
சுமார் 1200 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகம் முழுவதும் மூலிகைகளால் உருவாக்கப்பட்ட தெய்வச்சிலைகள் வழிபாடு வழக்கத்தில் இருந்து வந்தது. தற்போது பல வருடங்களுக்குப்பிறகு காஞ்சி மாவட்டம், திருப்போரூர் வட்டத்தில் செம்பாக்கம் கிராமத்தில் (ஸ்ரீ செம்புகேஸ்வரர் ஆலயம் அருகில்) ஸ்ரீ பீடம் ஸ்ரீ பாலா சமஸ்தானம் ஸ்ரீ சக்ரராஜ பூர்ண மகாமேரு திருச்சந்நிதானத்தில் 9 அடி உயரத்தில் உருவாகக்கப்பட்டுள்ளது. ஒளஷத லலிதா மகா திரிபுரசுந்தரி அம்மன் சிலை.
இந்த திருமேனி பல மூலிகைகள், மரப்பிசின், மரப்பட்டைகள் மற்றும் வேர்களிலிருந்து தயாரிக்கப்பட்ட கஷாயங்கள் கலவை கொண்டும் எண்ணற்ற பாணலிங்கங்கள், வலம்புரி சங்குகள், நவரத்தினங்கள், நமது உடம்பிலுள்ள நாடி நரம்புகளை குறிக்கும் விதமாக வெள்ளிக்கம்பிகள் முதலியன உச்சந்தலை முதல் பாதம் வரை பதிக்கப்பட்டும் வளர்பிறை காலங்களில் மருந்து மாற்றப்பட்டு சுமார் ஏழரை ஆண்டுகள் உழைப்பில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்பது போற்றுதலுக்கு மட்டுமில்லாமல் வியப்புக்கும் உரிய தகவலாகும். தாந்ரீக முறையில் இந்த அம்பிகை யந்திரம், தந்திரம், மந்திரம், அஸ்திரம், ஸஸ்த்திரம் என்ற முறையில் அமையப் பெற்றவளாவாள்.
நின்ற கோலத்தில் "அவசர' ஸ்திதி ஸ்தானத்தில் அங்குசம், பாசம் இரண்டும் பிரயோகத்தில் இருக்க, கீழ்க்கையில் மலர் (புஷ்பபாணம்) மற்றும் கரும்பும் ஏந்தி அம்பிகை மகா சௌந்தர்ய ரூபத்துடன் அருள்பாலிக்கின்றாள். அம்பிக்கைக்கு முதல் மாடியில் சந்நிதி பிரதிஷ்டையாகியுள்ளது. கீழ்த்தளத்தில் ஸ்ரீ சக்ரபிரதிஷ்டையுடன் ஸ்ரீ பாலாதிரிபுர சுந்தரியை தரிசிக்கலாம்.
மூலிகை அம்மனுக்கு அபிஷேகம் கிடையாது. மூலிகை மற்றும் அஷ்டகந்தத்தால் உருவாக்கப்பட்ட லேபனம் (தைலம்) குறிப்பிட்ட சில காலங்களில் பூசப்படும் என்றும் மாதம் ஒருமுறை மட்டும் பிரத்யேகமாக தறியில் நெய்யப்பட்ட 45 முழுபுடவை அணிவிக்கப்படும் என்று பீடத்தின் ஸ்தாபகர் தெரிவிக்கின்றார். தினசரி பாதபூஜை உண்டு.
நோயற்ற வாழ்வு பெறுவதே இந்த அம்பிகையின் தரிசன பலனாகக் கூறப்படுகிறது. சிதம்பரத்தை நடராஜ சபை என்றும் ஸ்ரீரங்கத்தை அரங்கம் என்றும் அழைப்பதுபோல் இங்கு அம்பிகை கோயில் கொண்டிருக்கும் ஆலயம் ஸ்ரீ சக்ரசபை என்று போற்றப்படுகிறது. ஏனென்றால் இங்கு அம்பிகை தனது பரிவாரங்களுடன் தர்பாரில் கோலோச்சி பரிபாலனம் செய்வதாக ஐதீகம்.
ஆலய மகாகும்பாபிஷேகம் பல்வேறு மடாதிபதிகள் ஆசியுடன் அவர்கள் முன்னிலையில் பிப்ரவரி 12 ஆம் தேதி காலை 8.00 மணி அளவில் நடைபெறுகின்றது.
திருப்போரூரிலிருந்து செங்கல்பட்டு செல்லும் சாலையில் அமைந்துள்ளது செம்பாக்கம்.
தொடர்புக்கு: 94441 69809/ 94449 39147.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.