

மதங்கம் என்றால் யானை என்பது பொருள் . ஊழிக்காலத்தின் இறுதிப்பகுதியில் பிரம்மதேவன், ஷமதங்கம்' எனும் யானையின் வடிவம்கொண்டு சிவனைத் துதித்தார். சிவனின்அருளால் படைக்கும் ஆற்றலைப் பெற்றார். மதங்க வடிவில் இருந்த பிரம்மா தன் ஆற்றலால் மதங்க முனிவரை மகனாகப் பெற்றார்.
இவர் பூர்வ ஜென்மப் பலனால் புண்ணியங்கள் நிறைந்த திருவெண்காடு எனும் ஸ்வேதவனத்தை அடைந்தார். அங்கு சிவனை எண்ணி தியானம் இருந்து அன்னை பார்வதியே தனக்கு மகளாக பிறக்க வேண்டும், சிவனே தனக்கு மருமகனாக இருக்க வேண்டும் என்று வரம் கேட்க, சிவனும் அருளினார். மஹாசக்தியே நேரடியாக பிறக்க இயலாததால், அன்னையின் மந்திரிணி சக்தியே அவருக்கு மகளாகப் பிறப்பெடுத்தாள்.
ஆடி மாத வெள்ளிக்கிழமை, திருவெண்காட்டு ஆலயத்தின் மதங்க புஷ்கரணியில் ஒரு நீலோத்பல மலரில் ஸ்ரீ ராஜமாதங்கி அவதரித்தாள். மதங்க முனிவர் மகளாக ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அவதரித்ததால் ராஜமாதங்கியானாள். சர்வ அலங்காரத்தோடு பிறந்த அன்னை ராஜ ஷ்யாமளா, அற்புதமான சக்தியாக வளர்ந்து வந்தாள். அன்னைக்கு ஏழு வயதில் மதங்க முனிவர். சித்திரை மாத சுக்ல பட்சத்தில், சப்தமியன்று ஈசன் மதங்கேஸ்வரராக வருகை புரிய, அன்னை முப்பெரும் தேவியர் புடைசூழ, திருவெண்காட்டில் திருமணம் செய்துகொண்டார் என திருவெண்காட்டு தலபுராணம் கூறுகிறது.
மதங்கேஸ்வரர் - மாதங்கி திருமணத்தின்போது அன்னை மாதங்கிக்கு எந்தச் சீர்வரிசையுமே செய்யப்படவில்லை. அகிலத்தின் நாயகிக்கு நாம் என்ன செய்ய முடியும் என்று மதங்க முனிவர் எண்ணி அமைதியாக இருந்துவிட்டார். "ஆண்டவனின் திருமணமே ஆனாலும், சீர்வரிசை இன்றி திருமணம் செய்வது கூடாது' என தேவர்களில் சிலர் வாக்குப் பேசினர். அன்னையின் பக்தர்களில் சில தேவர்கள், சீர்வரிசை எதுவும் தேவையில்லை' என்று சொல்லி விட்டனர். சிவனே தலையிட்டு, சீர்வரிசை தருவதும் பெறுவதும் தவறு' எனக் கண்டிக்கவும், சீர்பெறுவது திருமணச் சடங்கு என பிரம்மா கூறவே, சிவனே நந்திதேவரை அனுப்பி கயிலையில் இருந்து பெரும் செல்வத்தினைக் கொண்டு வந்து, அன்னைக்கு ஸ்ரீதனமாகக் கொடுத்ததாக திருநாங்கூர் மாதங்கீஸ்வரர் ஆலய தலபுராணம் தெரிவிக்கிறது.
லலிதா சகஸ்ரநாமம்', "ஸ்ரீசாக்த ப்ரமோதத்தம்', "மீனாக்ஷி பஞ்சரத்னம்', "ஸ்ரீவித்யார்ணவம்', "சாரதா திலகம்', "நவரத்ன மாலா' போன்ற நூல்களில் அன்னை ராஜமாதங்கியின் புகழும் வரலாறும் போற்றிக்கூறப்படுகிறது. சாக்த ப்ரமோதத்தில் அன்னை , இசைவாணியாகவும், வாக் தேவதையாகவும் வர்ணிக்கப்பட்டு போற்றப்படுகிறாள். கலைகளின் தேவதையாகவும், அரசபோக வாழ்வை அளிப்பவளாகவும் இவளே விளங்குகிறாள். கலைகளில் தேர்ச்சி பெற, பதவி உயர்வு பெற, வாக்கு வளம் பெற, இவளை வணங்க வேண்டும். நவாவர்ண பூஜையும், குங்கும அபிஷேகமும் அம்பாள் ராஜமாதங்கிக்கு பிடித்தமானது. மீனாட்சி அன்னையே ராஜமாதங்கியின் அம்சம்தான் என்பதால், மீனாட்சியை வணங்குவதே ராஜ ஷியாமளாவை வணங்குவது போல்தான். இவள் லலிதையின் ராஜ்ஜியத்தில் பிரதம மந்திரியாகும். மரகத வர்ணத்தில் ஜொலிப்பதால் "ச்யாமளை' எனவும் அழைக்கப்பட்டுத் துதிக்கப்படுகிறாள்.
