குருபூர்ணிமா!

ஆடி மாதத்தில் வரும் பௌர்ணமியை "ஆஷாடபௌர்ணிமி' என்றும் "குருபூர்ணிமா' என்றும்
Updated on
2 min read

ஆடி மாதத்தில் வரும் பௌர்ணமியை "ஆஷாடபௌர்ணிமி' என்றும் "குருபூர்ணிமா' என்றும் "வியாசபௌர்ணமி' என்றும் போற்றுவர். ஆடிப்பௌர்ணமியை குருபூர்ணிமா என்று கொண்டாடப்படுவதற்கு காரணம் "மாமேதை வியாசர்'தான் என்று புராணம் கூறுகிறது. சிதறிக்கிடந்த வேதங்களைச் சேகரித்து அதனை ஆராய்ந்து தனித்தனியாகப் பிரித்து, அதன் சீடர்களுக்கு அளித்து உலக மக்களுக்கு அதன் நன்மைகளை எடுத்துரைக்கச் செய்ததால் இவரை "வேத வியாசர்' என்று போற்றுவர்.

வியாசர் என்பது ஒரு பதவியை அல்லது செயலைப் பொருத்து அழைக்கப்படும் பெயர். வியாசர் என்ற வார்த்தைக்கு தொகுப்பு என்று பொருள் உண்டு. வேதங்களைத் தொகுத்ததினால் அவர் வேதவியாசர் என்று அழைக்கப்பட்டார். மாபெரும் காவியமான மகாபாரதத்தை எப்படி எழுத வேண்டும்? அதன் உண்மைத் தன்மை என்ன என்பதை சிந்தித்து விநாயகரின் ஆசியுடன் வியாசர் சொல்லச்சொல்ல விநாயகர் எழுத்தாணியால் பொறித்தார்.

மீனவ குடும்பத்தில் வளர்ப்பு மகளாக இருந்த சத்தியவதி பரிசல் ஓட்டிச் செல்கையில், எதிர்

காலத்தை அறியும் ஆற்றல் பெற்ற பராசரர் சத்தியவதியைப் பார்த்து, ""இந்த நேரம் ஓர் அருமையான பொன்னான காலம். இந்த வேளையில் ஒரு பெண்ணின் கர்ப்பப்பையில் தோன்றுபவன் ஒரு மகாபுருஷனாகத் திகழ்வான். அவனை இந்த உலகம் என்றும் மறக்காமலிக்கும். அவன் படைக்கப்போகும் காவியம் எல்லோர் மனதிலும் பதியும். அந்த சக்திமான் அவதரிக்கும் முகூர்த்த நேரம் நெருங்கிக்கொண்டிருக்கிறது. நாம் இந்த வேளையில் ஒன்று சேர்ந்தால் உலகம் போற்றும் மாமேதை அவதரிப்பான். உன் விருப்பம் என்ன? மேலும் நீ சில வருடங்கள் கழித்து ஒரு மன்னனுக்கு மனைவி ஆவாய். நாட்டை ஆளும் திறமையும் உன்னைத் தேடி வரும்'' என்று அவள் வருங்காலத்தையும் விவரமாகக் கூறினார் பராசரர். அவரது வாக்கினை முழுமையாக நம்பினாள் சத்தியவதி. அதன்படி சத்தியவதிக்கும் பராசர முனிவருக்கும் மகனாகப் பிறந்தார் வியாசர்.

வியாசர், தன் தந்தை பராசரரிடமும் மற்றும் பல ரிஷிகளிடமும் கல்வி கற்றார். கல்வியில் சிறந்து விளங்கிய வியாசர், தன் தாயிடம் துறவறம் பூண்டு செல்வதாகக் கூறினார். அவருக்கு ஆசி கூறும்போது "மகனே, ஏதாவது ஓர் இக்கட்டான சூழ்நிலையில் நான் உன்னை நினைத்தால் நீ உடனே வரவேண்டும். என் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்' என்று வாக்குறுதி வாங்கிக் கொண்டாள்.

காலம் சென்றது. மன்னன் சந்தனு சத்தியவதியை திருமணம் செய்துகொண்டான். சந்தனுவுக்கு ஏற்கெனவே பீஷ்மர் என்ற மகன் இருந்தான். பராசரர் சொன்னதுபோல், சத்தியவதி அரண்மனையில் பட்டத்தரசியாக வாழ்ந்தாள். சத்தியவதிக்கும் சந்தனுவுக்கும் சித்திராங்கதன், விசித்திரவீரியன் என்னும் இரு மகன்கள் பிறந்தார்கள். சந்தனு காலம் முடிந்தது. சத்தியவதி நாட்டை ஆளும் அரசியானாள். இந்த நிலையில் பக்கத்து நாட்டுடன் ஏற்பட்ட போரில் சித்திராங்கதன் சொல்லப்பட்டான்.

விசித்திர வீரியன் காசி மன்னனின் மகள்கள் அம்பிகா, அம்பாலிகா ஆகியோரை மணந்தான். அவனும் திருமணமாகி சில ஆண்டுகளில்

மாண்டு போனதால் பீஷ்மரை அரசுப் பொறுப்பேற்க அழைத்தாள் சத்தியவதி. ஆனால் பீஷ்மர் அதை விரும்பவில்லை. ஆதலால் தன் மகன் வியாசரை நினைத்தாள். தாயின் நிலை அறிந்து அங்கு வந்தார் வியாசர். சத்தியவதி நாட்டின் நிலையையும் வாரிசுகள் இல்லாத நிலையையும் எடுத்துக்கூறி அதற்கு ஆவன செய்யுமாறு கூறினாள்.

அன்னையின் சொற்படி அம்பிகாவிற்கு கண்பார்வையற்ற மகனாக திருதராஷ்டிரனும், அம்பாலிகாவுக்கு வெளுப்பான நிறத்தில் பாண்டுவும் பிறந்தனர். அதோடு அம்பிகா அனுப்பி வைத்த அரண்மனை பணிப்பெண்ணுக்கு விதுரனும் பிறந்தனர். அதன் காரணமாக, வியாசர் பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் பாட்டனார் ஆகிறார். வேதங்களை வகுத்தளித்த மேதையான வேதவியாசர் அவதரித்தது ஓர் ஆடி பௌர்ணமி என்பதால் குருமார்கள், மடாதிபதிகள் போன்றோர் ஆடிமாதப் பௌர்ணமியை "குருபூர்ணிமா' என்று கொண்டாடுகிறார்கள்.

இந்நாளில் தாங்கள் விரும்பி ஏற்றுள்ள குருவை வழிபடுவது நல்லது. மேலும் சிவாலயங்களில் தென்முகக் கடவுளாக வீற்றிருக்கும் தட்சிணாமூர்த்தியை வழிபட்டாலும் குருவின் திருவருள் கிடைக்கும்.

- டி.ஆர். பரிமளரங்கன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com