கலை நயமிக்க காஞ்சி கைலாசநாதர் கோயில்!

தமிழ்நாட்டில் உள்ள தொன்மையான நகரங்களில் காஞ்சிபுரமும் ஒன்று. கோயில் நகரம் என்று சிறப்பித்து அழைக்கப்படுவதற்கு ஏற்ப பலத்திருக்கோயில்கள் இந்நகரில் அமைந்துள்ளன.
கலை நயமிக்க காஞ்சி கைலாசநாதர் கோயில்!
Updated on
2 min read

தமிழ்நாட்டில் உள்ள தொன்மையான நகரங்களில் காஞ்சிபுரமும் ஒன்று. கோயில் நகரம் என்று சிறப்பித்து அழைக்கப்படுவதற்கு ஏற்ப பலத்திருக்கோயில்கள் இந்நகரில் அமைந்துள்ளன.

காஞ்சி நகருக்கு மேற்கே சுமார் 1 கி.மீ. தொலைவில் (சிவகாஞ்சி பகுதியில்) சைவ சமயம் போற்றும் உயர்ந்த தத்துவ அடிப்படையில் கட்டப்பட்ட அருள்மிகு பர்வதவர்தனி அம்பாள் சமேத ஸ்ரீ கைலாசநாதர் கோயில் அமைந்துள்ளது. பல்லவ மன்னன் பரமேசுவரனுடைய மகனாக விளங்கிய, "அத்யந்த காமன்' என்ற சிறப்புப் பெயர் பெற்று விளங்கிய ராஜசிம்ம பல்லவனால் தோற்றுவிக்கப்பட்டதாகும். இச்செய்தியை சொல்லும் கல்வெட்டில் புண்ணிய நதியாகிய கங்கை ஆறு கீழே பாய்ந்து நிலவுலகம் முழுமையும் தூய்மைப்படுத்துகிறதோ, அது போல, "உமையோடு - இறைவனின் அருட்பிரவாகம் உலகத்தில் பாய்ந்து உலக மக்கள் அனைவரையும் காப்பாற்றட்டும்' என்று புகழ்ந்து பேசுகிறது. மேலும் சிவபெருமான் கயிலையை காட்டிலும் சிறப்பாக இங்குவந்து கோயில் கொண்டதாகக் கூறுகிறது.

புராண வரலாற்றின்படி ஒரு சமயம், திருமாலின் அம்சமான ஆதிபுத்தனும் நாரதரும் சிவ அபராத பாபத்தினால் வருந்தி காஞ்சியை அடைந்தனர். இந்த தலத்ததை அடைந்தவுடன் மலைபோன்ற பாபச் சுமையானது பருத்திபோல் மெலிவடைந்தது திருப்பருத்திக்குன்றம் என்ற தலத்திலாகும். அதற்கு வடகிழக்கில் கையிலாயநாதர் என்ற பெயரால் லிங்கம் ஸ்தாபித்து பன்னெடுநாள் தவம் இருந்தனர். இறை ஆணைப்படி ஆலயத்திற்குள் சுரங்க வாயில் ஒன்றை அமைத்து அதில் வலஞ்செய்து திருவருளை அடைந்தனர். இன்றும் பக்தர்கள் அந்த வாயில் வழியாக பிரதிட்சணம் செய்வதைக் காணலாம்.

இக்கோயிலின் கட்டட அமைப்பு மிகச்சிறப்பானது. திருச்சுற்றில் 58 சிற்றாலயங்கள் அமைந்திருப்பது சிறப்பானது. ஒருபுறம் சிவபெருமானின் சம்கார மூர்த்தங்களையும், மற்றொருபுரம் சிவபெருமானின் அனுக்ரஹ மூர்த்தங்களையும் காணலாம். இக்கோயிலைத் தோற்றுவித்த ராஜசிம்மன் தனது முன்னூறுக்கும் மேலான சிறப்புப் பெயர்களை இக்கோயில் கல்வெட்டுகளில் பொறித்து வைத்துள்ளதைக் காணலாம். அக்கல்வெட்டுகளும் நான்கு விதமான எழுத்து வடிவத்தில் பொறிக்கப்பட்டுள்ளது தனிச்சிறப்பு.

கருவறையில் இறைவன் சிவாகமத்திலுள்ள பலவித லிங்க லட்சணங்களில் ஒன்றான "தாராலிங்கம்' என்ற அமைப்புப்படி பதினாறு பட்டைகளுடன் எழுந்தருளி அருள்புரிகின்றார். லிங்கத்திருமேனியின் பின்புறம் சோமாஸ்கந்தர் வடிவத்தையும் காணலாம். கருவறைக்கு முன் ஒரு திருக்கோயில் உள்ளது. இதனை ராஜசிம்மனின் மைந்தன் மூன்றாம் மகேந்திரவர்மன் எழுப்பினான். இக்கோயில் "மகேந்திரவர்மேசுவரகிருஹம்' எனப்படுகிறது,
திருக்கோயில் நுழைவுவாயில் சிறிய அமைப்பிலே வண்டிக்கூரை போன்ற சாலை அமைப்புடன் விளங்குகிறது. கோபுர வாயில் வானளாவ விளங்க இதுவே முதல்படியாக விளங்குகிறது என்கின்றனர் கலைநூல் அறிஞர்கள். வாயிலில் அமைந்துள்ள ஒரு கோயில் "ரங்கபதாகை' என்ற ராஜசிம்மனின் தேவியால் எடுக்கப்பட்டதாகும்.

