
திருவண்ணாமலை என்ற 2668 அடி உயர மலையே சிவன்! சிவனே மலை! சிவன் வேறு, மலை வேறு அன்று. இங்கு இரண்டும் ஒன்றுதான்.
புராண வரலாறு:
படைப்புக் கடவுள் பிரம்மா, "தான் தான் பெரிய கடவுள்!' என்றார். காத்தல் கடவுளாம் திருமாலோ, "தான் தான் பெரிய கடவுள்!' என்றார். இருவரும் சிவனிடம் சென்று முறையிட்டனர். அப்போது, அவர்களின் ஆணவத்தை அடக்க, மிகப் பெரிய ஜோதி மலையாக வடிவம் எடுத்தார் சிவன்! பிரம்மாவிடமும் திருமாலிடமும் யார், தன் அடி முடியை முதன் முதலில் காண்கிறார்களோ, அவரே பெரிய கடவுள் என்றார்.
பிரம்மா அன்னப்பறவை வடிவம் எடுத்து, சிவனின் திருமுடியைக் காணப் புறப்பட்டார். ஆனால் சிவனின் முடியைக் காணாமல் திண்டாடிய நேரத்தில் எதிரே ஒரு தாழம்பூவைப் பார்த்தார். தான் சிவனின் திருமுடியைக் கண்டதாகப் பொய் சாட்சி கூறுமாறு தாழம்பூவிடம் கேட்டுக்கொண்டார் பிரம்மா. தாழம்பூவும் சிவனின் திருமுடியை பிரம்மா கண்டதாகப் பொய் சாட்சி கூறியது. இதனால் கோபம் கொண்ட சிவன் "தாழம்பூ இனி என் பூஜைக்குரிய மலர் இல்லை!' என்று கட்டளையிட்டார்.
திருமால் வராக அவதாரம் எடுத்து பூமியை குடைந்து கொண்டே போனது தான் மிச்சம்! ஆனால் சிவனின் அடி முடி காணாமல் திருமாலும் பிரம்மாவும் சிவனிடமே தஞ்சம் புகுந்து மன்னிப்புக் கேட்டனர். விழிகள் கூசும் படியாக மிகப் பெரிய ஜோதிவடிவம் தாங்கிய சிவன், பிரம்மாவும் திருமாலும் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, தன் ஜோதியைச் சற்றே சுருக்கி, உமாதேவியை இடப்பாக ஏற்று, அர்த்தநாரீஸ்வரராகக் காட்சி கொடுத்தார். அந்த நாளே திருவண்ணாமலை திருக்கார்த்திகை மகாதீப விழாவாகக் கொண்டாடப் பெறுகின்றது.
உமாதேவி சிவனின் இடப்பாகம் பெற்ற வரலாறு:
ஒருநாள், உமாதேவி, சிவனின் இரு விழிகளையும் வேடிக்கையாக மூட, இந்த பிரபஞ்சமே இருளில் மூழ்கியது. பல்லுயிர்களும் துன்புற்றன. இந்த பாவம் போக்கிட "" உமையே, காஞ்சியில் மண் லிங்கம் அமைத்துக் கடுந்தவம் புரிந்து, பின்னர் திருவண்ணாமலைக்கும் வந்து, கடும் தவம் மேற்கொண்டால் என் உடலில் இடப்பாகம் பெறுவாய்!'' எனப் பணித்தார் சிவபெருமான். அவ்வாறே காஞ்சியில் மண் லிங்கம் அமைத்து தவம் மேற்கொண்ட பின்னர், திருவண்ணாமலை, துர்க்கை அம்மன் ஆலயம் அருகே பர்ணசாலை அமைத்து, கவுதம முனிவரின் அருளாசியுடன் அருந்தவம் மேற்கொண்ட போது அட்டகாசம் செய்த அசுரத்தலைவன் மகிஷாசூரனை அழித்தாள் அன்னை பார்வதி.
