அனுமந்தபுரத்து வெற்றிலை இல்லாத சுபகாரியங்கள் இல்லை. பலவகை உள்நோய்களை அடியோடு தீர்க்கும் குணமுடையது வெற்றிலை. அதுபோல் வெற்றிலைத் தோட்டத்தில் தோன்றியவர் அனுமந்தபுரம் ஸ்ரீ அகோர வீரபத்திரர்! தீய சக்திகள், மனதை பாதிக்கும் பில்லி சூனியம் ஏவல் ஆகியவற்றை விரட்டும் சக்தி மிக்கவராக விளங்குகிறார். மனநலம் பாதிக்கப்பட்டோர், தீராத மனோ வியாதியால் பீடிக்கப்பட்டோர், மனக்குழப்பம், தெளிவின்மை, மனசஞ்சலம், வேலை வாய்ப்பு, பதவி உயர்வு போன்ற பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வுவேண்டி இத்தல வீரபத்திரரை வணங்கி வழிபடுகின்றனர்.
வேதவழி நடத்தப்படும் வேள்விகளில் சிவனையே முன்னிலைப் படுத்தி செய்யவேண்டும். முறை தவறி செய்வோர் சிவ அபசாரத்திற்கு ஆளாவர். அத்தகைய பாவம் சிவபூஜை செய்து வழிபடுவதாலேயே நீங்கும் என்பதை எடுத்துரைப்பதே வீரபத்திரர் அவதார நிகழ்வாகும்.
தட்சன் பெரிய வேள்வி ஒன்றை நடத்த விரும்பி, அனைவருக்கும் அழைப்பு விடுத்தான். ஆனால் சிவபெருமானுக்கு அழைப்பு அனுப்பவில்லை. பிரம்மா, விஷ்ணு, அஷ்டவசுக்கள், நட்சத்திர தேவதைகள், முப்பத்து முக்கோடி தேவர்கள் அனைவருக்கும் அழைப்பு அனுப்பி அவிர்பாகம் அளித்து மகேசனை அவமானப்படுத்த துணிந்தான்.
தாட்சாயினியால் சிவபெருமான் அவமானப்படுவதை ஏற்க இயலவில்லை. தந்தையிடம் சென்று முறையிடுகிறார்.
ஆனால் தட்சன் தன்மகள் என்று பாராமல் அவமதிக்கிறான். கோபம் கொண்ட தாட்சாயினி நேராக வேள்விச்சாலை சென்று யாகம் தொடராமல் இருக்க, அந்த யாகத் தீயில் குதித்து தன்னுயிரைப் போக்கிக் கொள்கிறார்.
இதனைக் கேள்வியுற்ற சிவன் கோபாவேசம் கொண்டு தீயினால் உருமாறியிருந்த சதிதேவியாகிய பார்வதியைத் தன் தோளில் சுமந்தபடி நடனம் ஆடுகிறார். அப்போது முக்கண்ணனின் நெற்றிக் கண்ணிலிருந்து வெளிப்பட்ட தீப்பொறியிலிருந்து சிவபெருமானின் அம்சமாக, சடாமுடியுடனும், முக்கண்கள், எட்டுக் கரங்களிலும் ஆயுதங்கள் கொண்டு, தேள் மாலை, நாகப்பாம்பு பூணூல், கால்களில் செருப்புக் குரடுடன் தோன்றினார் வீரபத்திரர். பார்வதியின் கால் சிலம்பிலிருந்து உதிர்ந்த நவரத்தினங்களில் இருந்து நவகாளிகள் தோன்றினர். அவர்கள் ஒன்றாக இணைந்து பத்ரகாளி உருவானாள்.
சிவநிந்தனையையே குறியாகக் கொண்டு நடந்த யாகத்திற்கு வந்தோர் அனைவரும் தண்டிக்கப்பட்டனர். வீரபத்திரர்,தட்சன் தலையை முதலில் வெட்டி யாக நெருப்பில் போட்டார். பெண்களைக் காளி தாக்கி அழித்தாள். தட்சனோடு இணைந்த அத்தனை பேருமே வீரபத்திரரால் தண்டிக்கப்பட்டனர். எல்லோரும் ஈசனடி பணிந்து பிழைபொறுக்க வேண்டினர். முடிவாக, தலை போன தட்சனுக்கு ஆட்டுத்தலை பொருத்தப்பட்டது. தட்சன் பணிந்தான்.
