கடலூர் மாவட்டம், திருமுட்டம் என்கிற ஸ்ரீமுஷ்ணத்தில் பெருமாளின் தசாவதாரங்களில் ஒன்றான வராக அவதார கோலத்தில் பூவராகப் பெருமாள் உள்ளார். பெருமாளின் இத்தகைய கோலத்தை தரிசிப்பது மிகவும் அரிதாகும்.
வரலாறு: இரண்யாட்சன் என்ற அசுரன் பூமியை கடலுக்கடியில் ஒளித்து வைத்துவிட்டான். இதனால் வருத்தமடைந்த பூமாதேவி, மகாவிஷ்னுவிடம் முறையிட்டாள், விஷ்ணு வராக அவதாரம் எடுத்து கடலுக்கடியில் சென்று அசுரனை அழித்து பூமியை மீட்டு வந்தார். பூ எனப்படும் பூமியை வராக அவதாரம் எடுத்து தன் கோரைப்பற்களில் மூட்டி தூக்கி வந்தார். அதனால் சுவாமிக்கு பூவராகர் என பெயர் வந்தது. மேலும் இப்பகுதி திருமுட்டம் என அழைக்கப்பட்டு நாளடைவில் ஸ்ரீமுஷ்ணம் என மருவியது.
சங்கு சக்கரம் மறைந்த பெருமாள்: இரண்யாட்சனை பெருமாள் அழித்த போது, அவன் சுவாமியிடம் எப்போதும் தான் இருக்கும் திசையைப் பார்த்தப்படி இருக்குமாறு வேண்டிக்கொண்டான். சுவாமியும் அவ்வாறே அருள் செய்தார். சுவாமி இடுப்பில் கை வைத்தபடி மேற்கு நோக்கி நின்றாலும், முகத்தை மட்டும் தெற்கு நோக்கி திரும்பி காட்சியளிக்கிறார் இக்கோயிலில். காக்கும் கடவுளான மகாவிஷ்ணு அசுரனை அழித்த வேளையில் தன் செயல் குறித்து அசுரன் வருந்துவான் என நினைத்து சங்கு சக்கரத்தை இடுப்பில் மறைத்துக் கொண்டுள்ளார். இந்த கோலத்திலேயே இக்கோயிலில் பூவராகப் பெருமாள் காட்சியளிக்கிறார்.
சுயம்பு ஸ்தலம்: ஏழுநிலை ராஜ கோபுரத்துடன் அமைந்துள்ள இக்கோயில் பூவராகர் சாளக்கிராமத்தால் ஆன மூர்த்தியாக அருளுகிறார். பெருமாள் தானாக தோன்றியருளிய எட்டு ஸ்தலங்கள் "சுயம் வியக்த ஸ்தலங்கள்' எனப்படுகின்றன. இதில் இந்த ஸ்தலமும் ஒன்று. பெருபாலான பெருமாள் கோயில்களை மூலவருக்கு தைலக்காப்பு மட்டும் சாத்தப்பட்டு உத்சவருக்கே தினமும் திருமஞ்சனம் நடக்கும். இங்கு மூலவருக்கு திருமஞ்சனம் நடக்கிறது. தாயார் அம்புஜவல்லி தனிச்சந்நிதியில் வீற்றுள்ளார். உத்சவர் யக்ஞவராக மூர்த்தி ஸ்ரீதேவி, பூதேவியருடன் உள்ளார். இந்த ஸ்தலத்தில் அன்னதானம் செய்து வழிபடுவது சிறப்பாகும்.
புதிய வாகனங்கள் படைக்கும் ஸ்தலம்: இறைவன் எல்லா உயிர்களையும் நேசிக்கிறார். அதனால் தான் அவர் எல்லோராலும் ஒதுக்கப்படும் பன்றியின் வடிவில் இங்கு காட்சியளிக்கிறார். பொதுவாக பன்றி மீது வாகனம் மோதிவிட்டால், அதை அபசகுனமாக எடுத்துக் கொண்டு வாகனத்தை மாற்றிவிடுவோம். ஆனால் இந்த கோயிலுக்கு மோதிய வாகனத்துடன் வந்து தோஷ நிவர்த்தி பூஜை செய்து வருகின்றனர். இந்த பூஜைக்கு "வாகனம் படைத்தல்' என்ற பெயரும் சூட்டியுள்ளனர்.
சித்திரை மாதம் ரேவதி நட்சத்திரத்தில் பூவராக ஜெயந்தி விழா நடைபெற்று வருகிறது. சித்தரை மாதம் 10 நாள்கள் உத்சவமாக நடைபெறுகிறது. சித்ரா பௌர்ணமி அன்று தெப்ப உத்சவமும் நடைபெறும்.
- ஜி. சுந்தரராஜன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.