திருநாங்கூர் கருடசேவை!

பாரதீய கலாசாரத்தின் தொன்மையை பறைசாற்றும் சின்னங்களாக விளங்கும் திருக்கோயில்கள் நிறைந்த தமிழகத்தில் காவிரி ஆற்றங்கரையின் கடை பகுதியில் அமைந்துள்ள
திருநாங்கூர் கருடசேவை!
Updated on
2 min read

பாரதீய கலாசாரத்தின் தொன்மையை பறைசாற்றும் சின்னங்களாக விளங்கும் திருக்கோயில்கள் நிறைந்த தமிழகத்தில் காவிரி ஆற்றங்கரையின் கடை பகுதியில் அமைந்துள்ள திருநாங்கூர் 11 வைணவ திவ்யதேசங்களையும் அதற்கு சமமான பாடல் பெற்ற சிவ தலங்களும் தன்னகத்தே கொண்டுள்ள சிறப்பு பெற்ற அழகிய கிராமம் ஆகும். இதிகாச புராணங்களில் போற்றப்படும் மதங்கர், தொம்யர் வியாக்ரபாதர், உதங்கர் போன்றவர்களின் ஆஸ்ரமங்கள் அமைந்ததும், மகாபாரதத்தில் பரிஷித் மகாராஜாவுக்கு காலனாகும் வீரியம் பெற்ற நாகராஜன் தக்ஷகன் ஆட்சி செய்த நாகபுரி இன்று திருநாங்கூர் என்ற பெயருடன் திகழ்கிறது. கரிகால் சோழன் பெண் எடுத்த பெருமையும் பெற்ற ஊர்.

திருகோயில்களில் சேவை தரும் திருமாலின் திருமேனியே தங்களுக்கு தஞ்சமாக கொண்ட ஆழ்வார்கள் திருக்கோயில்களுக்கு சென்று பெருமாளை மங்களாசாசனம் செய்த பாசுரங்களை ஒன்று திரட்டி நாலாயிர திவ்யபிரபந்தமாகவும் அவர்களால் பாடல் பெற்ற தலங்களே திவ்ய தேசமாகவும் செய்து, ஸ்ரீமந்நாராயணனின் திருவடியில் சரண் புகுவதே நமக்கு ஒரே கதி என்ற நெறியை உலகுக்கு காட்டி, தாழ்ந்தவன்- பெரியவன், ஏழை- பணக்காரன், படித்தவன்- படிக்காதவன் என்ற பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் பக்தி வழியை காட்டி ஆலய வழிபாட்டு முறையை ஏற்படுத்தியவர் சுவாமி எம்பெருமானர் ஸ்ரீ ராமானுஜர் ஆவார். 

பன்னிரு ஆழ்வார்களில் வடக்கே பத்ரி, நேபாளம் முதல் தெற்கே திருக்குறுங்குடி வரை 86 திவ்ய தேசங்களுக்கு மேல் நேரில் சென்று பாடியும், திருஇந்தளூரில் திருமாலை பாடும் பொழுது திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் அழகை சேவிக்கவேண்டும் என்று ஆசைப்பட்டு அது தரவில்லை என்றால் பெருமாளிடம் கோபித்துக் கொள்ளும் உரிமையும், எம்பெருமானாகி நின்றால் அடியோம் காணோமால் என்று குழையும் அழகும் கொண்ட வாட்கலியன் திருவாலி நாடன் என்று போற்றப்படும் திருமங்கை ஆழ்வாரின் அவதாரஸ்தலமும் ததீயாராதனை, வேடுபரி, மங்களாசாஸனம்  முதலான ஸ்ரீ ஆழ்வாரின் வைபவங்கள் உள்ளடக்கிய லீலைகள் நிறைந்ததுமானது திருநாங்கூர்  திவ்யதேசமாகும்.

திருமங்கை ஆழ்வார் தான் வாழ்ந்த காலத்தில் சென்று திருமாலை பாடியதுபோல் இன்றும் தான் உகந்த உற்சவமாக ஒவ்வொரு வருடமும் தை மாதம் அமாவாசை அன்று (28.1.2017) அர்ச்சாருபத்தில் திருவாலி திருநகரியில் இருந்து புறப்பட்டு தான் பிறந்த ஊரான திருக்குறையலூர், ததீயாராதானம் செய்த திருமங்கை மடம், திருநாங்கூரில் அமைந்துள்ள கோகுல கிருஷ்ணனான காவளம்பாடி ராஜகோபாலன் திருக்கோயில், சந்திரன் சாபம் தீர்த்த திருமணிக்கூடம் வரதராஜப்பெருமாள், பார்த்தன் தாகம் தீர்த்த திருப்பார்த்தன்பள்ளி பெருமாளை மங்களாசாசனம் செய்துகொள்வார். பின்னர் திருவரங்கத்தில் மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதசி திருவாய்மொழி திருநாளை ஆழ்வார் திருநகரியிலிருந்து நம்மாழ்வாரை எழுந்தருளிவந்து திருநாளை சிறப்பாக செய்தமைக்காக ஸ்ரீரங்கநாதன் திருமங்கையாழ்வாருக்கு தான் கண்டருளிய மஞ்சக்குளி மண்டப உற்சவத்தை அளித்ததை இன்றும் திருநாங்கூரில் காவிரிக்கரையில் திருமஞ்சனம் கண்டருள்கிறார். அதன்பிறகு மணிமாடகோயில் திருநாராயணப் பெருமாள், வன்புருஷோத்தமன், ஸ்ரீ வைகுண்டநாதப்பெருமாள், செம்பொன்ரங்கர், பள்ளிகொண்டபெருமாள், குடமாடுகூத்தர் என்று 11 திவ்ய தேசத்து எம்பெருமானையும் வயல்காடு வாய்க்கால் என்று பாராமல் பெருமாளை சேவிக்கவேண்டும் என்ற வேகத்துடன் அழகிய சிவிகையில் விரையும் அழகை இன்றும் காணலாம்.

மறுநாள் மதியம் 11 திவ்யதேசத்து பெருமாளும் ஆழ்வாரை காண திருநாங்கூரில் திரு நாராயண பெருமாள் திருக்கோயிலுக்கு வந்து ஆழ்வாருக்கு தரிசனம் தருவதும், திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்படுவதும், பெருமாளின் அருளுக்கு பாத்திரமான ஆழ்வாரின் வடிவழகை ஸ்ரீ மணவாளமாமுனிகள் ரசித்து மங்களாசாசனம் செய்வதும், பின்பு ஆழ்வார் அனைத்து எம்பெருமான்களுடன் சேர்ந்து திருமஞ்சனம் கண்டருள்வதும் காண கண்கோடி வேண்டும். இரவு திருமங்கையாழ்வார் அம்ச வாகனத்திலும், அவர்தம் வேண்டுகோளுக்கு இணங்க ஒரு காலத்தில் கஜேந்திரன் என்ற யானைக்கு அருள் செய்ததுபோல் நமக்கு 11 பெருமாளும்  அழகிய கருடவாகனத்தில் எழுந்தருளி காட்சிதரும் அரிய காட்சி உலகில் எங்கும் காணாத ஒரு திருவிழாவாகும். இந்த அரிய திருவிழாவை காண அனைவரும் வந்து 11 திவ்யதேசத்து எம்பெருமான்களின் அருளுக்கும் திருமங்கைமன்னன் கிருபைக்கும் பாத்திரமாகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
- ராம்குமார்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com