ஸ்ரீ ரமணரின் பொன்மொழிகள்!

ஸ்ரீ ரமணரின் பெருமையை உணர்ந்து முதன் முதலில் அவருக்கு ரிஷி பட்டம் கொடுத்து ரமண மஹரிஷி என்று அழைத்தவர் காவ்ய கண்ட கணபதி அவர்கள். தற்காலத்தில் ரிஷியாக அழைக்கப்பட்டவர் அவர் ஒருவரே.
ஸ்ரீ ரமணரின் பொன்மொழிகள்!
Updated on
3 min read

ஸ்ரீ ரமணரின் பெருமையை உணர்ந்து முதன் முதலில் அவருக்கு ரிஷி பட்டம் கொடுத்து ரமண மஹரிஷி என்று அழைத்தவர் காவ்ய கண்ட கணபதி அவர்கள். தற்காலத்தில் ரிஷியாக அழைக்கப்பட்டவர் அவர் ஒருவரே.

ஒரு முறை பால் பிரான்ட்டன் என்ற ஆங்கிலேயர், ஆன்மிக விஷயங்களை விவாதிப்பதற்காக, காஞ்சி மகா பெரியவரிடம் வந்தார். அப்பொழுது ஸ்ரீ பெரியவர் அவரிடம், ""ஸ்ரீ ரமணர் ஞான மார்க்கத்துல போயிண்டிருக்கார். நான் கர்ம மார்க்கத்துலே போயிண்டிருக்கேன். உன்னோட கேள்விகளுக்கெல்லாம் சரியான பதில் தந்து, உன் சந்தேகங்களையெல்லாம் தீர்த்துவைக்க அவரால்தான் முடியும்'' என்று சொல்லி, பால் பிரான்ட்டனை ஸ்ரீரமணரிடம் அனுப்பி வைத்தார். பால் பிரான்ட்டனும் அதன்படியே ரமணரை வந்து சந்தித்து, தன்னுடைய சந்தேகங்கள் நீங்கப் பெற்று, பின்னாளில் அவரின் பக்தரும் ஆகி, அவரைப் பற்றிப் புத்தகமே எழுதினார். அத்தகைய மகான் ரமணரின் ஜயந்தி தினம் வரும் ஜனவரி 12 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

