குருவின் மகிமை! 

ஞானம் பயில்வது ஞானி ஆவதற்கல்ல! மனிதனாக வாழ்வதற்கு!! ஞானம் பெறுவது என்றால் ஏதோ உலக இன்பங்களைத் துறந்து
குருவின் மகிமை! 
Published on
Updated on
3 min read

ஞானம் பயில்வது ஞானி ஆவதற்கல்ல! மனிதனாக வாழ்வதற்கு!! ஞானம் பெறுவது என்றால் ஏதோ உலக இன்பங்களைத் துறந்து சந்நியாசியாக ஆவதல்ல. மேன்மையான குணநலன்களைப் பெற்று உலக நன்மைக்காக உழைத்து வாழ்வதே!

ஒரு மனிதன் ஞானம் அடைவதற்கு ஒரு குருவின் துணை இன்றியமையாதது. அஞ்ஞானம் என்ற இருளை அகற்றி ஞானமாகிய ஒளியைத் தருபவரே குரு . 
தனியாக ஒரு மனிதன் சிந்தித்து, பரம் பொருளை உணர்ந்து, ஞானம் அடைவது கடினம். குரு தான் பெற்ற அனுபவங்களிலிலிருந்து ஞானம் பெறுவதை எளிமையாக்கி தன் சீடனுக்கு அருள்கிறார். அதனால் சீடன் விரைவில் ஞானம் பெறுகிறான். ஆனால் குருவின் ஞான உபதேசம் ஞான வேட்கை உள்ளவர்களுக்கே கிடைக்கும். அவர்களாலேயே அந்த உபதேசத்தை புரிந்துகொள்ளவும் முடியும். 

"'குருவே சிவன், குருவே தெய்வம், குருவே பந்தம், குருவே உயிர், குருவிற்கு நிகராக எதுவுமில்லை. குரு சச்சிதானந்த ரூபமானவர், பரிபூரணமாக திகழ்பவர், எங்கும் இருப்பவர், குருவின் பாதச் சுவடுகளை வணங்கினாலே கடவுளின் பரிபூரண ஆசியைப் பெறலாம். குருவின் பாதத் தீர்த்தமே கங்கை. மொத்தத்தில் குருவானவர் மனிதனை பாவங்களில் இருந்து மீட்டு நல்வழிப் படுத்தி அவன் மனதில் ஞான ஒளியை ஏற்றுபவர்'' என்ற எண்ணமுடைய சீடன் விரைவில் ஞானம் பெறுகிறான்.

குரு சில சமயங்களில் சீடனுக்கு எதுவும் சொல்லித்தராமல் தன்னுடைய அருள் மூலமே அவனுக்கு ஞானத்தை அளிப்பார். இவ்வாறு செய்யும் முறையை தீட்சை என்பர். தீட்சையில் ஸ்பரிச தீட்சை,   நயன தீட்சை,   பாவனா தீட்சை,   வாக்கு தீட்சை,   யோக தீட்சை, நூல் தீட்சை என்று பல வகை உண்டு.  

ஸ்பரிச தீட்சை : குரு தனது திருக்கரத்தினால் சீடரைத் தொட்டு ஆசீர்வதித்து  அவனை ஞானமடையச் செய்தல்.  நயன தீட்சை : குரு தன் பார்வையாலேயே சீடனுக்கு அருள் செய்தல்.  பாவனா தீட்சை : குரு தன்னைப் போன்றே தன் சீடர்களும் ஞானம் பெற வேண்டுமென்று ஒருமுகமாக எண்ணுவதன் மூலமே சீடனுக்கு ஞானத்தை அருள்வது.  யோக தீட்சை :  குரு தன் யோகத்தின் மூலம் சீடனுக்கு ஞானத்தைக் கொடுப்பது.  வாக்கு தீட்சை : குரு, ஞானிகள் அருளிய வேத வேதாந்த கருத்துகளையும், தான் தனக்குள் மெய்ஞான அனுபவமாக உணர்ந்ததையும், அருள் வேட்கையோடு கேட்கும் சீடர்களுக்குச் சொல்லி, அவர்களை ஞானம் அடையச் செய்தல்.  நூல் தீட்சை : ஞானிகள் அருளிய வேத வேதாந்தங்களையும் அதன் மூலம் அவர்கள் அனுபவித்த மெய்ஞான அனுபவங்களையும் அவற்றைப் பின்பற்றுவதால் ஏற்படும் நலன்களையும் சீடர்களுக்கு வழிகாட்டும் நூலாக அருள்வது நூல் தீட்சையாகும்.

கோதாவரி நதிக் கரையில் ஜனார்த்தனர் என்றொரு சுவாமிகள் இருந்தார். அவருக்கு ஏகநாதர் என்றொரு சீடர் இருந்தார். அவர் தன் குருவை கடவுளுக்கும் மேலாக எண்ணுபவர். அவர் வார்த்தைக்கு மறுவார்த்தை பேச மாட்டார். குருவின் நித்திய பூஜைக்காக, அவர் கூறியபடி தினமும் பக்தி சிரத்தையோடு கோதாவரி நதியிலிருந்து பெரிய குடத்தில் நீர் எடுத்து வந்து கொடுப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார் ஏகநாதர். அவன் தன்னிடம் கொண்டிருக்கும் பக்தி சிரத்தையை உணர்ந்த குரு,  தன் வழிபாட்டு தெய்வமான தத்தாத்ரேயரை மானசீகமாகத் துதித்து, ஏகநாதர் கோதாவரியில் நீர் முகந்து வரும் வழியில் அவருக்கு தரிசனம் கொடுக்க வேண்டுமெனப் பிரார்த்தித்தார். 

