பழுதில்லா தொழுகையின் பயன்கள்

அடியான் செய்யும் கடமைகளில் அல்லாஹ்விற்கு அதிக பிரியமானது தொழுகை. அத்தொழுகை இஸ்லாத்தின் இரண்டாவது கடமை.
பழுதில்லா தொழுகையின் பயன்கள்
Updated on
3 min read

அடியான் செய்யும் கடமைகளில் அல்லாஹ்விற்கு அதிக பிரியமானது தொழுகை. அத்தொழுகை இஸ்லாத்தின் இரண்டாவது கடமை. அத்தொழுகை சொல், செயல், நினைவு ஆகிய  மூன்று நிலைகளிலும் ஓரிறையை முன்னிறுத்தி முற்படுத்தி ஐம்புலன்களையும் அடக்கி ஒடுக்கி ஒன்றுபடுத்தி ஓர்மையுடன் சீராக தொழுவதே சிறப்பான தொழுகை. அத்தகைய தொழுகையே அல்லாஹ்விடம் நெருங்க செய்யும். அப்பழுதில்லாத தொழுகையின் பயன்கள் விண்ணைத் தொடுமளவு எண்ணற்றவை.

உங்கள் வீட்டு வாயிலில் ஓர் ஆறு ஓடி அவ்வாற்றில் நீங்கள் ஒரு நாளைக்கு ஐந்து முறை குளித்தால் உங்கள் உடலில் அழுக்கு இருக்குமா? என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அவ்வாறே ஒவ்வொரு நாளும் ஐந்து வேளை தொழுகை பாவ அழுக்கைப் போக்கி தூய்மைப் படுத்துகிறது என்று வாய்மை நபி (ஸல்) அவர்கள் வாகாய் மொழிந்தார்கள். அறிவிப்பவர்- அபூஹுரைரா (ரலி) நூல் - புகாரி, முஸ்லிம்.

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தொழுவதைப் பார்த்தால்  அவர்களின் பிடரியில் அடிப்பேன் என்று அக்கிரமத்தின் வக்கிரத்தில் எக்காளமிட்ட குறைஷி கூட்டத்தில் கொக்கரித்த அபூஜஹில் மக்காவில் மாநபி (ஸல்) அவர்கள் தொழுது கொண்டிருக்கும் பொழுது பெரிய  பாறாங்கல்லைத் தூக்கிக்கொண்டு வேகமாக ஓடிச் சென்ற அபூஜஹில் அதனினும் அதிக வேகத்தில் அலறிக்கொண்டு திரும்பினான். பகைத்து மிகைத்து சிகையை சிலுப்பி சீறி நின்ற கூட்டம் திகைத்து திரும்பிய காரணத்தைக் கேட்டது. அபூஜஹீலுக்கும் அண்ணல் நபி (ஸல்) அவர்களுக்கும் இடையில் நெருப்பு  குண்டத்தையும் நெருடும் பெருங்குரலையும் பெரிய இறக்கைகளையும் கண்டதாக விண்டுரைத்தான். தன்னை மறந்து அல்லாஹ்வை அடிபணிவதில் உள்ளம் ஒன்றி உண்மையாய் தொழுபவர் அல்லாஹ்வால் எந்த ஆபத்திலிருந்தும் விபத்திலிருந்தும் வீண் பழிகளிலிருந்தும் காப்பாற்றப்படுவார். 

மதீனாவின் மஸ்ஜித் நபவியில் தொழுது விட்டு திரும்பிய கிராமவாசி மாநபி (ஸல்) அவர்களுக்குச் சலாம் கூறினார். சலாத்திற்குப் பதில் பகன்ற பாசநபி (ஸல்) அவர்கள் மீண்டும் தொழ பணித்தார்கள். இப்படி பலமுறை நடந்தது. பிறகு அந்த கிராமவாசியை அமரவைத்து அண்ணல் நபி  (ஸல்) அவர்கள் அவசரப்படாது அமைதியாக தொழும்படியும் அமைதியான தொழுகையே அனைத்து நன்மைகளையும் நல்கிடும் என்று நவின்றார்கள்.

உஹது போரில் அலி (ரலி)  அவர்களின் உடலில் தைத்த அம்பை எடுக்க முயன்றனர். பொறுக்க முடியாத வலியால் அலி (ரலி) துடித்தார்கள். அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அறிவுறுத்தியபடி அலி (ரலி) தொழுது கொண்டிருக்கும்பொழுது அந்த அம்பை உருவினர். தொழுது முடித்த பிறகே அலி (ரலி) அம்பு எடுக்கப்பட்டதை அறிந்தார்கள். தொழுகையில் அத்தகு ஆழமான இறை ஈடுபாடு இருக்க வேண்டும். பிறவற்றின் நினைவு கூடவே கூடாது.

