர்.

""தன் கால் சட்டை தரையில் தோய தற்பெருமையுடன் செல்பவன் மறுமையில் அல்லாஹ்வின் அருள் பார்வையில் படமாட்டான்'' என்று பண்பு நபி (ஸல்) அவர்கள் பகர்ந்ததைப் பகிர்ந்து கொள்கிறார் இப்னு உமர் (ரலி) நூல் -புகாரி, முஸ்லிம், முஅத்தா, திர்மிதீ, நஸஈ.

""தொழும்பொழுது கால் சட்டை கணுக்காலுக்குக் கீழ் தொங்குவது கூடாது'' என்று ஏந்தல் நபி (ஸல்) அவர்கள் எடுத்துரைத்ததைத் தொடுத்து சொல்கிறார் இப்னு மஸ்வூத் (ரலி) நூல்- அபூதாவூத்.

""உன் உடையில் நீ நடுத்தரமாக இருப்பாயாக! உன் குரலைத் தாழ்த்தி கொள்'' என்று கூறுகிறது குர்ஆனின் 31-19 ஆவது வசனம்.

மறுமையை நம்பாது மறுப்பவர்கள் ஏக இறைவனை ஏற்காது பெருமை பேசி பேரழிவைத் தேடுவதைத் தெளிவாக விளக்குகிறது ஒளியான குர்ஆனின் 16 -22 ஆவது வசனம், ""உங்களுடைய நாயன் ஒரேயொரு நாயன்தான். ஆகவே எவர் மறுமையை மறுக்கிறாரோ அவரின் இதயங்கள் (ஏகத்துவத்தை) நிராகரிக்கின்றன. மேலும் அவர்கள் பெருமை உடையவர்கள்''

அடுத்த 16- 23 ஆவது வசனம் அல்லாஹ் பெருமை உடையவர்களை நேசிக்க மாட்டான் என்று கூறுவதால் ஏக இறை கொள்கையை ஏற்காது பெருமையுடன் வாழ்பவர்கள் இறைவனின் நேசத்தை இழந்து இவ்வுலகில் துன்புறுவதோடு மறுமையிலும் மாறா துயரில் மூழ்குவர்.

தற்பெருமை கடலின் ஆழத்தில் உள்ள இருளுக்கு ஒப்பானது என்று தப்பான தற்பெருமையின் இனிநிலையை இடித்துரைக்கிறது. படிப்பினை தரும் குர்ஆனின் 24-40 ஆவது வசனம். தற்பெருமை அறியாமையின் ஆணவத்தால் உருவாவது. எல்லா அறியாமையும் தற்பெருமை ஆகாது. ஆனால் எல்லா தற்பெருமையும் அறியாமையே.

""பொறுமையாளர்களுடன் இறைவன் இருக்கிறான். பெருமை உடையோருடன் சாத்தான் இருக்கிறான்'' என்று இமாம் கஸ்ஸôலி (ரஹ்) கூறுகிறார்.

தற்பெருமை வீணான வம்பு சண்டைகளுக்கு வித்தாகும் ""வம்பு சண்டையிடுவோர் அலலாஹ்வின் கோபத்திற்கு ஆளாகின்றனர்'' என்று அன்னை ஆயிஷா (ரலி) அறிவிப்பது புகாரியில் பதிவாகியுள்ளது.

தாழ்த்தும் தற்பெருமையை தவிர்த்து தன்னிலை உணர்ந்து மென்மையாய் நடந்து நந்நிலை பெற்று நானிலத்தில் நல்வாழ்வு வாழ்வோம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com