அடுத்த நாள், ஏகநாதர் கோதாவரியிலிருந்து தண்ணீர் எடுத்துக் கொண்டு வரும்போது தத்தாத்ரேயர் தன் சுய ரூபத்துடன் ஏகநாதருக்கு தரிசனம் தர,  ஏகநாதரோ, தன் குருவின் அனுஷ்டானத்திற்காக நீர் எடுத்துச் செல்வதாகவும், வழியை விட்டு விலகியிருக்கவும் என்று தத்தாத்ரேயரிடம் கூறினார்.  உடனே தத்தாத்ரேயர், "தான் யாரென்று தெரிகிறதா?'' என்று கேட்க, அதற்கு சீடன் அவர் யாராய் இருந்தாலும் அதைப் பற்றிக் கவலையில்லை, தனக்கு குருவுக்கு செய்யும் பணியே பிரதானம்; அதனால் வழி மறிக்க வேண்டாம் என்று கூறினார்.  ஏகநாதரின் குருபக்தியை மெச்சி, அவர் கேட்காமலேயே அவருக்கு பரிபூரண ஞானம் சித்திக்க அருள்புரிந்தார் தத்தாத்ரேயர். 

வீடு திரும்பிய சீடரிடம் "கடவுளின் தரிசனம் கிடைத்ததா?''  என்று கேட்க,  "நான் தான் தினமும் கடவுளைத் தரிசிக்கிறேனே!'' என்றார்.  உடனே ஜனார்த்தன ஸ்வாமிகள்,  "இன்று தத்தாத்ரேயர் உனக்கு தரிசனம் தரவில்லையா?'' என்றார். அதற்கு,  "எனக்கு கடவுளே தாங்கள் தான். என்றாவது ஆண்டவனை பார்க்கவேண்டுமென்று தங்களிடம் கேட்டிருக்கிறேனா?'' என்கிறார் ஏகநாதர்.

பல்லாண்டுகள் தவமிருந்தாலும் கிடைக்காத தத்தாத்ரேயர் தரிசனம் குருவின் அருளினால் சீடனுக்கு எளிதில் கிடைத்ததற்கு காரணம் அவனுடைய குரு பக்தி. தனது  சீடனின் நல் வாழ்விற்கு வழிகாட்டிய குருவுக்கு நன்றிக்கடன் செலுத்தக்கூடியத் திருநாளே குருபூர்ணிமா.

ஆடி மாதப் பெளர்ணமியை  "ஆஷாட சுத்த பெளர்ணமி' என்பர். இந்நாளில் துறவிகள் சாதுர்மாஸ்ய விரதத்தினை மேற்கொள்வார்கள். அன்று துறவிகள் வியாச பூஜை செய்து சாதுர்மாஸ்ய விரதத்தைத் துவக்குவார்கள். 

ஆதி குருவாகக் கருதப்படும் தட்சிணாமூர்த்தி,  தன் சீடர்களுக்கு தட்சிணாயனத்தின் முதல் பெளர்ணமியான ஆடி பெளர்ணமியன்று கல்லால மரத்தின் கீழ் தெற்கு நோக்கி அமர்ந்து, அவர்களுக்கு ஞானத்தை உபதேசித்தார் என்று கூறப்படுகிறது.  அன்றையதினம்,  "குரு பெளர்ணமி' என்றும் அழைக்கப்படுகிறது. 

இந்நாளை, துறவிகள், இந்த மதத்தின் கருப்பொருளாக விளங்கும் வேதத்தை நமக்களித்த வியாசரைக் கொண்டாடும் விதமாக வியாசபூசை செய்து கொண்டாடுவர். அதனால் இந்நாளை "வியாச பூர்ணிமா' என்றும் அழைப்பர். வேத வேதாந்தக் கல்வி பயின்றவர்கள் தங்களது குருமார்களை நினைவு கூறும் வகையில் அன்றைய தினத்தில் சிறப்பாக குரு பூஜை செய்வது மரபு. 

இந்நாளில் எல்லா மடங்களிலும் ஆசிரமங்களிலும் விழா கொண்டாடுவார்கள். சீடர்களும் ஆன்மிக அன்பர்களும் தங்கள் குருவை நாடிச் சென்று வணங்கி குருவருள் பெறுவர். புதிய சீடர்கள் குரு தீட்சையைப் பெறுவார்கள்.  குருவை உள்ளன்போடு பூஜித்தால் பிரம்மா, சிவன், விஷ்ணு பேதம் இல்லாமல் எல்லாரையும் பூஜித்ததாகிறது. இத்தகைய திருநாள் இவ்வாண்டு, ஜூலை  9 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. 
- ரஞ்சனா பாலசுப்ரமணியன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com