அறிவு பட்டின தலைவாயில்

"நான் அறிவு என்னும் பட்டினம். அலி அதன் தலைவாயில்'' என்று போற்றி புகழ்ந்து உரைத்த புண்ணிய நபி (ஸல்) அவர்களின் கண்ணியம் காக்கும் வண்ணம்
அறிவு பட்டின தலைவாயில்
Published on
Updated on
3 min read

"நான் அறிவு என்னும் பட்டினம். அலி அதன் தலைவாயில்'' என்று போற்றி புகழ்ந்து உரைத்த புண்ணிய நபி (ஸல்) அவர்களின் கண்ணியம் காக்கும் வண்ணம் மென்மையான நாவினால் பொன்னான மொழிகளைப் பொழியும் வாயுடைய ஆய்வாளராக விளங்கினார் அலி (ரலி).

முதற்கலிபா அபூபக்கர் (ரலி) அவர்களின் ஆட்சியில் மாட்சியுடைய குர்ஆனின் அத்தியாயங்களை அறிவிக்கப்பட்ட காலமுறையில் வரிசைப் படுத்தியவர்கள் அலி (ரலி). அலி (ரலி) அரபி மொழிக்கு இலக்கணம் வகுத்தார். அதனால் அலி (ரலி) அரபி இலக்கணத்தின் தந்தை என்று அழைக்கப்பட்டார். அலி (ரலி) அவர்களிடம் அரபி இலக்கணம் கற்ற அபுல் அஸ்வத்து அலி வேண்டியபடி இலக்கண விதிகளை எழுதி கொடுத்தார். அதுவே அரபி இலக்கணத்தின் ஆரம்பம். 

அரபி கவிஞர்கள் அரசர்களையும் செல்வர்களையும் பாரம்பர்யத்தைப் புகழ்ந்தும் அவர்களின் காதலிகளின் அங்க அழகை வர்ணித்தும் எழுதியதை மாற்றி மாமறை நெறிக்கு மாற்றம் இன்றி கருத்தோடு கூடிய பொருத்தமான கவிதைகள் எழுதும் ஏற்றத்தை ஏற்படுத்தினார். அவர்களின் கடிதங்களும் கட்டளைகளும் வளமான கருத்துகளை நளினமான நடையில் நவிலும் நல்லுரைகள். அவற்றில் சில. பொருளில் புதியது நல்லது. நட்பில் பழையது நல்லது. அறிவு அதிகமானால் பேச்சு குறைந்து விடும். கால் தவறினால் காயம் ஏற்படும். சொல் தவறினால் மாயும் வம்பு வரும். 

ஒருமுறை பத்து அறிஞர்கள் அலி (ரலி) அவர்களிடம் வந்து "அறிவு, செல்வத்தை விட சிறந்ததா?'' என்ற ஒரே கேள்வியைக் கேட்டு பத்து பதில்களைத் தருமாறு வேண்டினர். அலி (ரலி) அளித்த பதில்கள்.
1. அறிவு இறைதூதர்களின் வாரிசுகளுக்கு உரியது. செல்வம் செருக்குற்ற பிர்அவ்னிடமிருந்து பெறப்படுவது. 2. செல்வத்தை நீங்கள் பாதுகாக்கிறீர்கள். அறிவு உங்களைப் பாதுகாக்கிறது. 3. செல்வருக்குப் பகைவர்கள் பலர் இருப்பர். அறிஞர்கள் நண்பர்களைப் பெற்றிருப்பர். 4. செல்வம் கொடுக்க குறையும். அறிவு கொடுக்க கொடுக்க கூடும்.  5. செல்வன் கருமிஆவதும் உண்டு. அறிஞன் தாராள தன்மையில் குறைய மாட்டான்.  6. செல்வம் திருடப்படும். அறிவைக் களவாட முடியாது. 
7. மறுமையில் செல்வம் கேள்வி கணக்கிற்கு உள்ளாகும். அறிவின் செலவு சிறப்பு பெறும். 
8. செல்வம் காலத்தால் அழியும். அறிவு காலத்தை வெல்லும். 9. அறிவால் செல்வம் பெருகும். செல்வம் அறிவை அழிக்கும். 10. அறிவால் அல்லாஹ்வை அறியலாம். செல்வச் செருக்கு இறைவனிடமிருந்து விலக்கி வேதனையில் வீழ்த்தும். 

