

ஒரு மனிதன் கடற்கரை ஓரமாக நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்பொழுது பழைய சாக்கு மூட்டையில் களிமண்ணால் செய்யப்பட்ட உருண்டைகள் இருந்தன.
யாரோ களிமண் உருண்டைகளை செய்து அவற்றை வெயில் காய வைத்திருக்க வேண்டும் என்று நினைத்தவனாக, அந்த சாக்குப் பையை வெளியே எடுத்து கொண்டு போய், ஒவ்வொன்றாக எடுத்து, தன் கையினால் எவ்வளவு தூரம் எறிய முடியுமோ அவ்வளவு தூரம் கடலுக்குள் எறிய ஆரம்பித்தான். ஓர் உருண்டை அங்கிருந்த கல்லில் பட்டு, உடைந்தது. என்ன அதிசயம்!? அதற்குள் இருந்து விலையேறப்பெற்ற ஒளிவீசும் கல் தெரிய ஆரம்பித்தது. அதை கண்ட உடன் அவன் ஒவ்வொரு கல்லாக வேகவேகமாக அந்த கல்லின் மேல் போட்டு உடைக்க ஆரம்பித்தான். ஒவ்வொன்றிலும் ஒரு விலையுயர்ந்த கல் காணப்பட்டது.
ஐயோ, மற்ற கற்களையும் தான் தூக்கி எறியாமல் இருந்திருந்தால், எத்தனையோ விலைமதிக்க முடியாத கற்களை கொண்டு சென்றிருக்கலாமே என்று வருத்தப்பட்டான்.
இதை போலதான் நாம் காண்கின்ற மக்களின் புற உருவத்தை பார்த்து நாம் மதிப்பிடுகிறோம். ஒரு அழகற்ற மனிதனையோ, மனுஷியையோ நாம் பார்க்கும்போது, அவர்களை அழகுள்ள, நன்கு உடையணிந்த மற்றவர்களோடு ஒப்பிட்டு பார்த்து, இது முக்கியமில்லாதது என்று கணித்து விடுகிறோம். அவர்களுடைய உள்ளான அழகை கவனிக்க தவறிவிடுகிறோம்.
தேவன் படைத்த நம் ஒவ்வொருவருக்குள்ளும் அநேக நற்குணங்களும் திறமைகளும் அடங்கியுள்ளது. நாம் பார்ப்பது வெளியே மட்டும் தான். ஒருவரையும் அவர்களது வெளித்தோற்றத்தை மட்டும் வைத்து எந்த முடிவிற்கும் வரக்கூடாது.
மனுஷன் முகத்தைப் பார்ப்பான்; கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறவர். அதனால் தான், தாவீதின் வாட்டசாட்டமான பெலசாலிகளான ஏழு சகோதரர்களையும் தேவன் இஸ்ரவேலின் ராஜாவாக தெரிந்து கொள்ளவில்லை, ஆனால், ஆடுகளை மேய்த்து கொண்டிருந்த தாவீதை தெரிந்து கொண்டார். ஏனெனில் தாவீது ஆட்டிடையனாக இருந்தாலும், தாவீதின் மனம் தேவனையே நோக்கி கொண்டிருந்தது. கர்த்தரை எப்பொழுதும் எனக்கு முன்பாக வைத்திருக்கிறேன் அவர் என் வலதுபாரிசத்தில் இருக்கிறபடியால் நான் அசைக்கப்படுவதில்லை - (சங்கீதம் 16:8) என்று தைரியமாக சொல்ல முடிந்தது. அதனால் தான் தேவன் என் இருதயத்திற்கு ஏற்றவனாக கண்டேன் என்று தாவீதை குறித்து சாட்சி சொல்ல முடிந்தது.
தாவீதை ஆட்டிடையன் தானே என்று தள்ளிவிடவில்லை. தேவன் அவரை தெரிந்து கொண்டபடியால், தாவீதிற்குள் இருந்த விலையேறப்பெற்ற முத்துக்களாகிய சங்கீதங்களை நாம் இன்றும் வாசித்து களிகூர முடிகிறது. ஒருவேளை நம்மோடு வேலை செய்கிறவர்கள் மிகவும், எளிமையான தோற்றத்தோடு இருக்கலாம், ஆனால் அதற்காக நாம் அவர்களை புறம்பே தள்ளாமல், யாராயிருந்தாலும் மதிக்க கற்று கொள்ள வேண்டும்.
தேவனுக்கு பயப்படாதபடி அழகு மாத்திரம் இருந்து எந்த பயனுமில்லை, செüந்தரியம் வஞ்சனையுள்ளது, அழகும் வீண். கர்த்தருக்குப் பயப்படுகிற ஸ்திரீயே புகழப்படுவாள் (நீதிமொழிகள் 31:30). வெளிதோற்றத்தை வைத்து நாம் எதையும் நிதானிக்காதபடி, தீர்மானிக்காதபடி, தேவன் காண்கின்ற வண்ணமாக நாம் மனிதர்களைக் காணும் போது அனைத்து மனிதர்களும் ஒவ்வொரு செயலில் சிறந்தவர்களாகவே இருப்பார்கள்.
- ஒய்.டேவிட் ராஜா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.