கள்வனுக்கும் கருணை காட்டிய இடங்கழி நாயனார் திருக்கோயில்!

சோழவளநாட்டின் குறு நாடான கோனாட்டில் கொடும்பாளூர் என்ற வரலாற்று சிறப்பு மிக்க ஊரைத் தலைநகராகக் கொண்டு நல்லாட்சி செய்து வந்த சிவனடியார் இடங்கழியார்.
கள்வனுக்கும் கருணை காட்டிய இடங்கழி நாயனார் திருக்கோயில்!
Published on
Updated on
2 min read

மடல் சூழ்ந்த தார் நம்பி இடங்கழிக்கும் - தஞ்சை
மன்னவனாம் செருத்துணை தன் அடியார்க்கும் அடியேன்
- திருத்தொண்டர் தொகை

சோழவளநாட்டின் குறு நாடான கோனாட்டில் கொடும்பாளூர் என்ற வரலாற்று சிறப்பு மிக்க ஊரைத் தலைநகராகக் கொண்டு நல்லாட்சி செய்து வந்த சிவனடியார் இடங்கழியார். இவர் காலத்தில் நாடெங்கும் சைவம் தழைத்தோங்கியது. இவரே நூறு சிவாலயங்களை எழுப்பி சிவ வழிபாட்டினை போற்றி வந்தார் என வரலாறு கூறுகிறது.

சிவனடியார்களுக்காக நெல் திருடியவரை தண்டிக்காமல் நெற் களஞ்சியத்தையே திறந்து வைத்த மன்னர் குலத்தைச் சார்ந்தவர் இடங்கழி நாயனார். இவர் நாட்டில் வயதான சிவனடியார் ஒருவர் வாழ்ந்து வந்தார். இவர் நாள்தோறும் சிவனடியாருக்கு மகேசுவர பூஜை செய்விப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஒரு நிலையில், பொருள் இன்மையால் இத்தொண்டை தொடர முடியாத நிலை ஏற்பட்டது.

வேறு வழியில்லாத சூழலில் இடங்கழியாரின் அரண்மனைக்குள் புகுந்து, நெல் மூட்டைகளைத் திருடினார். காவலர்களிடம் அகப்பட்டு, மன்னர் முன்பு விசாரணைக்கு நிறுத்தப்பட்டார். நெல்லைத் திருடிய காரணத்தை அறிந்த மன்னர் இடங்கழியாருக்கு, அவரின் மீது இரக்கம் ஏற்பட்டது. அவரை விடுதலை செய்தார். நெல் பண்டாரமும், நிதிப் பண்டாரமும், அளித்தார். அதோடு, தன் நெற்களஞ்சியத்தை சிவனடியார்களுக்கு திறந்துவிட்டு, கொள்ளையடித்துச் செல்ல முரசு கொட்டி நாட்டு மக்களுக்கு அறிவித்தார். சிவனடியார்கள் நெல் கொண்டு செல்வதைக் கண்டு மகிழ்ந்தார்.

இவரின் விநோதமான செயலால் மனம் மகிழ்ந்த இறைவன் இவரை பல்லாண்டு காலம் நல்லாட்சி செய்ய வைத்து தன் திருவடிகளில் சேர்த்துக் கொண்டார்.

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் வட்டத்தில் கொடும்பாளூர் திருத்தலம் அமைந்துள்ளது. இன்றைய கொடும்பாளூர் பழைமையான வரலாற்றுச் சிறப்புகள் கொண்ட ஊராகும். ராஜராஜ சோழனின் தாயார் பிறந்த ஊர். சிவன், விஷ்ணு, பிரம்மா என மூவரைக் கொண்ட மூவர் கோயில், பஞ்சமூர்த்திகள் கொண்ட ஐவர் கோயில், முதுகுன்றீசர் ஆலயம், தஞ்சை பெரிய கோயில், நந்தியின் வடிவில் தனி நந்தி விளங்கும் தலம், சிதம்பரம் கருவறை கூரைக்குத் தங்கத்தை உபயமாக வழங்கிய தலம், கோனாட்டின் தலைநகரம் என பல்வேறு சிறப்புகள் கொண்ட தலம் கொடும்பாளூர்.

எட்டு ஆண்டுகளுக்கு முன், விருத்தாசலம் அறுபத்துமூவர் திருப்பணி அறக்கட்டளை மற்றும் கொடும்பாளூர் இடங்கழி நாயனார் அறக்கட்டளை இணைந்து, இந்து சமய அறநிலையத்துறை நிதி உதவியோடு இடைகழி நாயனார் திருக்கோயிலை எழுப்பியது. இந்த ஆலயத்தை தற்போது புனரமைப்பு செய்து, சுற்றுச்சுவர் எழுப்பி குருபூஜை நடைபெறவுள்ளது. இவரின் குருபூஜை வரும் நவம்பர் மாதம் 5 ஆம் தேதி, (ஐப்பசி மாதம்- கார்த்திகை நட்சத்திரம்) காலை 9.00 மணி அளவில் நடைபெறுகின்றது.

சென்னை-மதுரை வழித்தடத்தில் விராலிமலைக்குத் தெற்கே 6 கி.மீ. தொலைவில் கொடும்பாளூர் அமைந்துள்ளது. கொடும்பாளூர்-சந்திரம் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி வடக்கே ஒரு கி.மீ. தொலைவில் இத்தலம் உள்ளது.
தொடர்புக்கு : அறுபத்துமூவர் திருப்பணி அறக்கட்டளை - 98424 88031 / 94441 68508.
- பனையபுரம் அதியமான்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com