பொசுக்கும் பொறாமை

பொறாமை என்னும் தமிழ்ச்சொல்லுக்கு அரபி சொல் ஹஸத். பொறாமை பெரும் பாவ செயல்களுக்கு அடித்தளமாய் ஆதாரமாய் அமைகிறது.
பொசுக்கும் பொறாமை
Updated on
2 min read

பொறாமை என்னும் தமிழ்ச்சொல்லுக்கு அரபி சொல் ஹஸத். பொறாமை பெரும் பாவ செயல்களுக்கு அடித்தளமாய் ஆதாரமாய் அமைகிறது. பொறாமை பகையை உண்டாக்கி உறவைத் துண்டித்துவிடும். பொறாமையினால் ஏற்படும் விரோதம் விபரீதமாய் கொலையில் முடிவதும் உண்டு. நெஞ்சில் வஞ்சனையின்றி வாழ்வது ஒழுக்கநெறி. வஞ்சனையின் வெளிப்பாடே பொறாமை. ஒழுக்கத்திற்கு ஒவ்வாத அழுக்கான பொறாமை இழுக்கிற்கு இழுத்து சென்று வழுக்கி விழ வைக்கும். பகைவரின்றி தனக்குத்தானே தீமையைத் தேடி கொள்வர். பொறாமை கொள்வோன் தன் செல்வத்தையும் நன்மதிப்பையும் இழந்து இழிவுறும் நிகழ்ச்சிகளை இன்னும் நாம் காண்கிறோம்.

"மனிதர்கள் தங்களுக்குள் பொறாமை கொள்ளாத காலமெல்லாம் நன்மையின் மீதே நிலைத்து இருப்பார்கள்'' என்ற நீதர் நபி (ஸல்) அவர்களின் நீதியை நினைவுறுத்துகிறார் லமுரா இப்னு ஸஃலபா (ரலி) நூல்- தப்ரானி. ஒரே வகுப்பினராக இருந்த மனிதர்கள் பொறாமையால் பல வகுப்பினர்களாக பிரிந்ததைப் புரிந்து பொறாமையைத் தவிர்க்க போதிக்கிறது நீதிநெறி குர்ஆனின் 10-19 ஆவது வசனம். அல்லாஹ் மனிதர்களில் சிலருக்கு வழங்கியுள்ள அருளைப் பற்றி மற்றவர்கள் பொறாமை கொள்ளுதல் கூடாது என்று கூறுகிறான் அருமறை குர்ஆனின் 4-54 ஆவது வசனத்தில்.

கண்மணியாம் காருண்யநபி (ஸல்) அவர்கள் பொறாமையை பற்றி போதித்த பொன்மொழிகள் "நீங்கள் ஒருவருக்கொருவர் பொறாமை படாதீர்கள்'' அறிவிப்பவர்- அனஸ் (ரலி) நூல் -புகாரி, முஸ்லிம். அபூஹுரைரா (ரலி) அறிவித்த அண்ணல் நபி (ஸல்) அவர்களின் கண்ணியம் காக்கும் புண்ணிய மொழிகள் நெருப்பு விறகைக் கரிப்பது போல பொறாமை நன்மைகளைப் பொசுக்கிவிடும்'' நூல் அபூதாவூது, ""ஒருவர் செய்யும் வியாபாரத்தில் அவர் வளமாய் வாழ்வதைக் கண்டு பொறாமை கொண்டு அதே வியாபாரத்தை அதே இடத்தில் - பகுதியில் துவக்கி அவரின் வியாபாரத்தில் குறுக்கிடுவது கூடாது'' நூல் -புகாரி, முஸ்லிம். "ஒருவரின் வளமான வாழ்வைக் கண்டு பொறாமை கொண்டு அவரின் குறையை துருவி துப்பு துலக்கி பகை கொள்வது தகையல்ல'' நூல் -முஸ்லிம்.

முஹம்மது நபி (ஸல்) அவர்களை எதிர்த்து வசைபாடி வதைத்து வன்கொடுமை செய்த அபூஜஹில் இறக்கும் பொழுதும் அவனின் பெருமையை பேச தவறவில்லை. அந்த கொடியவன் அபூஜஹ்லிடம் அவனின் மருமகன் மிஸ்வர் இப்னு மக்ரமா (ரலி) நிகழ்த்திய உரையாடல். 

மிஸ்வர் - அண்ணல் நபி (ஸல்) அவர்கள் எங்காவது எப்பொழுதாவது பொய் புகன்றார்களா?
அபூஜஹ்ல்- சிறு வயது முதலே "முஹம்மதை நான் நன்கு அறிவேன். அவர் ஒருபொழுதும் நேர்மை பிறழ்ந்து நடக்கவில்லை. நெறி தவறி பொய் 
சொன்னதில்லை.