இந்நிலையில் உக்கிரம் குறையாத வீரபத்திரரை சிவபெருமான், குளிர்ந்த வெற்றிலைத் தோட்டம் ஒன்றில் அமர்த்தி சாந்தப்படுத்துகிறார். சாந்தமடைந்த வீரபத்திரர் கோரம் நீங்கி அருள் வழியும் முகத்துடன் நான்கு கரங்களுடன் மேல் கரங்களில் வில் மற்றும் அம்பு, கீழ் இடக்கரத்தில் கேடயமும் வலக்கரத்தில் கத்தியும் கொண்டு நின்ற கோலத்தில் அருளும் வகையில் அந்த வெற்றிலைத் தோட்டத்திலேயே குடிகொண்டார். வீரபத்திரர் குடிகொண்ட அவ்விடமே அனுமந்தபுரம்!
அனுமந்தபுரம் அகோர வீரபத்திரர் திருக்கோயிலில் வீரபத்திரரே முதன்மை தெய்வம்! சிவாம்சம் உடையவர் ஆதலால் சண்டிகேசரும் துர்க்கையும் மட்டும் உண்டு. கருவறையில் சுமார் எட்டடி உயரம் கொண்ட கம்பீரமான திருவுருவமாக வீரபத்திரர் காட்சி தருகிறார். தலைமுடியில் சிவலிங்கம் உள்ளது. வலது கால் அருகே ஆட்டுத் தலையுடன் தட்சன் கரங்கூப்பியபடி வணங்கிக் கொண்டு நிற்பதை காணலாம்.
வீரபத்திரருக்கு வெண்ணெய் சாற்றுதல், வெற்றிலைப் படல் அமைத்தல், வெற்றிலை மாலை அணிவித்தல் போன்ற பிரார்த்தனைகள் தனிச்சிறப்பு மிகுந்தவை. ஆடிப்பூரம், வெள்ளிக்கிழமை, கார்த்திகை போன்ற நாள்களில் வெற்றிலை மாலை சார்த்துவது சிறப்பு.
வீரபத்திரருடன் இணைந்து யாகத்தை அழித்த பத்ரகாளி இக்கோயிலுக்கு அருகிலேயே ஏரிக்கரையில் கோயில் கொண்டுள்ளார். விசேஷ நாள்களில் வீரபத்திரருக்கு சைவப்படையலும், பத்திரகாளிக்கு அசைவ படையலும் படைப்பது வழக்கத்தில் உள்ளது.
அழகான இனிமையான முகத்துடன் அண்டி வந்தோருக்கு அருளும் இவ்வாலய தெய்வமாகிய வீரபத்திரர், "அகோர வீரபத்திரர்' என அழைக்கப்படுகிறார். வீரபத்திரர் முருகனின் மறு அவதாரமாகவேக் கருதப்படுவதால் செவ்வாய்க்கிழமைகளில் பக்தர்கள் சிறப்பான வழிபாடுகள் செய்கின்றனர். ஞாயிற்றுக் கிழமையும் வழிபாட்டுக்கு உரிய நாளாகும். அமாவாசை, பெüர்ணமி நாள்களில் மக்கள் அதிக அளவில் வந்து வழிபடுகின்றனர். கார்த்திகைத் தீபம், மார்கழி ஆருத்திரா, தைபூசம் அன்று சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.
மாசிமாதம் சிவராத்திரியன்று நான்கு கால அபிஷேகமும் மதியம் புறப்பாடும் நடைபெறும். மீண்டும் நள்ளிரவு 12 மணியளவில் புறப்பாடாகி மாடவீதிகள் வழியாக வீரபத்திரர் வலம் வருவார்.
விடியற்காலையில் சூரிய உதயத்தில் துஷ்ட சக்திகளை அப்புறப்படுத்தி அனுக்ரகம் செய்து கோயிலுக்கு திரும்புவர்.
ஆலயம், காலை 7.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரையிலும், மாலை 4.00 மணி முதல் 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.
அனுமந்தபுரம், சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில், சிங்கப்பெருமாள் கோயிலுக்குச் தென்கிழக்கே 7 கி.மீ. தொலைவில் உள்ளது. அமாவாசை, பெüர்ணமி நாள்களில் சிங்கப்பெருமாள் கோயில், செங்கல்பட்டு, தாம்பரத்திலிருந்து கூடுதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
- செங்கை பி. அமுதா
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.