இக்கோயிலில் காணப்படும் கல்வெட்டுகளில் ராஜசிம்மேசுவரம், பெரியதிருக்கற்றளி, திருக்கற்றளி என்றெல்லாம் அழைக்கப்படுகிறது. தஞ்சைப் பெரிய கோயிலைத் தோற்றுவித்த ராஜராஜசோழனே இக்கோயிலைப் போற்றி பெரிய திருக்கற்றளி எனக்குறிப்பிடுவது சிறப்பாகும்.

பூசலார் நாயனார் வரலாற்றிலும் இக்கோயில் இடம் பெற்று விளங்குகிறது. ராஜசிம்மன் இக்கோயிலைக்கட்டி கும்பாபிஷேகம் செய்ய நாள் குறித்தபொழுது, இறைவன் திருநின்றவூரிலே பூசலார் மனதில் எழுப்பும் திருக்கோயிலுக்கு குடமுழுக்கிற்கு செல்வதாக கூறுகிறார்.  ராஜசிம்மன் பூசலாரின் இறைபக்தியைக் கண்டு வியந்து அவரை வணங்குவதாக பெரியபுராணம் சிறப்பித்துக் கூறுகிறது. கைலாசநாதர் கோயிலை தோற்றுவித்த ராஜசிம்மன், இக்கோயில் கும்பாபிஷேகத்தை பூசலாருக்காக பின்னர் வைத்துக்கொள் என்று இறைவன் அசரீரியாக கூறியதை கேட்டது பற்றி ஒரு கல்வெட்டால் அறிகிறோம். எனவே இறைவனே மன்னனிடம் பேசியது என்பது இக்கோயிலின் தனிச்சிறப்பாக விளங்குகிறது.

ஆகமப்பிரியன், சிவச்சூடாமணி போன்ற சிறப்புப் பெயர்களைக் கொண்ட ராஜசிம்மன், எடுப்பித்த இத்திருக்கோயிலில் சிவபெருமானின் பல்வேறு வடிவங்கள், தேவியின் சிற்பங்கள் பல்லவர்கால கலைச்சிறப்புக்கு சிறந்த அடையாளமாக விளங்குகின்றன. திருச்சுற்றில் உள்ள ஒரு சில சிற்றாலயங்களில் பல்லவர்கால ஓவியங்கள் காணப்படுகின்றன. சாளுக்கிய மன்னர்களில் இரண்டாம் விக்கிரமாதித்தன் காஞ்சியை வெல்வதற்காக படையெடுத்து வரும்பொழுது புதுப்பொலிவுடன் காணப்படும் கைலாசநாதர் கோயிலைக்கண்டு வியந்து, அதன் வழிபாட்டிற்காக தானம் அளித்தான். அழிக்க வேண்டும் என்று வந்த மன்னன் மனமாறி கோயிலைப் போற்றியதை இங்கு காணும் கன்னடக் கல்வெட்டு கூறுகிறது. 

விக்கிரமாதித்தனுடன் வந்த தேவி லோக மகாதேவி இக்கோயிலைக் கண்டு போற்றி இதே போன்ற கோயிலை கர்நாடக மாநிலத்தில் பட்டடக்கல் என்ற இடத்தில் எழுப்பினாள். "லோக மகாதேவீசபுரம்' என்ற அக்கோயில் இன்று "விருபார் கோயில்' எனப்படுகிறது. கலையின் ரசனைக்கு எல்லை ஏது? விஜய நகர பேரரசர் காலத்தில் இக்கோயில் மீண்டும் சிறப்பு பெற்றது.

எவ்வித மாற்றமும் இல்லாமல் பல்லவர்கால கலை அம்சத்துடன் விளங்கும் இக்கோயிலை மத்திய அரசின் தொல்பொருள் ஆய்வுத்துறை போற்றி பராமரித்து வருகிறது. இந்து சமய அறநிலையத்துறையின் நிர்வாகத்தில் வழிபாடுகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  வருடந்தோறும் சிவராத்திரி விழாவன்று பக்தர்கள் ஆயிரக்கணக்கில் வந்து கூடுவார்கள்.

இக்கோயிலின் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டு விளங்கினார் காஞ்சி மகாப்பெரியவர்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த திருக்கோயிலுக்கு வருகிற 05.06.17 அன்று வெகு சிறப்பாக கும்பாபிஷேகம் நடைபெறுகின்றது. அன்று மாலை திருக்கல்யாணமும் தொடர்ந்து திருவீதி உலாவும் நடைபெறுகின்றது. பூர்வாங்க பூஜை, ஹோமங்கள் மே-29 இல் தொடங்கியது. (இத்திருக்கோயிலுக்கு காஞ்சி கச்சபேஸ்வரர் ஆலயம் வழியாகச் செல்லலாம்.)
- கி. ஸ்ரீதரன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com