லக்னேசன் சுபக்கிரகமாகி சுபக்கிரகங்களால் சூழப்பட்டு வலிமை பெற்றிருப்பாரானால் அப்படிப்பட்டவருக்கு மூலபலம் உண்டு.
இரண்டாம் பாவம் வலுத்தால் மதி நுட்பமும் மனோதர்மமும் வாக்கு வன்மையும் வாக்கு பலிதமும் ஏற்படும்.
மூன்றாம் பாவம் வலுத்தால் குழப்பமற்ற மனநிலையும் அசாத்தியத் துணிவும் முடிந்த முடிவான தெளிந்த கோட்பாடும் அமைய முடியும்.
நான்காம் பாவம் பலமாக அமைந்திருக்குமானால் வித்யா (கல்வி) பாண்டித்யமும் பிறருக்குப் பயன்படுகிற வகையில் வாழ்கின்ற பண்பும் ஜாதகருக்கு அமையும்.
ஐந்தாம் பாவம் வலுத்திருக்குமானால் பூர்வீக வழியில் அனுகூலம், நல்ல அறிவுக்கூர்மை, ஞாபக சக்தி, செல்வம், செல்வாக்கு, புத்திர சிறப்பு, மேற்படிப்பில் ஏற்றம், உயர்வு, சமுதாயத்தில் பெயர். புகழ் உண்டாகிறது. அதோடு ஜன்ம லக்னத்திற்கு ஐந்தாம் வீட்டில் சுபக்கிரகம் என வர்ணிக்கப்படும் குரு, சுக்ர, புத, சந்திர பகவான்கள் அமையப் பெற்றாலும் செல்வம், செல்வாக்கு சமுதாயத்தில் புகழ் ஏற்படுவது மட்டுமில்லாமல் பூர்வீக வழியிலும் ஏற்றம் உயர்வு உண்டாகிறது.
ஐந்தாம் வீடு புத்திர ஸ்தானம், பூர்வபுண்ணிய ஸ்தானம், குருவருளும் திருவருளும் நிரம்பக் கிடைக்கும். ஐந்தாம் வீடு, தெய்வீகத்தையும் தெய்வீக உண்ர்வையும் மந்திரங்களின் ஞானத்தையும் அளிக்கக்கூடிய இடமாகும். தெய்வ பக்தியையும் இறைவனுடன் உள்ளுணர்வில் பேசுகின்ற திறனையும் கூட வழங்கி விடும் வீடு. நல்லொழுக்கத்திற்கு உகந்த வீடு. இந்த வீடு பாதிக்கப்பட்டிருந்தால் அந்த ஜாதகர் தீயொழுக்கத்திற்கும் உட்படுவார் என்ற எதிர்மறை விஷயத்தையும் புரிந்து கொள்ள வேண்டும்.
ஆறாம் பாவத்திற்கு ஒரு விசேட சக்தி பிறக்குமானால் சலனமற்ற உள்ளம் அமைவதுடன் மற்றையோருக்குத் தொண்டு செய்கின்ற மனப்பான்மையும் அமையக்கூடும்.
ஏழாம் வீடு பலம் பெற்றிருக்கும் பட்சத்தில் தரும குணமும் உலக ஞானம் கைவரப் பெறுவற்கும் பல பயணங்களை மேற்கொள்ளுகிற வாய்ப்பும் எல்லோரையும் தன் வசப்படுத்துகின்ற காந்த சக்தியும் ஏற்படக் கூடும்.
எட்டாம் வீட்டிற்கு ஒரு விசேஷமான பலம் அமையுமானால் தரும ஸ்தாபனங்களை அமைக்கின்ற தகுதியும் பற்றற்ற தன்மையும் மற்றையோருக்காகத் தன்னை அர்ப்பணம் செய்யும் மனப்பான்மையும் வரக்கூடும்.
ஒன்பதாம் வீடு தருமம் என்று அழைக்கப்படுகிறது. தருமம் என்றால் கொடை குணம் மட்டுமே அன்று. மதபக்தி, தெய்வபக்தி, நீதிவழி நிற்றல், சத்தியக் கோட்பாடு, நேர்மையில் நாட்டம் மற்றும் நேரான நடத்தை ஆகியவை கைவரப் பெறும்.
பத்தாம் வீடு பலம் பெற்றிருக்கும் பட்சத்தில் மற்றையோர் பாராட்டும் வகையில் சாதனைகள் செய்யும் சக்தியும் கர்ம யோகத்தில் தேர்ச்சியும் ஆன்மிக ஞானமும் ஏற்படும்.
பதினொன்றாம் பாவம் வலுத்திருக்கும் பட்சத்தில் அறிவின் பரந்த ஆகாசத்தில் சஞ்சாரம் செய்கின்ற அபரிமிதமான ஆற்றலும் சுபகருமங்களைச் செய்கின்ற வாய்ப்பும் வசதிகளும் ஏற்படக்கூடும்.
பன்னிரண்டாம் பாவம் வலுத்திருக்கும் பட்சத்தில் தரும குணமும் தியாக சீலமும் முக்தியில் நாட்டமும் சுபகாரியங்களுக்காக தன்னையும் தன் உடமைகளையும் அர்ப்பணிக்கும் பண்பையும் பெற முடியும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.