திருக்கார்த்திகை பௌர்ணமி நாளில், கிருத்திகை பிரதோஷ நேரத்தில் மலைமேல் ஜோதி தரிசனம் கண்டு, வணங்கி சிவனின் இடப்பாகம் பெற்றாள் உமாதேவி. சிவனின் இடப்பாகம் பெற்ற பவழக்குன்றுப் பகுதி, திருவண்ணாமலை துர்க்கை அம்மன் ஆலயம் அருகே உள்ளது. எனவே, திருக்கார்த்திகை தீப விழா தொடங்கும் இடம் துர்க்கை அம்மன் கோயிலாகும்.
பதிமூன்று நாள்கள் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப் பெறும் திருவண்ணாமலை மகா தீப விழாவில் முதல் மூன்று நாள்கள் துர்க்கை அம்மனுக்கு விசேஷ வழிபாடு நடந்து வருகின்றது. தாம் சிவனின் இடப்பாகம் பெற்றதற்கு நன்றி கூறுமுகந்தான், உமாதேவியே திருவண்ணாமலையில் திருக்கார்த்திகை மகா தீபம் ஏற்றி விழாவை முதன்முதல் தொடங்கி வைத்ததாகப் புராணம் கூறும்.
திருவண்ணாமலை கிரிவலம் பாதை 14 கி.மீ. சுற்றளவு கொண்டது. "கிரிவலம்' செல்பவர்களுக்கு அனைத்து யாகங்களும் செய்த புண்ணிய பலன் உண்டு
என்கிறது புராணம்.
கிழமையும் பலனும்: ஞாயிறு - கிரிவலம், சிவபதம். திங்கள்-கிரிவலம், வல்லமை தரும். செவ்வாய் - கிரிவலம், வறுமை நீங்கும். புதன்- கிரிவலம், கலைகளில் தேர்ச்சி. வியாழன்- கிரிவலம், ஞானியாவார். வெள்ளி- கிரிவலம், விஷ்ணு பதம். சனி- கிரிவலம், நவக்கிரகங்களை வழிபாடு செய்த பலன்.
ஒவ்வோர் பௌர்ணமி நாளிலும் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை ஏறத்தாழ 7 லட்சத்தைத் தாண்டும். திருக்கார்த்திகை, மகா தீப விழா, சித்திரை முழு நிலா விழா நாள்களில் கிரிவலம் பக்தர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தையும் தாண்டும்.
மன நலம் நல்கிடும் மலை வலம்:
"உடம்பை வளர்த்தேன், உயிர் வளர்த்தேனே!' - என்பார் திருமூலர். இந்த உடல் வளர்ந்தால் தான் உயிர் வாழும். உள்ளம் வாழும். உடல் நலமும் வளமும் பெற்றிட மனிதனுக்குத் தூய்மையான காற்று மிகவும் அவசியம். திருவண்ணாமலை கிரிவலம் பாதையில் ஏராளமான மூலிகைச் செடிகள் செழிப்பாக வளர்வதால் உடலுக்குரிய தூய்மையான மூலிகைக் காற்றை கிரிவலப் பாதையில் நுகர முடியும். மேலும் மலைவலம் வருவது மனநலம் காத்திடும் என்பது விஞ்ஞான ரீதியில் ஆய்வு முடிவாகும். சிவனே மலையாக, மலையே சிவனாக மலர்ந்த திருவண்ணாமலை திருத்தலத்தில் எண்ணற்ற சித்தர்கள் உள்ளனர்.
பகவான் ரமணர் பார்வையில் கிரிவல மகிமை: மகான் ரமண மகரிஷிகள், பௌர்ணமி நாளில் மட்டுமல்லாமல் நினைத்தபோதெல்லாம் கிரிவலம் செல்வார். கிரிவலம் செல்லும்போது எல்லாம்வல்ல அண்ணாமலையாரே உடன் வருவதாக ரமணர் குறிப்பிட்டுள்ளார். கிரிவலம் செல்லும் போது பக்தர்கள் வெற்றுப்பேச்சு பேசாமல், திருவாசகம், தேவாரம், திருப்புகழ் பாடல்களைப் பாடிக்கொண்டே நடைபயணம் மேற்கொள்வது நல்லது என்பார் ரமணர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.