சிந்தித்து உண்மையை உணர்ந்து நன்மை தரும் நல்ல செயல்களைச் செய்ய செம்மறை குர்ஆனின் வசனங்கள் வலியுறுத்துகின்றன. "" நாற்கால் பிராணிகளில் நிச்சயமாக உங்களுக்குப் படிப்பினை இருக்கிறது. உங்களுக்கு அவற்றின் வயிறுகளில் சாணத்திற்கும் ரத்தத்திற்கும் இடையிலிருந்து கலப்பற்ற பாலைப் பருகுவதற்குத் தாராளமாக தருகிறோம்'' என்ற எழில்மறை குர்ஆனின் 16 - 66 ஆவது வசனம் அறிவிப்பை ஆய்வோம்.
ஒட்டகம், பசு, ஆடு தின்ற தீனி சீரணமாகியதும் அவைகளில் அடிப்பகுதியில் சாணமும் மேல் பகுதியில் உதிரமும் உண்டாகின்றன. இரண்டுக்கும் இடையில் ரத்தமோ சாணமோ கலக்காமல் தூய பால் சுரக்கிறது. இவ்விரண்டில் எதுவும் ஒன்றில் ஒன்று கலக்காமல் தடுக்கப்பட்டு ஒன்றின் வாடையோ வண்ணமோ மற்றொன்றில் சேராமல் மடிக்குச் செல்கிறது,. ரத்தமும் நரம்புகளில் ஓடுகிறது. சாணம் குடலில் தங்கிவிடுகிறது.
அக் கால்நடைகளை அறுத்துப் பார்த்தால் குடலில் குருதியோ பாலோ இருக்காது. குடலின் அடியில் சாணமும் நடுவில் பாலும் மேற்பகுதியில் ரத்தமும் உள்ளதைக் காணலாம். பிராணிகள் நோயுற்றால் மடியில் பாலோடு ரத்தமும் வரும். ரத்தம் பாலாக மாறாது. கால்நடைகள் நோயுற்ற காலத்தில் மட்டும் பாலில் கலக்கும்
ரத்தம் பாலின் நிறத்தை மாற்றும். இத்தத்துவத்தின் சிந்தனை நம்மை சீராய் செயல்பட வைக்கும்; நாம் நேராய், நேர்மையாய் வாழ உதவும்.
தற்காலத்தில் தூய்மை இல்லாத கலப்பட பால் பெருகி விற்பதைக் காண்கிறோம். எக்காலத்திற்கும் ஏற்ற குர்ஆன் இவ்வசனத்தில் கலப்பற்ற பாலைப் பருகுபவர்களுக்குப்
புகட்டுவதாக புகன்று தூய்மை அற்ற பால் விற்கப்படுவது பற்றி எச்சரிக்கிறது.
"" அதன் வயிறுகளிலிருந்து பல வண்ணங்களில் வகைகளில் வரும் பானம் மனிதர்களுக்கு ஆரோக்கியம் அளிப்பது'' என்ற குர்ஆனின் 16 - 69 ஆவது வசனமும்
சிந்திப்பவர்களுக்குச் சான்றாக விளங்குகிறது, தேனீக்கள் கனிகள் மலர்களிலிருந்து சாறை உறிஞ்சி தேனாக வெளியாக்குகிறது. தேனீக்களின் வயது பருவத்திற்கேற்ப
தேனின் நிறம் மாறுபடும். இளந்தேனீயின் தேன் வெண்ணிறத்திலும் நடுவயது தேனீயின் தேன் மஞ்சள் நிறத்திலும் கிழ தேனீயின் தேன் செந்நிறத்திலும் இருக்கும்.
சிந்தித்தால் ஆதாரங்களைப் பெறலாம். அந்த ஆதாரங்களின் அடிப்படையில் செயல்பட்டால் படிப்படியாக முன்னேறி பயன் பெறலாம். கொட்டினால் கடுக்கும் நஞ்சுடைய தேனீயின் வாயிலிருந்து இனிக்கும் தேன் உருவானதை உணர்ந்து பார்க்க வேண்டும்.
ஆதிமனிதன் ஆதம் நபி அன்னை ஹவ்வா இணையிடமிருந்து தோன்றியவர்களே இவ்வுலக மக்கள். ஆனால் அம்மக்கள் கருப்பு, மஞ்சள், சிவப்பு, வெண்மை நிறத்தவராய்
வேறுபட்ட வண்ணங்களில் வலம் வருகின்றனர். பல மாறுபட்ட மொழிகள் பேசுகின்றனர். சீரிய குர்ஆனின் நேரிய வசனப்படி சிந்தித்தால் எம்மொழி பேசினும் எந்நிறத்தவர்
ஆயினும் அனைவரும் சமம் என்பதை அறியலாம்; சகோதரத்துவம் பேணலாம்; சமத்துவ சமுதாயம் அமையும்.
