அவதாரம்! குறுந்தொடர் 9

விசிஷ்டாத்வைதமே வியாசரின் கருத்து என்பதைக் காட்டும். அற்புத ஆற்றல் விசிஷ்டாத்வைத வாதத்திற்கேயுள்ள தனிச் சிறப்பாகும்
அவதாரம்! குறுந்தொடர் 9
Published on
Updated on
3 min read

குறுந்தொடர்: 9

திசைகள் அனைத்தும் திக்விஜயம் தொடர்ச்சி...
விசிஷ்டாத்வைதமே வியாசரின் கருத்து என்பதைக் காட்டும். அற்புத ஆற்றல் விசிஷ்டாத்வைத வாதத்திற்கேயுள்ள தனிச் சிறப்பாகும். எதிரிகள் வாயடைக்கச் செய்யும் சிறப்புடைய தரமான விளக்கவுரை ஸ்ரீபாஷ்யமாகும்.

ஸ்ரீ பாஷ்யக்காரர் என்ற விருதோடு வடதேசத்திலிருந்து வீறுடன் திரும்பிய உடையவர் வாரணாசி வழியாக கங்கையை அடைந்து நீராடி, கடிநகரில் எம்பெருமானைக் கைதொழுதார். வண்புருஷோத்தமம் சென்று ஸ்ரீ ஜகந்நாதனையும் வணங்கி, தமது அருமைச் சீடர் எம்பார் பெயரால் மடம் ஒன்றையும் அங்கு நிறுவினார். பிறகு ஸ்ரீகூர்மம், சிம்மாத்ரி சிம்மகிரி அப்பனைத் தொழுது, அங்கு மாற்றுச் சமயவாதம் பேசுவோரை வாதில் வென்றார். அஹோபிலம் நரஸிம்ம மூர்த்திகளை மங்களாசாசனம் செய்தார்.

வடக்கிலிருந்து திரும்புகையில் திருவேங்கடத்தை அடைந்து அங்கு வேதார்த்த சங்க்ரஹம் என்னும் நூலை சொற்பொழிவாக அருளினார். உபநிஷத் சொற்களுக்குப் பொருள் கூறும் முறைகளைக் குறித்து அரிய பல நுட்பங்களை அதில் வெளியிட்டார். அவர் திருமலைக்கு வந்தபோது சமயச் சச்சரவு அங்கு ஏற்பட்டிருந்தது. இதற்கு ஒரு முடிவு கட்ட, இருதிறத்தாரையும் அழைத்து எம்பெருமானார் ஓர் ஏற்பாடு செய்தார். "விவாதத்திற்குரிய சமயச் சின்னங்களை திருமுன் வைப்போம். அவர் எதை எடுத்துக் கொள்ளுகிறாரோ, அதையிட்டு ஒரு முடிவுக்கு வந்து விடவேண்டும். பின்னர் விவாதம் கூடாது' என்றார் உடையவர்.

அனைவரும் ஒப்புக்கொள்ள. அவரவர் தங்கள் சின்னங்களை முதல் நாள் இரவு வைத்துக் கதவை முத்திரையிட்டுக் காத்திருக்க, மறுநாள் காலை திருக்காப்பு நீக்குகையில் திருவேங்கடவன் ஆழி சங்கத்துடன் காட்சி அளித்தான். இத்தகைய பல அற்புத அருட்செயல்களையும் ஆற்றல் மிக்க அறிவுச் செயல்களையும் இமயம் முதல் குமரி வரை விஜயம் செய்து பல இடங்களிலும் நிலைநாட்டி விட்டு, திக்குற்ற கீர்த்தியுடன் ஸ்ரீரங்கம் திரும்பினார் எம்பெருமானார்.

மேலை நாட்டில் பணி!
மதம் ஒன்று பிடித்த மன்னன் ஒருவன் துர்போதனையால் மாற்றுக் கொள்கையை நசுக்கத் துணிந்தான். ஆழ்வார்களின் திருமால் நெறியை, நாடெங்கும் விஜயம் செய்து உடையவர் வெற்றியுடன் நிறுவி வந்தார். அரங்கன் கோயில் அவரது ஐம்பதாண்டுப் பணியில் பூலோக வைகுந்தமாக விளங்கியது.

