நபி (ஸல்) அவர்கள் நோயுற்று நடமாட சிரமப்பட்ட நிலையில் அவர்களின் இடத்தில் இமாமாக நின்று தொழுகையை நடத்த அபூபக்கர் சித்தீக் (ரலி) அவர்களைப் பணித்தார்கள். அவர்கள் பதினேழு வக்து (வேளை) இமாமாக நின்று தொழுகை நடத்தினார்கள். சில வேளைகளில் வேதநபி (ஸல்) அவர்கள் அபூபக்கர் (ரலி) நடத்தும் தொழுகையில் பின் நின்றும் தொழுதார்கள். அண்ணல் நபி (ஸல்) அவர்கள் இறந்ததும் அவர்களால் அடையாளம் காட்டப்பட்ட அபூபக்கர் (ரலி) அவர்களிடம் ஆளும் பொறுப்பைக் கொடுக்கவில்லை. வள்ளல் நபி (ஸல்) அவர்களின் வாரிசுகளும் ஆள்வதற்கு வாரிசுரிமை கோரவில்லை. ஆட்சியைப் பிடிக்க போட்டியிடவுமில்லை. ஆயினும் ""போர் சமாதானம் ஆகிய செயல்களில் கலந்து ஆலோசனை செய்து கொள்ளுங்கள்'' என்ற குர்ஆனின் 3-159 ஆவது வசனப்படியும் "ஒவ்வொரு செயலையும் அவர்கள் தங்களுக்குள் ஆலோசனை செய்து கொள்வார்கள்'' என்ற 42-38 ஆவது வசனப்படியும் மதீனாவில் வாழ்ந்த அன்சாரிகளும் மக்காவிலிருந்து குடியேறிய முஹாஜிரீன்களும் கூடி கருத்து பரிமாறி கலந்து ஆலோசித்தனர். கூட்டத்தில் அபூபக்கர் சித்தீக் (ரலி) கலீபா பதவிக்கு உமர் (ரலி) மற்றும் அபூ உபைதா (ரலி) இருவரில் ஒருவரைத் தேர்ந்தெடுக்க முன் மொழிந்தார்கள். அக்கூட்டம் அபூபக்கர் சித்தீக் (ரலி) அவர்களைக் குடியாட்சி முறையில் கலீபாவாக தேர்ந்தெடுத்தது.
கலீபா மணிமுடி தரிக்கவில்லை; மாளிகை கட்டி கொள்ளவில்லை; பள பளப்பான பட்டாடைகள் அணியவில்லை; பாதுகாப்பிற்குத் தோதுவான பட்டாளம் படையணி அமைக்கவில்லை; ஏதுவான ஏவலர்கள் இல்லை. மக்களின் காவலரான கலீபாவே மக்களுக்கு ஏவலராக எண்ணற்ற பணிபுரிந்தார்கள்.
ஜகாத் என்னும் ஏழை வரியைச் செல்வர்களிடம் கட்டாயமாக வசூலித்து பொதுநிதியில் சேர்த்து பொருளில்லா மக்களுக்குப் பொருள் அளித்து ஏழைகளும் வாடாது வாழ வழிகாட்டினார்கள். ஜகாத்தைக் கொடுக்க மறுத்து குறைக்கச் சொன்ன செல்வர்களின் கோரிக்கைக்குச் செவிசாய்க்கவில்லை. புவி புகழ் பூமான் நபி (ஸல்) அவர்களின் வழியில் உறுதியாக செயல்பட்டார்கள்.
மாநிலம் பத்து பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு ஆளுநர் நியமிக்கப்பட்டார். கலீபாவின் உறவினர்களுக்கு எப்பதவியும் எச்சலுகையும் அளிக்கவில்லை. உறவினர்களுக்குச் சலுகையளிக்கும் அதிகாரியின் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும் என்ற உத்தம நபி (ஸல்) அவர்களின் சத்தியவாக்கை நினைவுறுத்தி நிலைநாட்ட ஆளுநர்களுக்கு ஆணையிட்டார்கள்.
