விரும்பியது கொடுக்கும் மண்டை விளக்கு மகாதேவர்!

காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயில் வளாகத்துக்குள் இரண்டு சிவன் கோயில்கள் அமைந்திருப்பது வித்தியாசமானது.
விரும்பியது கொடுக்கும் மண்டை விளக்கு மகாதேவர்!
Updated on
2 min read

காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயில் வளாகத்துக்குள் இரண்டு சிவன் கோயில்கள் அமைந்திருப்பது வித்தியாசமானது. 10 -ஆம் நூற்றாண்டு தண்டியலங்காரத்தில் "கனல் மழுவன் கச்சாலை எம்மான்' என்ற மேற்கோள் பாட்டு எடுத்துக்காட்டப் பட்டுள்ளதால் பல்லவர் காலம் முதல் இத்திருக்கோயில் இருந்திருக்கிறது.
உலகை மறு சிருஷ்டி செய்ய சிவபிரான், அண்டப் பெருவெளியில் உமாதேவியார் காணும்படித் திருநடனம் ஆடினார். காஞ்சிபுரத்தில், சோதிமயமான கச்சபேச லிங்கத்தில் தாமே தோன்றித் தம் சக்தியால் மீண்டும் அனைத்தையும் படைத்தருளினார். அச்சோதியைப் பிரம்மதேவன் சரஸ்வதியுடன் வழிபட்டுப் படைப்புத் தொழிலை மீண்டும் துவங்கினான்.
மற்றொரு நேரத்தில் தேவர்களும் அசுரர்களும் மந்திர மலையை மத்தாக்கி பாற்கடலைக் கடைந்தனர். திருமால் ஆமை வடிவம் கொண்டு சரிந்த மந்திர மலையைத் தன் முதுகில் தாங்கி நிறுத்த, அமுதம் தேவர்களுக்குக் கிடைத்தது. மகிழ்வில் திருமால் அக்கடல் முழுதும் திரிந்து கலக்கினார். அஞ்சிய தேவர்கள் சிவனைத் தஞ்சமடைய அந்த ஆமையை அழித்து, அதன் ஓட்டினைத் தமது மார்பில் அணிந்து கொண்டார் சிவபெருமான்.
தவறுணர்ந்த திருமால், குற்றம் நீங்க இச்சோதிலிங்கத்தினை வழிபட்டார். ஆமை வடிவில் திருமால் வழிபட்டதால் இந்த லிங்கம் கச்சபலிங்கம் எனவும் கோயில் கச்சபேஸ்வரம் எனப்பட்டது. இக் கச்சபேசப் பெருமானை வழிபடுவதால் இவ்வுலகில் துன்பம் நீங்கி இன்பம் பெற்று முடிவில் முத்தியும் பெறுவர் என காஞ்சி புராணம் கூறுகிறது.
தீ வடிவான சிவனை வேண்டி, இந்த அக்னி சொரூபம் மறைத்துத் தோன்றி காட்சி தந்தருள வேண்டுமென அனைத்து தேவர்களும் வேண்டினர். ஈசன், அவ்வாறே, ஒரு குளத்தை உருவாக்கி அதன் கரையில் சிவலிங்கமாக இருந்து அருள்புரிந்தார். பக்தர்களின் இஷ்டத்தை பூர்த்தி செய்பவராதலால் "இஷ்டசித்தீஸ்வரர்' ஆனார்.
பிருகு முனிவரின் வம்சத்தில் தோன்றிய தசீசி முனிவர் குபன் என்னும் அரசனுடைய நண்பராவார். ஒருநாள் அரசர், அந்தணர் இவர்களுள் யார் சிறந்தவர் என்ற விவாதம் வந்தது. ததீசி முனிவர் "அந்தணரே', எனவும், குபன், "அரசரே' எனவும் பேசினர். இந்த விவாதம் பெரும் போராக மாறியது. முனிவர் அரசனை அடித்தார். அரசன் முனிவரை வஜ்சிராயுதத்தால் வெட்டினான். வெட்டுண்டு விழும்போது முனிவர் சுக்கிரனை நினைத்துத் தரையில் விழுந்தார். சுக்கிரன், முனிவரின் துண்டுபட்ட உடலைப் பொருத்தி உயிர்பெறச் செய்து அவரிடம், காஞ்சி சென்று இஷ்டப்பட்டதை அருளும் இஷ்டசித்தீஸ்வரரை வணங்கி சாகாத் தன்மையைப் பெறுமாறு கூறினார்.
மேலும், காஞ்சி கச்சபேசத்தில் இஷ்ட சித்தீஸ்வரர் சந்நிதி அருகில் இஷ்டசித்தித் தீர்த்தம் உள்ளது. இத்தீர்த்தத்தில் நீராடி அருகில் உள்ள இஷ்ட சித்தீசப் பெருமானை வணங்கியே மிருதசஞ்சீவினி என்னும் இறந்தவரை எழுப்பும் மந்திரத்தை சுக்கிராச்சாரியார் பெற்றார். ஆதலால் அதில் மூழ்கினால் சிவபெருமானின் திருவருளோடு, அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய பயன்கள் கிடைக்கும் . ஞாயிற்றுக்கிழமைகளில் நீராடுவது மேலும் பெரும்பயன் தரும். இத்தீர்த்தத்தில் தர்மதீர்த்தம், அர்த்த தீர்த்தம், காமதீர்த்தம், முக்திதீர்த்தம் என்னும் 4 தீர்த்தங்களும் உள்ளன. அதன் கரையில் தானம் செய்தால் பலன்கள் பன்மடங்கு ஆகும் என்று கூறினார் சுக்கிரர். இதைக் கேட்ட ததீசி காஞ்சி வந்து நீராடி இஷ்டசித்தீஸ்வரரை வணங்கி என்றுமே சாகாத உறுதியான உடலைப் பெற்றார்.
இஷ்டசித்தி தீர்த்தத்தில் நீராடி இஷ்டசித்தீசரை வழிபடுவது என்பது வைகாசி, ஆடி, மாசி மாதத்திலும் உண்டு என்றாலும் கார்த்திகை மாதத்தில் பக்தர்கள் பெருமளவில் இதில் நீராடி, புதுமண்சட்டியில் பச்சரிசி மாவு, வெல்லம் சேர்த்து உருட்டி ஸ்தூல சரீரமாக உருவகித்தும் சூட்சும சரீரமாக , அகலில் நெய்யிட்டுத் தீபமேற்றி, தேங்காய், பூ, பழத்தை அந்த மாவில் வைத்து சட்டியைத் தலையில் வைத்துக் கொண்டு கோயிலை விநாயகர் சந்நிதியில் துவங்கி சுற்றி வருவர்.
இதனால் தலைவலி, காதுவலி, காதில் சீழ்வடிதல், தலைக் குத்து போன்றவை நீங்கும். மாவிளக்குப் போடுவதாக வேண்டிக் கொள்ளுதல் இத்தலத்துக்குரிய சிறப்பாகும். கச்சபேஸ்வரர் திருக்கோயில் காஞ்சி மாநகரத்தில், நடுநாயகமான, ராஜவீதியில் அமைந்துள்ளது.

தொடர்புக்கு: 82481 14974/ 96776 53044.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com