""வானங்களையும் பூமியையும் படைத்திருப்பதும் உங்களின் மொழிகளும் நிறங்களும் வேறுபட்டிருப்பதும் அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் உள்ளது. அறிவுடையோருக்கு
இதில் பல சான்றுகள் உள்ளன'' என்ற 30 - 22 ஆவது வசனம் ஒன்றைப் படித்து கேட்டு அறிந்தோர் அதன் உண்மையை உணர ஆதாரங்களைத் தேடுவது; ஆதாரங்களின்
அடிப்படையில் ஆராய்ச்சி செய்வது; ஆராய்ச்சியின் முடிவைப் பலரும் அறிய பரவலாக்கி; அதன் பயனை உலகம் துய்க்க; துணைபுரிவதற்குரிய உரிய சான்றுகளின் ஒன்றாக
அல்லாஹ்வின் படைப்புகளில் சிலவற்றைச் செப்புகிறது.
இச்சான்றுகளின் அடிப்படையில்
சிந்தித்து முந்திய நூல்களை வரலாற்றை ஆய்ந்த அறிஞர்களின் கூற்று ஆதியில் எழுபத்திரெண்டு மொழிகள் இருந்தன. நூஹ் நபியின் மகன் ஸôமின் சந்ததியினர்
எழுபத்திரெண்டில் பத்தொன்பது மொழிகளைப் பேசினர். யாபிதின் சந்ததியினர் முப்பத்தாறு மொழிகளைப் பேசினர். அறிவிப்பவர் - வஹபு (ரஹ்).
அல்லாஹ்வின் தூதர்கள் அனைவரும் அவர்களின் காலத்து மக்களை நடுநிலையாய் சிந்தித்து நல்ல கொள்கையை ஏற்க ஏவினர். இவ்வாறு இப்ராஹீம் நபி ஏவியதை
எடுத்துரைக்கிறது குர்ஆனின் 21 - 67 ஆவது வசனம். மூசா நபி கீழ் மேல் நாடுகளையும் அதற்கு மத்தியில் உள்ள நாடுகளையும் படைத்து காப்பவனை நீங்கள்
சிந்திப்பவராயின் சிறப்பாக அறிவீர் என்று கூறினார்கள். முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தோழர்களைச் சிந்தித்து சிறந்த தீர்வுகளைக் கூறும்படி ஆலோசனை கேட்பார்கள்.
சிந்தித்தால் கடின காரியங்களையும் எளிதாய் முடிக்கும் ஏற்ற வழியைக் காணலாம். ஆழ்ந்த சிந்தனை தொலை நோக்கோடு ஆக்க வழியில் முனையும் முயற்சியில்
வெற்றியை நல்கும்; நேர் வழிக்கும் பிறழ் வழிக்கும் இடையே உள்ள வேறுபாடுகளைப் பிரித்து காட்டும்; பிரச்னைக்குரிய தீர்வை எளிதாக்கும்; தடைகளை உடைத்தெறிய
உதவும்; சவால்களைச்
சந்தித்து வெற்றி பெற உற்ற துணைபுரியும். புதிய படைப்புகளுக்கு பாதை அமைக்கும்; கண்டுபிடிப்புகளின் பக்கம் பார்க்க வைக்கும். வேக வளர்ச்சியில் புதிய
கண்டுபிடிப்புகளின் தாகம் தீராதது. சிந்தனை அப்பக்கம் நம்மைத் திருப்பி பயிற்சி பெற்று முயற்சி செய்து புதியன காணும் உதிப்பை உண்டாக்கும்.
அல்லாஹ்வின் படைப்புகளைப் பற்றி ஆழ்ந்து சிந்திக்க செப்பும் செம்மறை குர்ஆனின் 87 - 17 முதல் 20 வரையுள்ள வசனங்கள் வரையறுக்கிறபடி சிந்திப்போம்;
செயல்படுவோம்; செம்மை பெறுவோம்; செயல்பாட்டின் நன்மைகளை நாட்டிற்கு அர்ப்பணிப்போம். அல்லாஹ் அருள்புரிவான்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.