மந்தர மலையைத் தாங்கிய மாலவன்!

திருமாலின் தசாவதாரங்களில் இரண்டாவதாகச் சிறப்பித்துக் கூறப்படுவது ஸ்ரீ கூர்ம அவதாரம்.
மந்தர மலையைத் தாங்கிய மாலவன்!
Published on
Updated on
2 min read

திருமாலின் தசாவதாரங்களில் இரண்டாவதாகச் சிறப்பித்துக் கூறப்படுவது ஸ்ரீ கூர்ம அவதாரம்.

ஒரு சமயம், துர்வாசமுனிவர் தனக்கு திருமகளின் அனுக்கிரகத்தால் கிடைக்கப் பெற்ற ஒரு பூமாலையை தேவேந்திரனுக்கு ஆசீர்வதித்து கொடுத்தார். இந்திரனோ அதை அலட்சியமாகத் தன் யானையின் தலையில் வைக்க, யானையோ அந்த மாலையை எடுத்துக் கீழே போட்டு தன் காலால் மிதித்தது. கடுங்கோபத்துடன் துர்வாசமுனிவர் இந்திரனை நோக்கி, "நீ ஆணவத்தால் இவ்வாறு செய்ததால் உன் செல்வங்களையெல்லாம் இழந்து தேவ பதவியையும் இழப்பாய்' என்று சாபமிட்டார். துர்வாசர் இட்ட சாபத்தினால் தேவலோகம் முழுவதும் இருண்டது. தேவர்கள் தங்கள் பலம் முழுவதையும் இழந்தனர்.

அசுரர்கள் பலம் மேலோங்கியது. செய்வதறியாது திகைத்து தேவேந்திரன் திருமாலை சரணடைந்தான். அவர் அறிவுரைப்படி தேவர்களும் அசுரர்களும் அமுதம் கிடைப்பதற்காக மந்திரமலையை மத்தாகக் கொண்டு பாற்கடலைக் கடைய ஆரம்பித்தார்கள். ஆனால் அந்த மலை நிலை கொள்ளாமல் ஆடியபடி பாற்கடலில் அமிழ்ந்து மூழ்கியது. அனைவரும்

ஸ்ரீஹரியைத் தியானித்து பிரார்த்திக்க, திருமால் பெரிய ஆமை (கூர்மம்) உருக்கொண்டு மலையைத் தன் முதுகில் தாங்கி மத்தாக நிலை நிறுத்தினார். இந்த பாற்கடலைக் கடையும் நோக்கமும் இனிது நிறைவேறியது.

பெரிய மலையைத் தாங்க வேண்டியிருந்ததால் அவதார ஆரம்பத்திலேயே விஸ்வரூபமாக ஆபிர்வித்தான் திருமால் என்பர். இந்த அவதாரச் சிறப்பினை அருளாளர்கள் அனுபவித்து பாடியுள்ளார்கள்.

ஸ்ரீநாராயண பட்டத்ரி தனது நாராயணீய காவியத்தில் குருவாயூரப்பனைநோக்கி, "உம்மை வணங்கும் பக்தர்களின் மனம் மந்தர மலை போல் அஞ்ஞானக் கடலில் மூழ்கி இருக்கிறது. அதை கூர்மாவதாரம்

செய்து உயரத்தூக்குவது போல் ஆமையைப் போல் வடிவு பெற்றிருக்கின்ற உமது நுனிக்கால்களில் உள்ள பாதநகங்களின் ஒளி நிலவு அந்த அஞ்ஞானங்களையும், தாபங்களையும் போக்குகின்றன' என்று வர்ணித்துள்ளார்.

கூர்ம வடிவில் எம்பெருமான் ஆந்திரமாநிலத்தில் உள்ள ஸ்ரீகூர்மம் என்ற திருத்தலத்தில் எழுந்தருளியுள்ளார். அவதாரத்தின் பெயரிலேயே திகழும் அற்புதத்தலம் இது.

ராமானுஜரின் அபிமானத்தலங்கள் பதினாறில் ஸ்ரீ கூர்மமும் ஒன்று. பூரி ஜகந்நாதப் பெருமாள் ராமானுஜருக்கு கருடாழ்வார் மூலம் வழிகாட்டப்பட்ட பெருமை மிக்க தலம். ஆதிசங்கரர் அளித்த சுதர்சன

சாளக்ராமம் கூர்மத்தின் நெஞ்சில் சாத்தப்பட்டுள்ளது விசேஷமாகும். இத்திருத்தலத்தில் உள்ள திருக்குளத்தில் நீராடி கூர்மநாதரை வழிபடுபவர்கள் அஸ்வமேத யாகம் செய்த பலனைப் பெறுகிறார்கள் என்று புராணங்கள் இயம்புகின்றன.

வால்டேர் - கல்கத்தா ரயில் மார்க்கத்தில் ஸ்ரீகாகுளத்தில் இருந்து 13 கி.மீ தொலைவில் உள்ள இத்திருத்தலத்திற்கு விசாகப்பட்டினத்திலிருந்தும் செல்லலாம்.

இதைத்தவிர ஆந்திர மாநிலத்தில் சித்தூர் மாநிலத்தில் பாலமனர் அருகில் கூர்மை என்ற கிராமத்தில் உள்ள வரதராஜசுவாமி ஆலயத்திலும், கர்நாடக மாநிலத்தில் ஸ்ரீராமபுரம் அருகில் கவிரங்கபுரா என்ற

கிராமத்தில் உள்ள ரங்கநாதசுவாமி ஆலயத்திலும், தமிழ்நாட்டில் திருநெல்வேலியிலிருந்து தூத்துக்குடி செல்லும் சாலையில் உள்ள வல்லநாடு கிராமத்திலிருந்து 2 கி.மீ தொலைவில் அகரம் கிராமத்தில்

உள்ள தசாவதாரப் பெருமாள் கோயிலிலும், ஸ்ரீரங்கம் வடகாவேரிக் கரையில் திருமங்கை மன்னனால் பிரதிஷ்டை செய்யப்பட்ட திருக்கோயிலில் உள்ள தசாவதாரச் சந்நிதியிலும் கூர்ம வடிவிலான எம்பெருமானின் திவ்ய ரூபத்தை தரிசிக்கலாம்.

கூர்ம தரிசனம் கிரக தோஷங்களைப் போக்கவல்லது என்று ஸ்ரீமத் பாகவதம் கூறுகின்றது. கூர்ம அவதாரம் நிகழ்ந்தது ஒரு ஆனி மாதம் தேய்பிறை துவாதசியன்று என்று புராணங்கள் கூறுகின்றன.

இவ்வாண்டு ஜூலை 1 ஆம் தேதி, வெள்ளிக்கிழமை கூர்மஜெயந்தி நன்னாளாகும். அந்நாளில் மலையைத் தாங்கிய அந்த மாலவனை துதித்து அவன் திருவடியை வணங்கினால், நமக்கு மலைபோல வரும் துன்பங்கள் நீங்கப் பெற்று பெருவாழ்வு வாழலாம் என்பது திண்ணம்.

- எஸ்.வெங்கட்ராமன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com