பூமியைக் காத்த பூவராகர்!

ஸ்ரீமுஷ்ணம் ஸ்ரீ பூவராகப் பெருமாள் திருக்கோயில் வெள்ளாற்றின் தென்கரையில் விருத்தாசலத்திற்கு தென்கிழக்கே சுமார் 21 கி.மீ. தொலைவில் உள்ளது.
பூமியைக் காத்த பூவராகர்!
Published on
Updated on
1 min read

ஸ்ரீ வராக ஜெயந்தி 16-4-2017
ஸ்ரீமுஷ்ணம் ஸ்ரீ பூவராகப் பெருமாள் திருக்கோயில் வெள்ளாற்றின் தென்கரையில் விருத்தாசலத்திற்கு தென்கிழக்கே சுமார் 21 கி.மீ. தொலைவில் உள்ளது.

ஸ்ரீரங்கம், திருப்பதி, வானமாமலை, சாளக்கிராமம், புஷ்கரம், நைமிசாரண்யம், பத்ரிகாச்ரமம் ஆகிய ஷேத்திரங்களுடன் இணைந்து ஸ்ரீமுஷ்ணமும் சுயம்பு ஷேத்திரமாக விளங்குகிறது.

ஒருசமயம், இரண்யாட்சன் என்ற அசுரன் பூலோகத்தை கடலுக்குள் தன் வலிமையால் மூழ்கடித்தான். இதனால் தேவர்கள் மிகவும் அச்சமுற்று பிரம்மாவை நாடினர். பூலோகத்தை மீட்பதற்காக தியானம் செய்தார். அப்போது அவருடைய வலது நாசியில் இருந்து பன்றி ரூபம் வெளிப்பட்டது. அந்த திவ்யமான பன்றி ரூபம் தன் உருவத்தை அதிகரித்துக் கொண்டே சென்றது. பகவான் விஷ்ணு பன்றி ரூபத்தில் அவதரித்திருக்கிறார் என்று அனைவரும் உணர்ந்தனர்.

கடலுக்குள் சென்ற வராகபகவான் ஏழு தீவுகள் கொண்ட பூலோகத்திற்கு எந்த சிறு இடரும் ஏற்படாவண்ணம் சாதுர்யமாக தூக்கியபடி நீரிலிருந்து வெளிப்பட்டார். இதைக்கண்ட இரண்யாட்சன் கோபம் கொண்டு வராகமூர்த்தியைத் தாக்க, இருவருக்கும் கடுமையான யுத்தம் நடந்தது. இறுதியில் அசுரனை வீழ்த்தி பூமியைக் காத்தருளினார். பிரம்மாவும் தேவர்களும் வராக மூர்த்தியை வாழ்த்தித் துதித்தனர்.

மீண்டும் வைகுண்டம் திரும்பிச் செல்ல வராகர் எண்ணியபோது பூதேவி தன்னுடன் தங்கியிருக்கும்படி பகவானை வேண்டிக் கொண்டதாக நாரதர் புராணம் கூறுகிறது. பூமிதேவியின் வேண்டுகோளை ஏற்று ஸ்ரீ முஷ்ணம் திருத்தலத்திலேயே பகவான் கோயில் கொண்டதாக ஐதீகம்.

ஸ்ரீமுஷ்ணம் திருக்கோயில் ஏழுநிலை கொண்ட கம்பீரமான ராஜகோபுரமாகும். திருக்கோயிலின் கருவறையில் வீற்றிருக்கும் மூலவரைத் தரிசிக்கும் முன்பாக, தனி சந்நிதியில் அமைந்தருளும் ஸ்ரீநிவாசப் பெருமாளை தரிசனம் செய்ய வேண்டும். கோயிலின் தென் கிழக்குத் திசையில் நித்ய புஷ்கரணி அமைந்துள்ளது. இதில் ஸ்நானம் செய்து அருகிலேயே சந்நிதி கொண்டுள்ள ஸ்ரீ லட்சுமி நாராயணரின் தரிசனம் பெறுவது சிறப்பு.

இவ்வாலயத்தில் பூவராக சுவாமி மூலவராக நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார். தம் இடுப்பில் இருக்கும் சங்கு, சக்கரத்தைத் தன் இரு திருக்கரங்களால் மறைத்தவண்ணம் திருமேனி மேற்கு திசையை நோக்கியும் திருமுகம் தெற்கு திசையை நோக்கியும் அமையப்பெற்று அருள்காட்சி அருள்கிறார். உற்சவ மூர்த்தி யக்ஞ வராகர் என்ற திருநாமத்துடன் ஸ்ரீ தேவி பூதேவி சமேதராக அருள்பாலிக்கிறார். தாயாருக்கு அம்புஜவல்லி என்பது திருநாமம்!

இத்திருக்கோயிலில் ஆண்டிற்கு இரண்டு பிரம்மோற்சவங்கள் விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன. பகவான் இங்கு பன்றி ரூபத்தில் வீற்றிருப்பதால் பெருமாளுக்கு இங்கு கோரைக்கிழங்கு விசேஷ நைவேத்தியமாக செய்யப்படுகிறது. பகவானை நேரிடையாக தரிசிக்க மிகுந்த விருப்பம் கொண்டுள்ள பக்தர்கள் இங்கு வந்து பூவராக சுவாமியை தரிசித்து பிரார்த்தனை செய்தால் அவர்களது விருப்பங்கள் நிறைவேறும். ஆனந்தமான வாழ்வும் கிட்டும்.
- டி.எம். இரத்தினவேல்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com