மிஸ்வர் - எப்பொழுதும் பொய் சொல்லாத மெய் நபி (ஸல்) அவர்கள் இப்பொழுது எப்படி தன்னை இறைவனின் தூதர் என்று பொய் சொல்வார்கள்?
அபூஜஹ்ல் - இப்பொழுதும் அவர் பொய் பேசவில்லை. அவர் தன்னை இறைதூதர் என்று இயம்புவதும் பொய்யில்லை. முற்றிலும் அவர் உண்மையானவர்.

மிஸ்வர்- உண்மையை உணர்ந்த நீங்கள் உண்மையை ஒப்புக்கொள்ளாது பொய் என்று பொய் சொல்லி பகை கொள்ளுதல் காரணம் என்ன?
அபூஜஹ்ல்- எங்கள் குடும்பத்திற்கும் முஹம்மதின் பனூஹாசிம் குடும்பத்திற்கும் போட்டி பொறாமை தொடர்ந்து நிலவுகிறது. அவர்கள் ஒரு நல்லதை செய்தால் அவர்களுக்குப் போட்டியாக நாங்களும் நல்லது செய்வோம். அவர்களை விட நாங்கள் தாழ்ந்தவர்கள் அல்ல என்ற போட்டி பொறாமை எங்களிடம் உண்டு. அப்படிப்பட்ட நாங்கள் தாழ்ந்து போகும் அளவில் ஹாசிம் குடும்பத்திலிருந்து முஹம்மது இறைத்தூதராக வந்ததை எங்களால் பொறுத்து கொள்ளமுடியாது. அந்த பொறாமையே நாங்கள் அவரை வெறுக்க காரணம்! அபூஜஹ்லும் அவனைப் பின்பற்றியோரும் அழிய இந்த பொறாமையே காரணம்.

அண்ணல் நபி (ஸல்) அவர்களுடன் மதீனாவிலுள்ள மஸ்ஜிதுந்நபவியில் தோழர்கள் அமர்ந்திருந்தனர். அண்ணல் நபி (ஸல்) அவர்கள் "இப்பொழுது ஒரு சுவனவாசி வருவார்'' என்றார்கள். அப்பொழுது அன்சாரி தோழர் ஒருவர் உளு (தொழுகைக்கு கழுவிய) செய்த நீர் தாடியில் சொட்ட காலணியை இடதுகையில் பற்றியபடி சென்றார். அடுத்தநாளும் அதற்கு அடுத்த மூன்றாவது நாளும் நந்நபி (ஸல்) அவர்கள் அந்நன்மொழியை நவில அதே அன்சாரி தோழர் அதே கோலத்தில் நடந்து சென்றார். அப்துல்லாஹ் பின் அம்ரு இப்னு ஆஸ் (ரலி) அவரைத் தொடர்ந்து சென்று அவரின் அனுமதி பெற்று அவருடன் மூன்று நாள்கள் தங்கினார். ஐங்காலத் தொழுகை, திக்ரு (இறை துதி) தவிர அதிக அமல்கள் (வணக்க வழிபாடுகள்) எதுவும் அவர் செய்யவில்லை. அவருடன் தங்கியவர் மூன்று நாள்கள் கழிந்தபின் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அறிவித்ததைக் கூறி அந்நிலை எய்தும் காரணம் எதையும் உங்களிடம் காணவில்லை என்று வியந்தார். "

"என்னிடம் என்ன உள்ளதோ அதுவே எனக்கு போதும் என்று திருப்தி அடைகிறேன். அல்லாஹ்வின் அருள்கொடைகளை அதிகம் பெற்றவர்களைக் கண்டு நான் பொறாமை கொண்டதில்லை'' என்று பதில் கூறினார் அன்சாரி தோழர். பொறாமை இல்லாத பொறுமை மறுமையிலும் நற்பேற்றை நல்கும் என்பதை உணர்ந்தார் அபுதுல்லாஹ் பின் அம்ரு இப்னு ஆஸ் (ரலி) நூல் -நஸஈ.

பொறாமை கொள்ளாது பொறுமை காத்து போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து என்று உள்ள உறுதியோடு உள்ளதைக் கொண்டு திருப்தியுடன் வாழ்ந்தால் வல்ல அல்லாஹ்வின் அருளால் எல்லாமே நல்லதாக அமையும்.
- மு.அ. அபுல் அமீன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com