அருளாளரைத் தேடிவந்த அன்னபூரணி!

இசையால் இறைவனைத் தன் வசப்படுத்திக் கொண்ட இசை ஞானிகளில் காளி உபாசகரான வங்கதேசத்தைச் சேர்ந்த ராம்பிரசாத் என்ற மஹானும் ஒருவர்.
அருளாளரைத் தேடிவந்த அன்னபூரணி!
Updated on
2 min read

இசையால் இறைவனைத் தன் வசப்படுத்திக் கொண்ட இசை ஞானிகளில் காளி உபாசகரான வங்கதேசத்தைச் சேர்ந்த ராம்பிரசாத் என்ற மஹானும் ஒருவர்.

வங்க தேசத்திலுள்ள கும்ஹார்கட்டா என்ற கிராமத்தில் ராம் - ராம் சென், சித்தேஸ்வரி தம்பதியர்களுக்குப் பிறந்தவர். மண்பானைகள் செய்யும் குடும்பத்தை சேர்ந்த இவர், உருது, பாரசீகம், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் தேர்ச்சி பெற்றவர். ஸரவாணி என்ற பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு, பின்னர் உலக வாழ்க்கை மீது பற்றின்றி துறவறம் மேற்கொண்டார். "ஆகம வாசீகர்' என்ற தாந்திரீக பக்தரிடம் ஞானோபதேசம் பெற்று "காளி' மாதாவின் மீது அளவில்லாத பக்தி கொண்டு சக்தி உபாசனையில் முழு நேரத்தை செலவழித்து காளி மாதாவின் மீது எண்ணற்ற பாடல்களைப் பாடினார். ஒவ்வொரு நாளும் கங்கையில் கழுத்தளவு நீரில் நின்று கொண்டு இதயத்தை தொடும் பாடல்களை காளி தேவியின்மீது "ஹிருதயகங்கா' என்ற பாடல்களைப் பாடுவார்.

ஒரு சமயம், ஒரு சிறு பெண் அவரிடம் வந்து ஒரு பாடல்பாடும் படி கேட்க, அதற்கு அவர் "நான் இப்போது காளி பூஜையில் இருக்கிறேன். போய் விட்டு அப்புறம் வா" என்று கூறி அனுப்பிவிட்டார். அன்று மாலை அவர் தனது பூஜை அறைக்குள் சென்ற பொழுது அங்கே உள்ள சுவரில் "நான் உன் பாட்டைக் கேட்டு ரசிக்க காசியிலிருந்து வந்த அன்னபூரணி. பாட மறுத்து விட்டாய் உனக்கு எப்போது நேரம் கிடைக்கிறதோ அப்போது காசிக்கு வந்து பாடு" என்று எழுதப்பட்டு இருந்தது. அதைக்கண்ட  ராம்பிரசாத் அதிர்ச்சியடைந்து உடனே காசிக்குப் புறப்பட்டார். பாதிவழியில் இரவு வந்துவிடவே, இரவைக் கழிக்க அங்கேயோ படுத்து உறங்கிவிட்டார். "நீ இங்கேயே பாடு நான்  கேட்கிறேன்' என்று கனவில் வந்து அன்னபூரணி கூறினாள். உறக்கம் கலைந்த ராம் பிரசாத் அந்த இடத்திலேயே அமர்ந்து அற்புதமான பாடல்களை அன்னை மீது பாடினார்.

அன்று முதல் அவர் காளி உபாசனையில் முழுவல்லமை பெற்றார். ஊர் ஊராக நடந்தே புனிதப் பயணத்தை மேற்கொண்டார். பல பக்தர்கள் அவரைத் தொடர்ந்தனர். இவர் பாடல்கள் மெருகேறியது. வடமாநிலம் முழுவதும்  பரவியது.

இவர் தீபாவளித் திருநாளை மிகச் சிறப்பாகக் கொண்டாடுவார். தீபாவளித் திருநாளன்று அன்னையின் உருவத்தை மண்ணால் செய்து அலங்கரித்து இரவு முழுவதும் பஜனை செய்து பாடல் பாடி ஆடுவார். சில சமயம், காளி மாதா உடன் வந்து ஆடுவாளாம்! இதைக் காண பக்தர்கள் கூடுவார்கள். ஒளிமயமான அந்த ஆனந்த பஜனை அங்கே அமர்க்களப்படும். இப்படிப் பல தீபாவளிதிருநாள்கள் கடந்தன.

கடைசியாக, ஒரு  தீபாவளித்திருநாளன்று இந்த ஆனந்த உற்சவம் இரவு முழுவதும் நடந்தது. மறுநாள் காலை காளி மாதாவின் திருவுருத்தைத் தலையில் தாங்கியபடி கங்கையில் வழக்கம் போல இறங்கினார் ராம்பிரசாத். அந்த மண்சிலையோடு சிலையாக அருட்ஜோதியாகக் கலந்தார் ராம்பிரசாத். அப்படியே கங்கையில் மூழ்கினார். பக்தர்கள் கரம் குவித்து கண்ணீர் மல்க அப்படியே கங்கைக் கரையில் விழுந்து வணங்கினார்கள். 

இன்றும் வங்கதேச மக்கள் தீபாவளியன்று இரவு முழுவதும் அவர் படத்தை வைத்து, வரிசையாக தீப மேற்றி அவரது பாடல்களைப்பாடியும் ஆடியும் கொண்டாடுகின்றனர். 
- ராமசுப்பு

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com