மாங்கனி திருவிழாவும் மலையப் பெருமாள் பிள்ளையும்!

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்து காரைக்காலில் மாங்கனி திருவிழா கொண்டாடப்படுகிறது.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்து காரைக்காலில் மாங்கனி திருவிழா கொண்டாடப்படுகிறது. காரைக்காலில் பெருஞ்செல்வந்தராய் திகழ்ந்த கு. மலையப்பெருமாள் பிள்ளை ஏற்கெனவே இருந்த சிவன்கோயிலின் வெளிப்பகுதியில் காரைக்கால் அம்மையாருக்குத் தனி சந்நிதி கட்டி விழாவுக்கும் ஏற்பாடு செய்தார்.  

காரைக்கால் அம்மையார் திருமண உற்சவத்தின் போது மலையப்பெருமாளை அம்மையாரின் பெண் வீட்டுப் பிரமுகராய் பாவித்து மாலை மரியாதை செய்து கௌரவிப்பதும் திருமண வைபவம் முடிந்தவுடன் மேள தாளத்தோடு அழைத்துச் சென்று அவரது வீட்டில் விடுவதும் வழக்கம்! (கோயிலிருந்து 3 நிமிட நடைத் தொலைவு) 

அன்று மாலை, கணவருடன் வீற்றிருக்கும் அம்மையாரின் பூப்பல்லக்கு, கோயிலின் இடப்பக்கம் போய் பிரதட்சணமாய் ஊரை வலம் வருமுன், வலஞ்சென்று மலையப்பெருமாள் பிள்ளை இல்லத்தின் வாயிலில்  நிற்கும்; அங்கே தீபாராதனை முடிந்த பின்னர் திரும்பிப் போகும். 

1935 இல் மலையப்பெருமாள் பிள்ளை இறந்ததும் அதே மரியாதை அவரது மகன் சோமு பிள்ளை (இயற்பெயர் குருசாமி பிள்ளை) காலத்திலும் தொடர்ந்தது. இவர் தமது சொந்த செலவில் விழாவின் இறுதிநாள் விடையாற்றி உற்சவத்தை நடத்துவது வழக்கம். 
- சொ. ஞானசம்பந்தன் 
( மலையப்பெருமாளின் தம்பி பேரன், வயது 91)

1926 ஆம் ஆண்டு காரைக்கால் அம்மையார் கோயிலும் அதன் அருகே தெப்பக்குளமும் மலையப் பெருமாள் கட்டினார். அதற்கு கோயிலிலுள்ள கல்வெட்டுகள் சாட்சி. 

அவர்,  ஒரு மனிதன் வாழ்வுக்கு தேவையானவற்றை மக்களுக்காகச் செய்துள்ளார். முக்கியமாக,  மகப்பேறு மருத்துவமனை, கோயில்,  சத்திரம்,  இடுகாடு போன்றவற்றை கட்டிக்கொடுத்தது மட்டுமல்லாது அதன் பராமரிப்புச் செலவிற்கு வங்கியில் பணமும் போட்டுள்ளார்.  அவரது சேவைக்கு  அப்போதிருந்த பிரெஞ்சு அரசாங்கம் " செவாலியே விருது' வழங்கியது. 

என்னிடம் இதற்கான ஆவணங்கள் உள்ளன.  1929 இல் முதல் கும்பாபிஷேகம் நடந்த பத்திரிகையும் உள்ளது. இன்றும்   மலையப்பெருமாள்பிள்ளை மகன் குருசாமி பிள்ளையின்  மகன்களால்  காரைக்கால் அம்மையார் திருக்கல்யாணம் நடைபெற்று வருகின்றது.
- புதுவை. ந. கீதாராணி 
( மலையப்பெருமாள் பிள்ளையின் 
கடைசி பேரன் நமசிவாயத்தின் மனைவி)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com