நபி தோழர் ரபீஆ (ரலி) இரவில் திருநபி (ஸல்) அவர்கள் தங்கும் இடத்தில் தங்கி தயாள நபி (ஸல்) அவர்கள் நடு இரவில் தஹஜ்ஜத் தொழ எழும்பொழுது அத்தொழுகைக்கு உளூ (தூய்மை) செய்வதற்கு நீர் கொண்டு வந்து கொடுப்பதோடு பல் துலக்க மிஸ்வாக், தொழ முஸல்லா முதலியவைகளைத் தயார் செய்து வைப்பார். அவரின் அரும்பணியில்  மகிழ்ந்த மாநபி (ஸல்) அவர்கள் ரபீ (ரலி) விரும்புவதைக் கேட்குமாறு கூறினார்கள். சொர்க்கத்தில் பொற்புடைய நபி (ஸல்) அவர்களின் அருகில் இருப்பதையே அவாவுவதாகவும் வேறெதுவும் வேண்டாம் என்றும் பதில் அளித்தார் ரபீஆ (ரலி). நூல் - முஸ்லிம், அபூதாவூத்.

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் உங்கள் சுஜூதுகளை அதிகப்படுத்தி கொள்ளுங்கள் என்று சொன்னார்கள். சுஜூது என்பது இறைவனுக்கு மட்டுமே தலை வணங்கும் தொழுகையின் ஒரு பகுதி. சுஜூதை அதிகப்படுத்த அதிகமாக தொழவேண்டும் என்பதே பொருள். இறை வேட்டலில் நிறைவானது தொழுகைக்குப்பின் பொறுமையாக கேட்கும் துஆவே.

பழுதில்லா தொழுகையின் பயன்களைப் பற்றி பண்பு நபி (ஸல்) அவர்கள் பகர்ந்த பொன் மொழிகள் "இறைவனுக்கு இணை வைக்காது ஏக இறை கொள்கையை ஏற்றவன் என்று மனிதனை அடையாளப்படுத்துவது தொழுகை'' அறிவிப்பவர் - ஜாபிர் (ரலி) நூல் -முஸ்லிம்.  " என் கண் குளிர்ச்சி தொழுகையில் இருக்கிறது'' அறிவிப்பவர் அனஸ் (ரலி) நூல் -நஸஈ. "தனித்து தொழுவதைவிட  ஜமா அத் ஆக கூடி தொழுவதில் இருபத்தேழு மடங்கு உயர்வு உண்டு'' அறிவிப்பவர் - அப்துல்லாஹ்பின் உமர் (ரலி) நூல் -புகாரி, முஸ்லிம். 

"வீட்டிலேயே தொழுகைக்குரிய முறையில் உளூ (கழுவி தூய்மை) செய்து கொண்டு மசூதிக்குத் தொழ நடந்து செல்லும்பொழுது அவரின் ஒரு காலடி பாவத்தை அழிக்க மற்றொன்று அவரின் மதிப்பை உயர்த்துகிறது'' அறிவிப்பவர் அபூஹுரைரா (ரலி) நூல்- புகாரி, முஸ்லிம். " தொழுகையில் சீராகவும் நேராகவும் நெருக்கமாகவும் நிற்பது ஏற்றத் தாழ்வில்லாத சமத்துவத்தை ஏற்படுத்துகிறது'' அறிவிப்பவர் - அபூமஸ்வூது (ரலி) நூல் - முஸ்லிம். " தொழுகையில் எப்பதவியும் எப்பொருளும் இல்லா ஏழை முதலில் வந்தால் முன்வரிசையில் முதல் இடம் அவருக்கே.  அடுத்து வருபவருக்கு அடுத்த இடம். பெரும் பதவிகளில் இருந்தாலும் பெருஞ் செல்வந்தர் ஆயினும் வருகின்ற வரிசைப் படியே அமர வேண்டும்''. "தொழுகையில் நின்ற வண்ணம் திருகுர்ஆனை ஓதுபவருக்கு ஒவ்வொரு எழுத்திற்கும் நூறு நன்மைகள் உண்டு'' அறிவிப்பவர் அனஸ் (ரலி) நூல் நஸஈ. ஏற்பில்லாத எந்த செயலும் ஏந்தல் நபி (ஸல்) அவர்களுக்கு வருத்தத்தை உண்டாக்கினால் இறைவனின் பொருத்தத்தை நாடி தொழுததைத் தொடுத்துரைக்கிறார் ஹுதைபா (ரலி) நூல்- அபூதாவூத்.

"தொழுகை மானக்கேடானதையும்வெறுக்கத்தக்கதையும் விட்டு விலக்கும்'' என்ற குர்ஆனின் 29-45 ஆவது வசனப்படி விலக்குவன விலக்கி இலங்கிடும் வாழ்வில் துலங்கிட தொழுகையை கடைப்பிடிப்போம். " திட்டமாக தொழுகை முஃமின்களின் மீது நேரம் குறிக்கப்பட்ட கடமை'' என்ற 4-103 ஆவது வசனப்படி ஐந்து வேளை தொழுகையை விடாது தொழுது பழுதில்லா தொழுகையின் பயன்களைப் பெறுவோம். "உனக்கு இறப்பு வரும் வரை இறைவனை வணங்கு'' என்ற 15-99 வசனப்படி மரணம் வரும்வரை மாறாது தொழுது பேராளன் அல்லாஹ்வின் பேரருளைப் பெறுவோம்.
- மு.அ. அபுல் அமீன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com