இராணுவத்தை உருவாக்கி படை பிரிவுகளை ஏற்படுத்தி பிரிவுக்கொரு தளபதியையும் நியமித்தார்கள். அபூபக்கர் (ரலி) ஆட்சி பொறுப்பை ஏற்றபொழுது அம்ரிப்னுல் ஆஸ் (ரலி) தளபதியாக இருந்த படை பிரிவில் உமர் (ரலி) வீரராக இருந்தார்கள். தளபதியின் அனுமதியைப் பெற்ற பிறகே உமர் (ரலி) அவர்களைப் படையிலிருந்து விலக்கி ஆலோசகராகவும் நீதிபதியாகவும் நியமித்தார்கள். ஆபூதர்தா (ரலி) தளபதி காலித் (ரலி) அவர்களோடு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் மதீனாவிற்குத் திரும்பினார். தளபதியின் கட்டளைக்குக் கட்டுப்பட்டு பணிபுரியுமாறு அபூதர்தா (ரலி) அவர்களை அதே படை பிரிவில் பணியாற்ற திருப்பி அனுப்பினார்கள். ராணுவ தளவாடங்களை உற்பத்தி செய்ய பைத்துல்மாலிலிருந்து நிதி ஒதுக்கினார்கள்.
கால்நடைகளை வளர்ப்பதற்காக பகீ மற்றும் ஜப்தா என்ற இரு இடங்களில் பெரிய மேய்ச்சல் நிலங்களை உருவாக்கினார்கள். பைத்துல் மாலுக்காக பொது கருவூலத்தை முதலில் ஏற்படுத்தியவர் முதல் கலீபாவே.
கலீபா பொறுப்பு ஏற்று ஆறு மாதங்கள் தோலில் துணிகளைச் சுமந்து சென்று விற்று வியாபாரத்தில் ஈட்டிய பொருளையே வாழ்க்கைச் செலவுக்குப் பயன்படுத்தினார்கள். கலீபா வியாபாரத்திற்குச் செல்வதால் மக்கள் பணி பாதிக்கும் என்று உமர் (ரலி) ஆலோசனை கூறினார்கள். மக்காவிலிருந்து அபயம் தேடி வந்த முஹாஜிர்களுக்குக் கொடுக்கப்படும் ஊதியமே கலீபாவிற்கும் கொடுக்கப்பட்டது. ஒரு சாதாரண குடிமகனைப் போலவே குடியரசு தலைவரான கலீபாவும் வாழ்ந்தார். இரண்டேகால் ஆண்டுகளில் ஊதியமாகப் பெற்ற ஆறாயிரம் திர்ஹங்களை அவர்களின் தோட்டத்தை விற்று பொது நிதி பைத்துல்மாலில் சேர்த்திட மகள் ஆயிஷா (ரலி) அவர்களிடம் மரண சாசனம் செய்தார்கள்.
வரி கட்டும் இஸ்லாமியர் அல்லாதார் முதுமையுற்றாலும் ஊனமுற்றாலும் வறுமையுற்றாலும் அவர்களுக்கு வரி விலக்களிக்கப்பட்டு பைத்துல்மால் பொது நிதியிலிருந்து அவர்களின் பராமரிப்புக்குப் பணம் கொடுக்க ஏற்பாடு செய்தார்கள்.
அபூபக்கர் (ரலி) ஆட்சியில் உமர் (ரலி) நீதிபதியாக இருந்தார்கள். இரண்டேகாலாண்டு ஆட்சியில் இரு வழக்குகளே நீதிபதியிடம் விசாரணைக்கு வந்தன. அபூபக்கர் (ரலி) ஆட்சியில் மக்கள் வழக்கும் இழுக்கும் இன்றி ஒழுக்கமுடன் வாழ்ந்தனர்.
அபூபக்கர் (ரலி) நோயுற்றதும் மக்களைக் கூட்டி மக்களின் கருத்தறிந்து மக்கள் விரும்பியபடி மக்கள் தலைவராக உமர் (ரலி) அவர்களை அடையாளம் காட்டினார்கள். அபூபக்கர் (ரலி) வாரிசுகளுக்கு எப்பதவியும் வழங்கவில்லை. முதற்கலீபாவின் முத்தான ஆட்சியே குடியரசின் குறைவிலா நிறைவான ஆட்சி.
- மு.அ. அபுல் அமீன்