விசாகத்தில் ஆராட்டு பெறும் பகவதி!

வசந்த காலம் என்பது இளவேனிற் காலம்! சித்திரை, வைகாசி மாதங்களே வசந்த காலமென்பதால்
விசாகத்தில் ஆராட்டு பெறும் பகவதி!
Updated on
3 min read

வசந்த காலம் என்பது இளவேனிற் காலம்! சித்திரை, வைகாசி மாதங்களே வசந்த காலமென்பதால் பூக்கள் அதிகமாக பூத்துக்குலுங்கி மலர்ந்து மணம் பரப்பும். மேலும் இந்த வைகாசி மாதத்தில் தான் கோயில்களில் வசந்த உற்சவம் நடைபெறும்.வைகாசி விசாகம் முருகனுக்கு மட்டுமல்லாமல் பல்வேறு தெய்வங்களுக்கும் உகந்த நாளாகும்.

மார்க்கண்டேயருக்காக வைகாசி விசாகத்தன்று சிவபெருமான் மழுவினை திருக்கையில் ஏந்தி நடனமாடி மார்க்கண்டேயரைப் பரவசத்தில் ஆழ்த்தினார். அத்தலம் மழுவாடி எனும் பெயரை பெற்றது. நம்மாழ்வாரின் ஜென்ம நட்சத்திரம் வைகாசி விசாகம். நம்மாழ்வார் அவதரித்த ஆழ்வார் திருநகரியில் விசாக விழா மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

ஆந்திராவில் உள்ள சிம்மாசலம் என்ற இடத்தில் உள்ள நரசிங்கப் பெருமாளுக்கு ஆண்டு முழுவதும் சாத்தியிருக்கும் சந்தனக் காப்பை வைகாசி விசாகத்தின் போது நீக்குவதால் அன்று ஒரு நாள் மட்டும் அவரை முழுமையாகத் தரிசிக்க முடியும். மறுநாளே மீண்டும் சந்தனக் காப்பிட்டு விடுவார்கள். எமதர்மன் அவதரித்ததும் வைகாசி விசாக நாளில்தான். மாரியம்மன், திரெüபதி அம்மன், காளியம்மன் கோயில்களில் அன்றைய தினம் தீமிதி விழா சிறப்புடன் நடைபெறும்.

கன்னியாகுமரியில் அன்னை பகவதிக்கு வைகாசி மாதம் விசாக திருவிழா பத்து நாள் உத்ஸவமாக நடைபெறுகிறது. பாணாசுரன் என்னும் அசுரன் நீண்ட காலம் தவம் செய்து பிரம்மனிடம் தனக்கு ஒரு கன்னிப் பெண் தவிர வேறு யாராலும் மரணம் நேரக்கூடாது என்று வரம் கேட்டுப் பெற்றான். ஒரு கன்னிப் பெண் தன்னை என்ன செய்துவிட முடியும் என்ற இறுமாப்பினால் ஆணவம் மிகக் கொண்டு மூவுலகங்களையும் துன்புறுத்தினான். பாணாசுரன் தேவர்களோடு மகரிஷிகளையும் துன்புறுத்த அவர்கள் திருமாலைச் சரணடைந்தனர்.

பாணாசுரனைப் பராசக்தியால் மட்டுமே அழிக்க முடியும் என்று கூறிய பரந்தாமன், தேவர்களைப் பராசக்தியின் பாதத்தில் சரண்புக அறிவுறுத்தினார். தேவர்களும் பராசக்தியை வேண்டி ஒரு பெரிய யாகம் செய்ய, அந்த வேள்வித்தீயிலிருந்து கன்னிப் பெண்ணாக வெளிப்பட்டாள் அம்பிகை.

அம்பிகையின் பாதம் பணிந்த தேவர்களிடம், பாணாசுரனை வென்று தேவர்களையும் நல்லோரையும் காப்பதாக அபயமளித்து, கன்னியாகுமரிக்கு வந்து கடுந்தவம் புரியலானாள்.

காலங்கள் உருண்டோடின. அம்பிகை மணப்பருவம் அடைந்தபோது, சுசீந்திரம் திருத்தலத்து இறைவன் அவளை மணக்க விரும்பினார். அம்பிகையும் சம்மதிக்க, திருமண நாள் குறிக்கப்பெற்று, திருமண ஏற்பாடுகள் துரிதமாக நடைபெற்றன.

அம்பிகைக்கும் சிவனுக்கும் திருமணம் நடந்தால், கன்னிப் பெண்ணால் மட்டுமே அழியக்கூடிய பாணாசுரனை அழிக்க முடியாது என்பதால் நாரதர், இந்த திருமணத்தை தடுக்க முடிவுசெய்து, அம்பிகையிடம் சென்று பாணாசுரன் சிவனை விட பெரிய வலிமையானவன் என்று கூறி, சிவனின் வலிமையை அரிய, உலகில் யாராலும் செய்ய முடியாத 3 நிபந்தனைகளை நிறைவேற்றினால் மட்டுமே அம்பிகையை திருமணம் செய்து கொள்ள முடியும் என்று சிவனிடம் கூறும்படி கூறினார்.