தமிழகத்தில் உள்ள மதுரை மீனாட்சி அம்மன் அம்பாளின் 51 சக்தி பீடங்களில் ராஜமாதங்கி -சியாமளா சக்தி பீடம் ஆகும். லலிதையின் ஸ்ரீபுரத்தில் உள்ள கடம்ப வனத்தில் உலவுபவள் எனப்படுவதால் கடம்ப வனமான மதுரையில் மலையத்துவஜ பாண்டியன் காஞ்சனமாலை வேண்டுதலை ஏற்று அக்னி குண்டத்தில் உதித்தாள். தேவியின் பெயர் மீன் போன்ற அழகான விழிகளை உடையவள் என்னும் பொருளில் தமிழில் அங்கயற்கண்ணி என அழைக்கப்படுகிறது. மீனாட்சியம்மனை வணங்கினால் சகல ஐஸ்வர்யங்களுடன் கூடிய வாழ்க்கை, கல்யாண பாக்கியம், குழந்தை பாக்கியம் அமைகின்றன. அம்பாளின் அருட்கடாட்சம் இருக்குமிடம் செல்வங்கள் அனைத்தும் சேர்ந்து செழித்து வளரும் வகையில் இருக்கும்.
திருமகள்- கலைமகள் இருவரின் ஒரே அம்சமாக வித்தை, தனம் ஆகிய இரண்டுக்குமே அதிதேவதையாக ராஜ மாதங்கி இருக்கிறாள். சைவத்தில் நவசக்தியாக வழிப்படப் படும் தேவி வைஷ்ணவத்தில் ஆதிலக்ஷ்மி, தானியலக்ஷ்மி, தைரியலக்ஷ்மி, கஜலக்ஷ்மி, சந்தானலக்ஷ்மி, விஜயலக்ஷ்மி, வித்யாலக்ஷ்மி, தனலக்ஷ்மி, என்ற அஷ்ட லக்ஷ்மிகளாக போற்றி வணக்கப்படுகிறாள்.
இசை இலக்கியம் நடனம் மற்றும் சகல கலைகளிலும் சிறப்பான தேர்ச்சியும், பதவி, நிர்வாக சாமர்த்தியம். நல்கும் ஞான வடிவினள் ஸ்ரீ ராஜமாதங்கி என்னும் ஸ்ரீ ஷ்யாமளாதேவி. ஸ்ரீவித்யா உபாசனையில் முதலில் ஸ்ரீ மஹாகணபதி மந்திரம், ஸ்ரீபாலாதிரிபுரசுந்தரி மந்திரம், ஸ்ரீ ராஜமாதங்கி மந்திர உபதேசம் செய்தபிறகு பிற கிரியைகள் தொடரப்படும். இதனிலிருந்தே ராஜமாதங்கி வழிபாட்டின் முக்கியத்துவத்தினை உணரலாம். மகாகவி காளிதாசர், ஸ்ரீபாஸ்கரராயர். முத்துஸ்வாமி தீஷிதர் போன்றோர் இவளை வணங்கி அருள் பெற்றவர்கள் என வரலாறு சொல்கிறது. ஈரோடு மாவட்டம், கொமாரபாளையம், சத்தியமங்கலம் அருள்மிகு அங்காள பரமேஸ்வரி திருக்கோயிலில் புரட்டாசி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை ராஜமாதங்கி யாகம் நடைபெறும்.
அவ்வகையில், இவ்வாண்டு காரியவெற்றி, சர்வஜன வசீகரம், பதவி உயர்வு. சிறப்பான நிர்வாகம், சங்கீதம் கலைகளில் தேர்ச்சி ஆகியவற்றுக்காக ஸ்ரீ ராஜமாதங்கி யாகம் மூலமந்திர ஜெபஹோமம் தீபாராதனை, திருப்பாவாடை, குழித்தளிகை ஆகியவற்றுடன் எதிர்வரும் புரட்டாசி மாதம் 1ஆம் தேதி 17.09.2017, ஞாயிற்றுக்கிழமை காலை 11.00 மணிமுதல் 12.00 மணிக்குள் நடைபெறுகின்றது.
தொடர்புக்கு: 98422 9204/ 91504 36668.
- இரா.இரகுநாதன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.