அலி (ரலி) அவர்களிடம் ஒருவர் "ஒரு வீட்டில் ஒருவனை அடைத்து சன்னலோ கதவோ வேறு வகை வழி எதுவுமின்றி சுவர் எழுப்பி மூடிவிட்டால் அவனுக்கு உணவு எவ்வழியில் வரும்?'' என்று ஏளனமாக கேட்டார். அலி (ரலி) "இறப்பு எவ்வழியாக வருமோ அவ்வழியாக உணவும் வரும்'' என்று கேள்வி கேட்டவன் திகைக்கும் வண்ணம் மிகைக்கும் பதிலைக் கூறினார்கள். ஒரு நாத்திகன் "மறுமை இல்லை' என்று வாதிட்டான். அலி (ரலி) "உன் வாதப்படி மறுமை இல்லையேல் இருவரும் தப்பிப்போம். என் அறிவுக்கு எட்டிய மறுமை இருந்தால் நான் தப்பிப்பேன். நீ தண்டிக்கப்படுவாய்'' என்ற பதிலைக் கேட்டு நாத்திகன் மறுமையை நம்பினான்.
ஒவ்வொரு நாளும் பலர் அலி (ரலி) அவர்களிடம் கேள்விகளைக் கேட்பார்கள். அவற்றில் சில கேள்வி பதில்கள்.
கேள்வி: குட்டி போடும் பிராணிகள் எவை? முட்டையிட்டு குஞ்சு பொறிப்பவை எவை? என்பதை எப்படி அறிவது? 
பதில்: எப்பிராணிகள் வெளிப்புறத்தில் காதுகளைப் பெற்றிருக்கிறதோ அவை குட்டிபோடும் பிராணிகள். உட்புறத்தில் காதுகளை உடைய பிராணிகள் முட்டையிட்டு குஞ்சு பொறிப்பவை.
கேள்வி: கிழக்கிற்கும் மேற்கிற்கும் உள்ள தொலைவு எவ்வளவு? 
பதில்: ஒருநாளில் சூரியன் எவ்வளவு தொலைவைக் கடக்கிறதோ அவ்வளவே கிழக்கிற்கும் மேற்கிற்கும் உள்ள தொலைவு.
கேள்வி: மனிதன் சார்ந்து நிற்பவனா? பிற துணையின்றி சுயமே செயல்படும் சுதந்திரமானவனா? 
பதில்: அலி (ரலி) கேள்வி கேட்டவனை ஒரு காலைத் தூக்கி கொண்டு நிற்க சொன்னார்கள். நின்றான். இன்னொரு காலையும் தூக்கிக் கொண்டு நிற்க சொன்னதும் எப்படி முடியும்? என்று இயலாமையை இயம்பினான் வியப்புறு கேள்வி கேட்டவன். இதுவே சுய சுதந்திரத்திற்கும் சார்ந்து நிற்பதற்கும் உரிய விளக்கம் என்றார்கள் அலி (ரலி). 
கேள்வி: ஒன்று முதல் ஒன்பது வரையுள்ள எண்களால் மீதமின்றி வகுபடும் எண் எது?
பதில்: மாதத்தின் நாள்கள் 30. வாரத்தின் நாள்கள் 7. மாதங்கள் 12. இவற்றின் பெருக்கலே உன் கேள்விக்கு விடை.
ஒரு பெண் அழுது அலறிக்கொண்டு ஓடி வந்தாள். அவளின் குழந்தை ஒன்று நீர்க்குழாயின் மீது ஏறி அமர்ந்து இறங்க மறுக்கிறது. சொல்வதை சைகையைப் புரியும் வயதில்லை. பாலைக் காட்டினாலும் காலை இறக்கவில்லை செய்வது அறியேன், செப்புங்கள் வழியை என்று பதறினாள். அலி (ரலி) கூரை வரை இன்னொரு குழந்தையை கொண்டு செல்லுங்கள். மற்றொரு குழந்தையை பார்த்ததும் மேலிருக்கும் குழந்தை கீழிருக்கும் குழந்தையின் பக்கம் வரும். பரிதவித்த தாய் மற்றொரு குழந்தையை கூரை வரை கொண்டு சென்றாள். குழாய் மேலிருந்த குழந்தை கூரைக்குத் தவழ்ந்து வந்தது.
அலி (ரலி) வேகமாக வெளியில் புறப்படுகையில் ஓடிவந்த பெண் கேட்டாள், 
கேள்வி: என் உடன் பிறந்தவன் இறந்து விட்டான். அறுநூறு திர்ஹங்கள் அவனின் சொத்து. அவனின் தங்கையாகிய எனக்குரிய பங்கு ஒரு திர்ஹம் தானா? (அக்குடும்ப உறுப்பினர்களை அலி (ரலி) அறிந்திருந்தார்).
 பதில்: இறந்தவனின் இரு பெண் மக்களுக்கு நானூறும், தாய்க்கு நூறும் பன்னிரண்டு சகோதரர்களுக்குத் தலா இரு திர்ஹமும் சரியான பங்கீடு.
கேள்வி: யானையின் எடையை எவ்வாறு அறியலாம்? (நவீன கணக்கிடும் கருவிகள் இல்லாத காலத்தில்...)
பதில்: யானையை கப்பலில் ஏற்றுங்கள், ஏற்றியதும் கப்பல் கடலில் அமிழும் அளவைக்  குறித்துக் கொள்ளுங்கள். யானையை இறக்கி விடுங்கள். யானையை ஏற்றியபொழுது கப்பல் கடலில் அமிழும் வரை கற்களைப் போடுங்கள். அக்கற்களை எடுத்து எடை போடுங்கள். அந்த கற்களின் எடையே யானையின் எடை. 
கேள்வி: என் தலையில் எத்தனை உரோமங்கள் உள்ளன? 
பதில்: நான் கூறுவதை எண்ணி சரிபார்க்க உங்களால் முடியுமா? 
கேட்டவர்: முடியாது. 
பதில்: உங்களால் உறுதிசெய்து கொள்ள முடியாத கேள்விகளைக் கேட்காதீர்கள். 
அலி (ரலி) அவர்கள் அறிவார்ந்த பதில்களால் மக்களுக்கு அறிவூட்டியவாறு நாமும் அறிவை ஆக்கவழியில் பயன்படுத்தி பயனுற ஊக்கம் ஊட்ட வேண்டும்.
- மு.அ. அபுல் அமீன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com