அதிர்ஷ்டம் அருளும் ஆறுவிரல் அரங்கன்!

புராணத்தில் போற்றப்படும் சேங்காலிபுரம் பெருமைகள் பல வாய்ந்த புண்ணிய தலமாகும்.
அதிர்ஷ்டம் அருளும் ஆறுவிரல் அரங்கன்!
Published on
Updated on
1 min read

புராணத்தில் போற்றப்படும் சேங்காலிபுரம் பெருமைகள் பல வாய்ந்த புண்ணிய தலமாகும். (கும்பகோணம் திருவாரூர் சாலையில் குடவாசலிலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ளது சேங்காலிபுரம்! வேதவித்துக்கள், நித்ய அக்னி ஹோத்திரிகள், உபன்யாச கர்த்தாக்கள்  நிரம்பி வாழ்ந்த ஊர். உபன்யாஸ சக்ரவர்த்தி என்று புகழப் பெற்ற ஸ்ரீ அனந்தராம தீட்சிதர் இவ்வூரைச் சேர்ந்தவரே! 

இத்திருத்தலத்தில் மூன்று சிவன் கோயில்கள், காளி கோயில், வரதராஜர், பரிமள ரங்கநாதர் பெருமாள் கோயில்கள், ஸ்ரீ தத்தாத்ரேயர் கோயில், வால்மீகி பர்ணசாலை என்ற பெயரில் ஸ்ரீராமர் சந்நிதி, சுப்பிரமணிய சுவாமி கோயில், கிராம தேவதை கோயில், மகான் ஸ்ரீ முத்தண்ணாவாள் அதிஷ்டானம் என திரும்பிய இடமெல்லாம் திருக்கோயில்கள் சூழ அமையப்பெற்றுள்ளது விசேஷமாகும். அவ்வகையில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீபரிமளரங்கநாதர் ஆலயம் மிகவும் சிறப்புப் பெற்றது. தற்போது இவ்வாலயத்தில் திருப்பணி வேலைகள் நடைபெற்று வருகின்றன.

பிரகலாதன் தனக்கு ஏற்பட்ட பித்ருஹத்தி தோஷம் நீங்கவும், துருவ வம்சத்தில் வந்த ப்ருது மன்னன் சம்பூர்ண ஞானம் பெறவேண்டியும், தசரத மன்னன் சத்புத்திரர்களை பெறுவதற்கும், பாண்டவர் வம்சத்தில் வந்த ஜனமேஜயன் தனக்கு உண்டான சர்ப்பதோஷ நிவர்த்திக்காகவும் இங்கு வந்து ரங்கநாதப் பெருமானை சேவித்து தங்கள் எண்ணம் ஈடேறப் பெற்றனர். பராசர முனிவருக்கு தவப்பலன் கிட்டியதும் இத்தலத்தில் தான். மேலும் மகரிஷிகள், முனிவர்கள், மன்னர்களும் இந்தப் பெருமாளை சேவித்து நற்பலன்கள் பெற்றுள்ளனர். 

இங்குள்ள பெருமாளுக்கு "ஸ்வயம் கலிஹரர்' என்ற பெயர் புராணத்தில் உள்ளது. அதனால் இந்த சேஷத்ரம் "ஸ்வயங்கலிஹரபுரம்' எனப்பட்டு பின்னர் "சேங்காலிபுரம்' ஆயிற்று. இக்கலியுகத்தில், கர்ணபரம்பரையாக கூறப்பட்டு வரும் தகவல்களின்படி தற்போது பெருமாள் இருக்கும் இடம் சுமார் 500 ஆண்டு
களுக்கு முன் பெரிய மண்மேடாகவும், சப்பாத்திக்காடாகவும் காட்சியளித்ததாம். ஒரு சித்தபுருஷர் அறிவுறுத்தலின் பேரில் இந்த இடத்தை தோண்டிப் பார்க்கையில் ஆதிசேஷன் மேல் பள்ளி கொண்ட நிலையில் நன்கு அமர்ந்த நிலையில் உள்ள ஸ்ரீதேவி, பூதேவியுடன் ஸ்ரீ ரங்கநாதப் பெருமாள் விக்ரகம் கிடைத்துள்ளது. அதனை அங்கேயே வைத்து கோயில் அமைத்ததாக வரலாறு. 

இங்கு பள்ளி கொண்டுள்ள பெருமானின் வலது திருவடியில் அபூர்வமாய் ஆறு விரல்கள் இருக்கின்றன. அபஸ்மாரம் (காக்காய் வலிப்பு), நாகதோஷம், புத்ரதோஷம், பித்ரு சாபம், மனக்கலக்கம், கலிதோஷம் என ஆறு வகையான இடர்கள் நீங்கும் பொருட்டு நமக்கு அருளுவதற்காக கலியுகம் முடிய இந்த அமைப்புடன் பெருமாள் காணப்படுவார் என்று இவ்வூர் ஆன்றோர்களும், பெரியோர்களும் கூறுகின்றனர். பொதுவாக, ஆறுவிரல்கள் கொண்டவர்களை அதிர்ஷ்டக்காரன் என்று கூறுவது வழக்கம். அவ்வகையில் இந்த பெருமானையும் அதிர்ஷ்டப் பெருமாள் என பக்தியுடன் மக்கள் அழைக்கின்றனர். 

சதுர்யுகம் கண்ட பெருமாள் ஆலயத்தில் நடைபெற்றுவரும் திருப்பணியில் பக்தர்கள் பங்குகொண்டு அரங்கனின் அருளைப் பெறலாம். 
தொடர்புக்கு: 94440 56737 / 94441 43331.
- எஸ்.வெங்கட்ராமன்
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com