மன்னன் அவரது முயற்சியை நிர்மூலமாக்க பலதேசத்துப் பண்டிதர்களையும் வரவழைத்து தான் சொல்லும் தெய்வத்துக்கு மேல் தெய்வம் இல்லை என்று சாசனம் தயார் செய்து கையெழுத்திட வற்புறுத்தினான். சிலர் கையொப்பமிட்டுத் தந்தனர்.

நாலூரான் என்னும் அமைச்சன், ராமானுஜன் கையெழுத்தில்லாவிட்டால் அது செல்லாக்காசு என்று ஓத, சோழன், ராமானுஜரை கொண்டு வர ஆணையிட்டான். அரசனின் ஆட்கள் ஸ்ரீரங்கம் விரைந்து மடத்தில் நின்றனர். எதையும் எதிர்பார்த்திருந்த ஆழ்வான், நீராட்டத்துக்குப்பின் அணிவதற்காக வைத்திருந்த உடையவரின் காவி ஆடையை அணிந்து முக்கோலையும் கையிலேந்தி வாசலில் நடந்தார். அதற்குள் ஆசார்யர் பெரிய நம்பியும் நடப்பதை உணர்ந்து வேடமணிந்து சென்றவரோடு உடன் சென்றார்.

வெள்ளை உடுத்திய துறவி: ஆழ்வான் சென்றதுகூடத் தெரியாத ராமானுஜர் நீராட்டத்துக்குபின், ஈரம் துடைத்து காவியுடையையும் முக்கோலினையும் கொண்டுவரப் பணித்தார். நடந்தது கூறி அனைவரும் "தேவரீர், உடன் எதிர்த் திசையில் செல்ல வேண்டும்' என்று விரைவுபடுத்தினர்.

முதலியாண்டான் முதலானோர் நாற்பத்தைந்து பேருடன் வெள்ளுடை உடுத்திப் புறப்பட்டார் உடையவர். சோழ மன்னனின் ஆட்களுக்கு எட்டாமல் தமது சீடர்களோடு சென்று நாட்டு எல்லையைக் கடந்தார் ராமானுஜர். ஸ்ரீ ராமானுஜரின் பயணக்குழு கொங்கு நாட்டின் நீலகிரிச் சாரலில் இருக்கும் சீடன் நல்லான் சக்ரவர்த்தியின் சீடர்களான வேடர்கள் உபசரிப்பின் பின் கொள்ளேக்களம் என்னும் ஊரை அடைந்தனர். அங்கு ராமானுஜரின் சிஷ்யை கொங்கில் பிராட்டியிடம் தன்னை அடையாளம் காட்டி காஷாய உடை தரித்துப் புறப்பட்டார்.

ஹொய்சாள அரசன்: உடையவர், ஹொய்சாள வம்சத்து அரசன் விட்டல தேவனின் தொண்டனூர் சென்று சேர்ந்தார். மன்னன் சமணன், அவன் மகளை பேய் பிடித்து ஆட்டியது. சமண முனிவர்கள் பேய் விலக எந்த செயலையும் செய்யத் தயாரில்லை. உடையவர் ஸ்ரீபாததீர்த்தம் அரசன் மகளது பேயை விலக்கியது. ராமானுஜரின் தோற்றப் பொலிவு, அறிவுக்கூர்மை, ஒழுக்கச் சிறப்பு, ஆத்ம குணங்கள், இனிய பேச்சு, அதிசய ஆற்றல், அருள்நோக்கு எல்லாம் அரசனைக் கவர்ந்தது. அவர் அடிபணிந்து தனக்கும் உய்வு வேண்டினான். விட்டலதேவன் விஷ்ணுவர்த்தனானாக மாறினான். அங்கு, ஜைன பண்டிதர்களை வாதத்தில் ராமானுஜர் வென்றார்.

திருநாராயணபுரம் பயணம்: மைசூர் பகுதியில் யாதவாத்ரி அருகே துளசிக்காட்டில் ராமானுஜருடன் வந்த மன்னன்
விஷ்ணுவர்த்தனன் பெருமாளுக்குக் கோயில் கட்டி பெரிய குளமும் வெட்டினான். அங்கு நிறுவ மூலவர் திருநாராயணன் திருமேனியை ராமானுஜர் தை புனர்பூச நாளில் கண்டெடுத்துப் பிரதிஷ்டை செய்தார். திருநாராயணபுரத்தில் தைப் புனர்பூச நாள் இன்றும் விமரிசையாகத் கொண்டாடப்படுகிறது.