அவருடைய சிறந்த ஆன்மீக சிந்தனைகளை இங்கு நினைவு கூர்வோம்.
* மெளனமாக இருப்பது மிகவும் நல்லது. அது ஒரு விரதம் தான். ஆனால் வாயை மட்டும் மூடிக் கொண்டு மனம் அலைபாய்ந்து கொண்டிருக்குமானால் அது மெளனமாகாது. அதானால் எந்தப் பயனும் இல்லை.
* நான் என்பது எங்கேயிருந்து புறப்படுகிறதோ அதை கவனித்தால் மனம் அங்கே ஒன்றிவிடும். அதுவே தவம்.
* ஒரு மந்திரத்தை ஜபம் பண்ணும்போது மந்திரத்வனி (ஓசை) எங்கிருந்து புறப்படுகிறது என்று கவனித்தால் மனம் அங்கே ஒன்றிணைகிறது. கரைந்து போகிறது, அதுதான் தவம்.
* சாதனைக்கு தேவை சத்துவ உணவும் நல்ல சத்சங்கமுமே. மாமிச உணவு கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டியது.
* கடவுளை ஒவ்வொருவரும் அவர்களுடைய இதயத்தில் தேடினால், கடவுளை எளிதில் காணலாம்.
* இறைவன் ஒருவன். நாமெல்லாம் அவன் ஏவலுக்கு ஆட்பட்ட கருவிகளே! இதனை ஒவ்வொருவரும் உணர்ந்தால் பணிவு வராமல் போகாது.
* தீமைகளைச் செய்யாதீர்கள். புதிய வாசனைகளைச் சேர்த்துக் கொள்ளாதீர். தேவையற்ற சுமைகளைச் சுமக்காமல் இருங்கள்.
* மனதை எண்ணங்களிலிருந்து விடுவிப்பதே சாதனையின் நோக்கமாகும்.
* தியானத்தில் ஆன்ம தியானம் எனப்படுவதே சிறந்தது. ஒவ்வொருவருடைய மனப் பக்குவத்திற்கு ஏற்றவாறு தியான முறைகளைக் கை கொள்ள வேண்டும்.
* மந்திரங்களை இடைவிடாது சொல்வதால் மனம் அடங்கும். பின் மந்திரம், மனம், மூச்சு என எல்லாம் ஒன்றே என்று ஆகும்.
* ஆத்ம விசாரமே தவம், யோகம், மந்திரம், தவம் எல்லாம். ஒருவன் தான் யார் என்று அறிந்து கொள்ளத்தான். அதுவே மிகவும் முக்கியம்.
* இறைவனை, ஞானத்தை ஒவ்வொருவரும் முயன்றுதான் அடைய வேண்டும். அதனை அடைய குறுக்கு வழி எதுவுமில்லை.
* நான் என்ற அகந்தை எல்லாச் செயல்களையும் நாமே செய்கிறோம் என்ற தவறான கருத்தை உண்டாக்குகிறது. உண்மையில் நாம் ஒரு கருவியே! கர்த்தா அல்ல. இதை உணர்ந்துவிட்டால் அகந்தை நம்மிடமிருந்து வெளியேறி விடும்.
* எவ்வளவுக்கு எவ்வளவு பணிந்து நடக்கிறோமோ அவ்வளவுக்கவ்வளவு நன்மையுண்டு.
* நம் மனம் யாரிடம் வசப்படுகிறதோ அவரே சரியான குரு.
* பரம்பொருளைத் தொடர்ந்து விடாமல் பற்றி நிற்பதே சமாதி எனப்படும்.
* ஒரு மனிதன் தனது வாழ்க்கையில் தேடிக்கொள்ளும் நற்பலன்கள் அதிகமாக இருந்தால், அதை ஒட்டி அவனுக்கு மரணத்துக்குப் பின் இனிய அனுபவம் ஏற்படுகிறது. கெட்ட பலன்களே அதிகமாக இருந்தால் துன்பம் நிறைந்த அனுபவம் உண்டாகிறது.
* முயற்சி செய்து மனத்தை எண்ணங்களிலிருந்து விடுவிக்க வேண்டும். அந்த நிலையில் தொடர்ந்து நாம் இருப்போமேயானால் அதுவே நமது சாதனைக்ளுக்கு
வழிவகுக்கும்.
* நம்மால் எதிலும் தனித்து செயல்பட முடியவில்லை என்றால் அதற்குக் காரணம் நமது வலிமை அற்ற மனம் தான்.
* தவறான செயல்களைச் செய்துவிட்டு, அகந்தையின் காரணமாக அதை மறைத்தல் கூடாது. எனவே குற்றங்களைச் செய்யும் பழக்கத்தை விட்டுவிட்டு நல்ல ஒழுக்கத்துடன் வாழ பழகுதலே சிறப்பு.
* மனம் என்பதோ ஆத்ம சொரூபத்திலுள்ள ஓர் அதிசய சக்தி! அது சகல நினைவுகளையும் தோற்றுவிக்கிறது. நினைவுகளையெல்லாம் நீக்கிப் பார்க்கின்றபோது தனியாய் மனம் என்று ஒரு பொருள் இல்லை. ஆகையினால் நினைவே மனிதன் சொரூபம். நினைவுகளைத் தவிர்த்து ஜகம் என்பது அன்னியமாயில்லை.
* மனம் எப்படி அடங்கும் என்றால் நான் யார் என்னும் விசாரனையினாலேயே. நான் யார் என்னும் நினைவு மற்ற நினைவுகளை எல்லாம் ஒழித்து முடிவில் தானும் அழியும். பிறகு சொரூப தரிசனம் உண்டாம்.
* நினைவே மனிதன் சொரூபம். நான் என்னும் நினைவே மனத்தின் முதல் நினைவு. அதுவே அகங்காரம்.
* மனம் அளவிறந்த நினைவுகளால் விரிகின்றபடியால் ஒவ்வொரு நினைவும் அதிபலவீனமாகப் போகின்றது. நினைவுகள் அடங்க, ஏகாக்கிரகத் தன்மையடைந்து அதனால் பலத்தை அடைந்த மனத்திற்கு ஆத்ம விசாரம் சுலபமாய் சித்திக்கும்.
* தொன்று தொட்டு வருகின்ற சகல விஷய வாசனைகளும் ஒடுங்கிச் சொரூப மாத்திரமாய் இருக்கமுடியுமா, முடியாதா என்கிற சந்தேக நினைவுக்கு இடம் கொடாமல் சொரூப தியானத்தை விடாப்பிடியாகப் பிடிக்க வேண்டும். தான் பாபி என்னும் எண்ணத்தையும் அறவே ஒழித்து சொரூப தியானத்தில் ஊக்கமுள்ளவனாயிருந்தால் அவன் நிச்சயம் கடைத்தேறுவான்.
* நல்ல மனம், கெட்ட மனம் என்று இரண்டு மனங்கள் இல்லை. மனம் ஒன்றே. வாசனைகளே சுபமென்றும் அசுபமென்றும் இரண்டுவிதம், மனம் சுபவாசனையின் பின் நிற்கும்போது நல்ல மனம் என்றும், அசுபவாசனையின் பின் நிற்கும்போது கெட்ட மனமென்றும் சொல்லப்படும்.
* உலக விஷயங்களிலும், பிறர் காரியங்களிலும் - மனதை விடக்கூடாது. பிறர் எவ்வளவு கெட்டவர்களாய் இருந்தாலும் அவர்களிடத்தில் துவேஷம்
வைக்கலாகாது.
* என்னென்ன நினைவுகள் உற்பத்தியாகின்றனவோ அவற்றை ஒன்றுகூட விடாமல் உற்பத்தி ஸ்தானத்திலேயே நசுக்கிப் போடுவதே வைராக்கியம். வைராக்கியத்துடன் தன்னுள் ஆழ்ந்து மூழ்கி முத்தை அடையலாம்.
* எவன் தன்னையே கடவுளாகிய - சொரூபத்தினடத்தில் தியாகம் செய்கிறானோ அவனே சிறந்த பக்திமான்.
* குருவின் அருள்பார்வையில் பட்டவர்கள் அவரால் ரக்ஷிக்கப்படுவாரேயன்றி ஒருக்காலும் கைவிடப்படார். எனினும் ஒவ்வொருவரும் தம் முயற்சியினாலேயே கடவுள் அல்லது குரு காட்டிய வழிப்படி தவறாது நடந்து முக்தியடைய வேண்டும்.
ரமணர் முக்தி அடையும் கால கட்டத்தில் பக்தர்கள் கதறி அழுதனர். அப்போது "நான் எங்கு போக முடியும் நான் இங்கு தான் இருக்கிறேன்'. இதுவே
ரமணர் கூறிய இறுதி பொன்மொழி.
- ரஞ்சனா பாலசுப்ரமணியன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com