பழநியில் பாதி "கொடும்பு!'

கேரளா மாநிலத்தில் உள்ள பாலக்காட்டிலிருந்து சித்தூர் செல்லும் பாதையில் 5 கி.மீ. தொலைவில் உள்ளது "கொடும்பு! இத்தலத்தில் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் அமைந்துள்ளது.
பழநியில் பாதி "கொடும்பு!'
Published on
Updated on
2 min read

கேரளா மாநிலத்தில் உள்ள பாலக்காட்டிலிருந்து சித்தூர் செல்லும் பாதையில் 5 கி.மீ. தொலைவில் உள்ளது "கொடும்பு! இத்தலத்தில் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் அமைந்துள்ளது. இத்திருக்கோயில் கேரளாவில் இருந்தாலும் தமிழ்நாட்டு பாணியிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளது. 

இந்த கொடும்பு திருத்தலத்தில் கிழக்கு மாட வீதியில் ஆலயத்திற்கு ஏதிரே தேர்நிலையும் ஸ்ரீ பூமாதேவி, நீளாதேவி சமேத ஸ்ரீ வரதராஜப் பெருமாள் கோயிலும் அழகாக அமைந்துள்ளது. இங்கு, அதிசயமாக பெருமாள் கோயிலிலும் சிவாசாரியாரே பூஜை செய்து வருகிறார். இங்கு கருவறையில் முருகப்பெருமான் "ஸ்ரீவள்ளி தெய்வநாயகி சமேத சுப்பிரமணிய சுவாமி' யாகக் அபய, வரத கரம் காட்டி நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார். அவருக்கு இருபுறமும் வேலாயுதம் உள்ளது. தம்பதி சமேதராய் காட்சி தரும் இத்திருமேனி ஒரே கல்லால் ஆன விக்கிரகம் ஆகும்.

இத்திருக்கோயிலில் "சுப்பிரமணிய சுவாமி' பிரதானமாக இருந்தாலும் சிவபெருமான், உமை, பரசுராமர், கிருஷ்ணர், சாஸ்தா, காலபைரவர் போன்ற மூர்த்திகளும் திருசந்நிதி கொண்டு அருள்பாலிக்கிறார்கள். இத்திருக்கோயிலுக்கு "கேரள சிதம்பரம்' என்ற திருநாமமும் உண்டு. பிரகாரத்தை வலம் வந்தால் வடபுறம் உள்மண்டபத்தையொட்டி சிறு சிவாலயம் எழிலுடன் காட்சியளிக்கிறது. அதற்கு கிழக்குப்புறத்தில் நுழைவாயில் இருக்கிறது.

இத்திருக்கோயில் சுமார் 1600 ஆண்டுகள் பழைமையானது. தலபுராணம் பல சுவையான வரலாற்றுச் செய்திகளை எடுத்துக் கூறுகிறது. நெசவுத் தொழிலைப் பிரதானமாகக் கொண்டிருந்த செங்குந்த முதலியார் பலர் காஞ்சிபுரத்திலிருந்து வந்து கொடும்பில் குடியேறி வாழ்ந்து வந்தார்கள். அவர்கள் கோவைக்கு அருகில் உள்ள அவிநாசி நகரிலிருந்து நெசவுக்கு வேண்டிய நூல்களை வாங்கிக்கொண்டு மாட்டுவண்டிகளில் வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். ஒருநாள் இப்படி நூல் மூட்டைகளை வாங்கிக் கொண்டு வந்த ஒரு கூட்டம் கொடும்பு நோக்கி வந்து கொண்டிருக்கும்போது கோளிமாம்பட்டி என்ற கிராமத்தருகில் திடீரென்று "நானும் வருகிறேன். நானும் வருகிறேன்!'' என்றவாறு ஓர் அசரீரி கணீரென்ற குரலில் கூறியது. 

திடுக்கிட்ட கூட்டத்தினர் அனைவரும் திரும்பிப் பார்த்தனர். ஆனால், சுற்றுப்புறத்தில் யாரையும் காணவில்லை. மறுபடியும் அவர்கள் புறப்பட யத்தனிக்கும் போது, திடீரென்று வண்டி மாடு நடக்க மறுத்து சட்டென்று கீழே அமர்ந்துவிட்டது. அப்போது மீண்டும் அதே குரலில் ""நானும் வருகிறேன்.. நானும் வருகிறேன்!'' என்றது. இம்முறை அக்குரல் தெளிவாகக் கேட்கவே, வியாபாரிகள் ஒலி வந்த திசையில் சென்று பார்த்தபோது ஒரு புதரில் ஒளிவீசிப் பிரகாசித்துக் கொண்டிருந்த ஒரு சிறு கல்லைக் கண்டு திகைத்தனர். தெய்வீகச் சக்தி வாய்ந்த அந்தக் கல்லை பயபக்தியோடு எடுத்துவந்து நூல் மூட்டைக்குள் பத்திரமாக வைத்தனர். உடனே பொதிமாடு எழுந்து நடக்க ஆரம்பித்தது.

"கொடும்பு'க்கு வந்ததும் தற்போது இருக்கும் ஆலயத்தில் உள்ள கருவறையில் அந்தக் கல்லையும் வேல் ஒன்றையும் பிரதிஷ்டை செய்து "சுப்பிரமணிய சுவாமி' எனப் பெயரிட்டு வழிபடத் தொடங்கினர். ஆதியில் "வேலப்பர்' என்று அழைக்கப்பட்ட இம்மூர்த்தி "சுப்பிரமணிய சுவாமி' என்றும் "கல்யாண சுப்பிரமணியம்' என்றும் அழைக்கப்பட்டார். இந்த சுப்பிரமணியர் செங்குந்த முதலியார்கள் குலதெய்வமாக வணங்கி வருகிறார். அந்த அதிசயக் கல் ஆலயத்தில் வைக்கப்பட்டுள்ளது.

பழநி மலையில் நடைபெறும் திருவிழா மற்றும் தேரோட்ட உற்சவம் போலவே கொடும்பு முருகன் கோயிலிலும் நடந்து வருகிறது. சஷ்டி, கிருத்திகை, கார்த்திகை தீபம், பங்குனி உத்திரம், தைப்பூசம் ஆகிய திருவிழாக்கள் மிகவும் சிறப்பாகவும் விமரிசையாகவும் கொண்டாடப்படுகின்றன. இங்கு, தைப்பூச உற்சவம் பத்து நாள்கள் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.

பழநிபதியில் நடப்பதைப் போலவே உற்சவங்கள் இங்கும் நடப்பதால் கேரள மக்கள் "பழநியில் பாதிகொடும்பு, என்று போற்றி முருகப்பெருமானை வழிபட்டு வருகிறார்கள். அருணகிரிநாதர் இத்தலத்துக்கு வந்து முருகப்பெருமானை வழிபட்டு, அவனது மேன்மையை போற்றி ""திருகு பொற் சிகண்டிக் குதிரை விடும் செட்டித் திறலர் கொடும்பு'' என்று தமது திருப்புகழில் குறிப்பிட்டுப் போற்றியுள்ளார்.
- டி.எம். இரத்தினவேல்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com