முகம்மதிய படையெடுப்பின் போது திருநாராயணனின் உற்சவரையும் சுல்தான் எடுத்துப் போயிருக்கிறான் என்பதை அறிந்த ராமானுஜர் டில்லி சுல்தானை நேரில் கண்டு உற்சவ மூர்த்தியைத் திரும்பத் தரக்கேட்டார். சுல்தான், தன் மகளுக்கு விளையாடக் கொடுத்திருந்தான். ராமானுஜரிடம் உற்சவமூர்த்தி தானாகவே வந்தால் எடுத்துச் செல்லுமாறு கூறினான்.

ராமானுஜர் குழந்தையைக் கொஞ்சி அழைப்பதுபோல் "என் செல்லப் பிள்ளாய் வருக!‘ என்று அழைக்க, சுல்தான் மகளிடம் இருந்த விக்ரகம் குழந்தை வடிவில் மாறி சலங்கை சல் சல் என்று ஒலிக்க அனைவரும் வியந்து பார்க்க நடந்து வந்து அவர் மடியில் அமர்ந்து மீண்டும் விக்ரகமானது. சுல்தான் உற்சவ மூர்த்தியை பொன்னும் பொருளுடனும் அனுப்பி வைத்தான். திருநாராயணபுரத்துக்கு அருகில் கொள்ளைக் கூட்டம் ராமானுஜரை வழிமறிக்க, அப்பகுதியில் வசித்து வந்த பின்தங்கிய மக்கள் ராமானுஜரின் உதவிக்கு வந்து துணையாக நின்றனர்.

திருக்குலத்தார் தரிசன அனுமதி: ராமானுஜர், அவர்களுக்குத் திருக்குலத்தார் என்று பெயரிட்டு மதிப்புடன் அழைத்து கடுமையான வைதீக எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் அவர்கள் கோயிலுக்குள் சென்று தொழும் உரிமையையும் பெற்றுக் கொடுத்தார். மேல்கோட்டை உற்சவமூர்த்தி, "செல்லப்பிள்ளை‘ என்றும்"யதிராஜ சம்பத்குமாரன்'என்றும் அழைக்கப்படுகின்றார். செல்வப்பிள்ளை திருநாராயணபுரம் வந்த நாளான"மாசி கேட்டை' இன்றும் டில்லி உத்சவம் என்று கொண்டாடப்படுகிறது.

உடையவரின் சமுதாயப்பணி: ஹொய்சாள மன்னனின் தலைநகர் தொண்டனூருக்குத் தமது எண்பது வயதுக்குமேல் மீண்டும் எழுந்தருளினார் ராமானுஜர். தொண்டனூரில் பல மடங்களை அமைத்து வைணவ பிரசாரத்தை செய்து வந்தார். குடிநீர் வசதிக்காக மோதி தலாப் என்று கூறப்பெறும் இரண்டரை மைல் நீளமுள்ள ஏரியை அமைத்தவர் ராமானுஜரே.

சோழநாட்டில் நாலூரான் மூலம் உடையவர் தப்பிவிட்டதை தெரிந்து கொண்ட சோழமன்னன் உத்தரவினால் கூரத்தாழ்வானும் பெரிய நம்பியும் தம் கண்களை இழந்தனர். சிறிது காலத்தில் சோழராஜன் மாண்டான் என்ற செய்தி ராமானுஜரைச் சென்றடைந்தது. அதற்குள் மைசூர் ராஜதானியில் 12 ஆண்டுகள் கழிந்து விட்டது.

தமர் உகந்த திருமேனி: ராமானுஜரோ ஆழ்வானை இனி ஒரு கணமும் பிரிந்திருக்கக் கூடாது என்று உடனே ஸ்ரீரங்கம் புறப்படத் தயாரானார். உடையவர் பிரிவைத் தாங்காது கண்ணீர் சிந்தினர் மேல்கோட்டை சீடர்கள். அவர்களுக்கு ஆறுதலாகத் தம்மைப்போல் ஒரு விக்ரகம் செய்து, அதைத் தழுவி அவர்களுக்கு அளித்தார். ராமானுஜரின் "தமர் உகந்த திருமேனி'யாக அந்த விக்ரகம் இன்றும் அங்கு வழிபாட்டில் உள்ளது.
- இரா.இரகுநாதன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com