விநாயக வடிவம் பிரணவத்தைக் குறிக்கும். விநாயகரை வணங்கியே எக்காரியத்தையும் தொடங்குதல், "ஓம்' என்ற பிரணவத்தைச் சொல்லி வழிபாட்டைத் தொடங்குவதைக் குறிக்கிறது. கணபதி மந்திரம், "ஓம் கம் கணபதயே நம' என்பதாகும். அம்மந்திரத்தை ஜபித்தால் விநாயகர் அருள் பூரணமாகக் கிட்டும் என்பர். கணபதியோடு திருமகளைச் சேர்த்து வழிபடுவது வட இந்தியாவில் வழக்கில் உள்ளது. வாழ்வில் வெற்றியும் செல்வமும் பெருக வேண்டும் என்பதற்காக இவ்வாறு வழிபடுகின்றனர்.
விநாயக வழிபாடு மிக எளிமையானது. "பிடித்து வைத்தால் பிள்ளையார்' என்பது பழமொழி! அருகம்புல்லை இட்டு வழிபட்டால் போதும் அவர் அதனை மகிழ்ந்து ஏற்பார். விநாயகர் வழிபாட்டில் யோக நெறியைக் காட்டுவது ஒüவையாரின் விநாயகர் அகவல் ஆகும்.
திருச்சி மாநகரில் திருச்சி ரயில்வே ஐங்க்ஷன் கல்லுக்குழி ரயில்வே காலனியில் உள்ள "ஓம் ஸ்ரீ வலம்புரி சிவசக்தி செல்வ விநாயகர்' திருக்கோயில் உருவான விதமே ஓர் அபூர்வமான விஷயமாகும். பல ஆண்டுகளுக்கு முன்பு ரயில்வே காலனி குடியிருப்பில் ரயில்வே ஊழியர் ஒருவர் குடியிருந்த வீட்டின் பின்புறம் காம்பவுண்டில் அரசும் வேம்பும் சேர்ந்தாற்போல் வளர்ந்து இருந்தது. அந்த குடும்பத்தினர் அந்த மரங்களை தெய்வமாக விளக்கேற்றி வழிபட்டு வந்தார்கள். சில ஆண்டுகள் கழித்து அந்த ஊழியர் மாற்றலாகிவிட, அந்த வீட்டிற்கு வேறு ஒருவர் புதிதாக குடி வந்தார். அவர், "தன் வீட்டின் பின்புறம் உள்ள வேம்பு, அரச மரங்கள் அநாவசியமாக உள்ளதே' என்று எண்ணி அந்த மரங்களை தமது மகனை விட்டு வெட்டினார். மரங்களை வெட்டிய இரண்டொரு நாளில் வெட்டியவரின் கை, கால்கள் விளங்காமல் போக, பெற்றோர் திடுக்கிட்டனர். பலவித மருத்துவங்கள் செய்தும் பலனில்லை.
அவர்கள் வீட்டிற்கு எதிரில் உள்ள மேடான இடத்தில் விளக்கேற்றி வந்தால் அவரது மகன் சரியாகி விடுவான் என்று ஒருவர் சொல்லவும் அதன்படி விளக்கேற்றி வணங்கி வந்தனர். மேலும் அந்த மேட்டில் அரசு, வேம்பு மரங்களை வைத்து கண்ணும் கருத்துமாக வளர்த்தனர். மரங்களும் செழிப்புற்று வளர்ந்தது. அவர்களது மகனும் பூரண குணமடைந்து தற்போது சந்தோஷமாக வாழ்கிறார்கள். இதை கண்ணுற்ற காலனி வாசிகளும் அந்த மரங்களை பகவதி அம்மனாக போற்றி வணங்கி வருகிறார்கள்.
இவ்வளவு சக்தி வாய்ந்த இடத்தில் அம்மனின் மகனான பிள்ளையாரை வைத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று கருதி, காலனி வாசிகளின் ஒத்துழைப்போடு விநாயகரை வைத்து வணங்கத் தொடங்கினார்கள். இப்படியாக, "ஸ்ரீ வலம்புரி சிவசக்தி செல்வ விநாயகர்' திருக்கோயில் உருவானது!
இவ்வாலயம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. தலவிருட்சம் அரசு, வேம்பு மரங்களாகும். மேலும் ஆலயத்தில் தட்சிணாமூர்த்தி, ராமலிங்கேஸ்வரர் சமேத பர்வதவர்த்தினி அம்பாள், நந்தீஸ்வரர், சண்டிகேஸ்வரர், ஐயப்பன், ஸ்ரீ பகவதியம்மன், ஸ்ரீ கிருஷ்ணர், வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ சுப்பிரமணியர், ஸ்ரீ துர்க்கை, நவக்கிரகங்கள், ஸ்ரீ ஆஞ்சநேயர், ஸ்ரீ கருப்பண்ணசாமி ஆகிய தெய்வங்கள் அமைந்துள்ளனர்.
இத்திருக்கோயில், திருச்சிராப்பள்ளி மத்தியப்பேருந்து நிலையத்திலிருந்து 1 கி.மீ தொலைவில் ரயில்வே காலனியில் உள்ளது. இவ்வாலயத்தில் கும்பாபிஷேகம் நடக்க இருப்பதை முன்னிட்டு, திருப்பணி வேலைகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. பக்தர்கள் இத்திருப்பணியில் பங்குகொண்டு விநாயகப் பெருமானின் நல்லருள் பெறலாம்.
தொடர்புக்கு: 88833 11143.
- கீர்த்திவாசன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.