ஒன்றான இறைவனிடம் ஒன்றிப்பது ஒப்பற்ற அற்புத நற்பேறு. நன்றான நற்செயல்களின் நற்பயனே ஒன்றான இறைவனிடம் ஒன்றும் பொற்புடைமை. அத்தகு அருட்பேற்றை எய்தும் ஏற்ற செயல்களைப் போற்றும் குர்ஆன் சாற்றுவதையும் அவ்வழியில் நம்மை ஆற்றுப்படுத்துவதையும் ஆய்வோம்.
பற்றற்றான் பற்றினைப் பற்றி பிடிப்பதற்கு பற்றுவிடும் முதல்படி உளத்தூய்மை. அதுவே ஒன்றான இறைவனிடம் ஒன்ற வைக்கும். தூய்மையான உள்ளத்தில் தீய எண்ணங்கள் எழாது, அலைபாயும் அகத்தின் விழைவு விபரீதமாகிவிடும். விழுந்து வீழ்ந்து தாழ்ந்து ஓய்ந்து மாய்ந்திடும் நிலையே ஏற்படும். இக வாழ்வில் அகபுற தூய்மை உடையோர் இறைவனிடம் ஒன்றுவர் என்று உரைக்கிறது 87- 14 ஆவது வசனம்.
நீர் கீழ்ப்படியும் என்று ஏவியதும் அகிலத்தைக் கரிக்கும் அல்லாஹ்விடம் இறைத்தூதர் கீழ்ப்படிந்ததாக இயம்பும் 2-131 ஆவது வசனப்படி இறைவனுக்குக் கீழ்ப்படிந்து இறைவன் இட்ட கட்டளையை விட்டு விடாது நிறைவேற்ற வேண்டும். நீங்கள் என்னை நினைவு கூருங்கள். நான் உங்களை நினைப்பேன். எனக்கு நன்றி விசுவாசமாய் இருங்கள் என்ற 2-152 ஆவது வசனப்படி இறை கட்டளைகளை நிறைவேற்றுவது இறைவனை நினைவு கூர்வதாகும். அகிலத்தில் நாம் துய்ப்பதெல்லாம் தூய அல்லாஹ்வின் அருட்கொடை என்பதை உணர்ந்து அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தும் பொழுது அல்லாஹ் நன்றி உடையவனைப் பற்றி வானவர்களிடம் நவில்வதாக நந்நபி (ஸல்) அவர்கள் நவின்றதை அறிவிக்கிறார் அபுஹுரைரா (ரலி) நூல்- புகாரி, முஸ்லிம்.
அடியார்கள் மீது இரக்கம் காட்டும் இறைவனின் பொருத்தத்தை நாடி தேடி தம்மையே விற்றவர்கள் மனிதர்களில் உண்டு என்ற 2-207 ஆவது வசனம் அல்லாஹ்விற்காக ஏற்ற ஏக இறை கொள்கையை நிலைநிறுக்குவதற்காக உடல், பொருள், உயிர் அனைத்தையும் துறந்த ஸýஹைப் இப்னு ஸினான் ரூமி (ரலி) அம்மார் பின் யாஸிர் (ரலி) பிலால் (ரலி) கப்பாப் இப்னு அரத்து (ரலி) முதலியவர்களைக் குறிப்பிடுகிறது. இவ்வசனம் இறங்கியதும் இறைத்தூதர் இனியநபி (ஸல்) அவர்கள் இவர்களின் வியாபாரம் லாபம் ஈட்டிவிட்டது என்று பாராட்டினார்கள். இவ்வுலகின் ஆசாபாசங்களிலிருந்து அகன்று அனைத்தையும் அல்லாஹ்விற்கு அர்ப்பணித்தல் ஒன்றான இறைவனிடம் ஒன்றிடும் நித்திய லாபத்தை நிச்சயம் தரும். அல்லாஹ்வை வழிபட்டு தொழுகை நோன்பு ஜகாத் ஹஜ் கடமைகளைக் காலத்தில் கவனமாக நிறைவேற்றி நல்லதை ஏவி தீயதை விலக்கிடும் நற்செயல்களில் நலிவின்றி ஈடுபடுவதே இறைவனிடம் இணைக்கும்.
அல்லாஹ்வின் படைப்புகளின் மீதுள்ள பற்றைத் துறத்தல் என்று பகரும் 9-24 ஆவது வசனத்தை விளக்கிய விழுமிய நபி (ஸல்) அவர்கள் உங்களில் ஒருவருக்கு அவருடைய பெற்றோர் மக்கள் மனிதர்கள் ஆகியோரை விட அனைத்து பொருள்களை விட அல்லாஹ் உவப்புக்கு உரியவனாக ஆகும்வரை உண்மை விசுவாசி ஆக முடியாது. அறிவிப்பவர்- அனஸ் (ரலி) நூல்- புகாரி, முஸ்லிம்.
வசதி வாய்ப்புகள் வந்தபொழுதும் வந்தவற்றை இழந்த பொழுதும் இறைவனுக்கே நன்றி நவில்வோர் இறைவனிடம் ஒன்றுவர் என்று தெளிவு படுத்துகிறது 11-9 ஆவது வசனம். மக்காவில் உள்ள சொத்து சொந்தம் அனைத்தையும் துறந்து மதீனாவிற்கு வந்த மக்கத்து அகதிகளுக்கு அபயமளித்து ஆதரவு நல்கி போதிய பொருள்கள் தங்கும் இடங்கள் தந்த மதீனா வாசிகளைப்போல் அல்லாஹ்விற்காக தயாள உள்ளத்தோடு தக்கோருக்கு மிக்க தானம் தருவோர் இறைவனிடம் ஒன்றுவர் என்று நன்றாய் விளக்குகிறது 59-9 ஆவது வசனம்.
இகத்தில் புற கண்களால் பார்க்கமுடியாத அல்லாஹ்வை அகத்தில் அடைய தேடுவது தேவையற்ற இறைவனிடம் இணைக்கும் என்பதை எடுத்து இயம்புகிறது 6-103 ஆவது வசனம். இறைவனைப் புகழும் சொற்களால் துதி செய்வார்கள். அவர்கள் பெருமை கொள்ளமாட்டார்கள் என்ற 32-15 ஆவது வசனப்படி இறைவனைப் புகழ்ந்து துதித்து தற்பெருமை இல்லாது இருப்பவரே ஒன்றான இறைவனிடம் ஒன்றுவர். அல்லாஹ்வின் அவனின் தூதரின் கட்டளைகளை மாற்றாது செயல்
படுபவர் இறைவனின் இணக்கத்தைப் பெறுவர் என்று இயம்புகிறது 33-36 ஆவது வசனம். பாவங்களை விட்டு பரிசுத்தப்படுத்தி கொண்டவரும் இறைவனின் இணக்கத்திற்கு உரியவர் என்று உரைக்கிறது 87-14 ஆவது வசனம்.
இப்படி தரங்களைப் படிக்கும் நாம் படிப்படியாக பாவங்களைவிட்டு விலகி ஆவலோடு ஏவலை எடுத்து நடந்து ஏக இறை கொள்கையில் நிலையாக நின்று ஒன்றான இறைவனிடம் ஒன்றுவோம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.