அதன்படி, சிவபெருமானிடம் கண் கள் இல்லா தேங்காய், நரம்புகள் இல்லா வெற்றிலை, அடி தண்டு இல்லா கரும்பு இவைகளை எடுத்துக் கொண்டு காலை சேவல் கூவும் முன் வந்தால் திருமணம் நடைபெறும் என்று கூற, சிவபெருமான் அனைத்தையும் தன் வலிமையால் செய்து எடுத்துக் கொண்டு திருமண நாளன்று சுசீந்தரத்தில் இருந்து கிளம்பினார்.

இதை கவனித்த நாரதர் நள்ளிரவிலேயே, சிவபெருமான், வழுக்கம்பாறை என்ற இடத்தை அடைந்தபோது, ஒரு சேவல் உருக்கொண்டு உரக்கக் கூவினார். சேவல் கூவியதைக் கேட்ட சிவபெருமான் காலம் கடந்து விட்டது என்று கருதி மறுபடியும் சுசீந்தரத்திற்கே வருத்தத்துடன் திரும்பி விட்டார்.

இதை அறியாத அம்பிகை திருமணத்திற்காக காத்திருக்க, சிவபெருமான் வராததால் கோபம் கொண்டு எல்லா சமையல் பொருட்களையும் தூக்கி வீசிவிட்டு மீண்டும் தவம் செய்யப் போய்விட்டார்.

திருமணத்திற்கென்று செய்யப்பட்ட உணவுப் பொருள் யாவும் வகை வகையான மணலாக மாறின. அதன் சான்றாகவே, இன்றும், குமரிக்கடல் துறையில் அரிசி போன்ற வெண் சிறுமணலும்,வேறுவகையான பலவண்ண மணலும் மிகுதியாகக் கிடப்பதைக் காணலாம்.

தேவி கடுந்தவமிருக்கும்போது, ஒரு நாள், பாணாசுரன் தேவியைக் கண்டு அவள் அழகில் மயங்கி, தன்னை மணந்து கொள்ள வேண்டினான். ஆனால், தேவி மறுத்து விடவே அசுரன் அவளைக் கவர்ந்து செல்ல எண்ணித் தன் உடைவாளை உருவினான்.

இதையே எதிர்நோக்கியிருந்த தேவியும் பாணாசுரனோடு ஆக்ரோஷமாக யுத்தம் புரிந்தாள். நீண்ட நாள்கள் நடைபெற்ற போரின் இறுதியில், தேவி தன் சக்கராயுதத்தால் பாணாசுரனை மாய்த்தாள். தேவர்கள் மகிழ்வுடன் தேவியைத் துதித்தனர். பின்பு அந்த கடற்கரையிலேயே கன்னியாகுமரியாக அனைவருக்கும் அருள்பாலிக்கிறார் அம்பிகை.

பகவதி அம்மன் மூக்கில் ஒரு ரத்தினக்கல் பதித்த மூக்குத்தி உள்ளது. இதை நாக ரத்தினம் என்றழைக்கின்றனர். இக்கல் ராஜ நாக பாம்பிலிருந்து உருவாவதாகக் கூறப்படுகிறது.

அதன் ஒளி கடல் வரைக்கும் வீசும். இதனால் ஒரு முறை ஒரு கப்பலின் மாலுமி கலங்கரை விளக்கம் என்று நினைத்து அந்த ஒளியை நோக்கி வந்து பாறையில் மோதிவிட்டான். அதனால் மேலும் விபத்துகள் நடக்காமல் தடுக்க அப்பகுதி கதவினால் மூடப்பட்டுவிட்டது. வருடத்திற்கு 5 முறைகள் மட்டுமே அந்த கதவு திறக்கப்படும்.

ஸ்ரீ துர்கை அம்மனுக்காக பரசுராமர் 108 ஆலயங்களைக் கட்டினார். அதில் இதுவும் ஒன்றாகும். தந்திர சூடாமணி கூறும் 51 சக்தி பீடங்களில் இது தேவியின் முதுகுப் பகுதி விழுந்த இடமாகக் கருதப்படுகிறது.

பாரதத்தின் தென் எல்லையைக் காத்து நிற்கும் கன்னி பகவதியின் பிரசித்தி பெற்ற வைகாசி விசாக திருவிழா இவ்வருடம், மே மாதம் 12-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 9-ஆம் திருவிழாவான 20-ஆம் தேதி அதிகாலை 4.00 மணிக்கு சிறப்பு அபிஷேகமும் நடைபெறும். காலை 8 மணிக்கு திருத்தேரோட்டம் நடைபெறுகின்றது.

10-ஆம் திருவிழாவான 21-ஆம் தேதி காலை 6.30 மணிக்கு மேல் முக்கடல் சங்கமத்தில் அம்மனுக்கு ஆராட்டு நிகழ்ச்சியும், 10.00 மணிக்கு சிறப்பு அபிஷேகமும் நடைபெறும். இரவு 9.00 மணிக்கு தெப்பத் திருவிழாவும் நடைபெறுகின்றது.

- என். பாலசுப்ரமணியன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com