விவேகமான வாதம் விவாதம்

வீண் விவாதம் புரிவதை புனித குர்ஆனும் தடுக்கிறது. பூமான் நபி (ஸல்) அவர்களும் தடுத்தார்கள். அவசியம் ஏற்படும்பொழுது நியாயத்தை நிலைநிறுத்த ஆதாரங்களுடன் விவாதித்து முடிவு எடுப்பதை முஹம்மது
Updated on
3 min read

வீண் விவாதம் புரிவதை புனித குர்ஆனும் தடுக்கிறது. பூமான் நபி (ஸல்) அவர்களும் தடுத்தார்கள். அவசியம் ஏற்படும்பொழுது நியாயத்தை நிலைநிறுத்த ஆதாரங்களுடன் விவாதித்து முடிவு எடுப்பதை முஹம்மது நபி (ஸல்) அவர்கள் ஆதரித்தார்கள். 
இரு பெண்கள் அவர்களின் இரு ஆண் குழந்தைகளோடு இருந்தனர். ஓர் ஓநாய் ஒரு குழந்தையைத் தூக்கிச் சென்று கொன்று தின்றது. இரு பெண்களும் உயிருள்ள குழந்தை அவர்களுடையது என்று  வாதிட்டனர். இவ்வழக்கு சுலைமான் நபியிடம் வந்தது. சுலைமான் நபி ஒரு கத்தியைக் கொண்டு வர ஆணையிட்டார்கள். கத்தியால் அக்குழந்தையை இரண்டாக வெட்டி ஆளுக்குப்பாதி தருவதாக  கூறினார்கள். பெரிய பெண் அமைதியாக நின்றாள். சிறிய பெண் பதறி துடித்து அவ்வாறு செய்ய வேண்டாம் என்று முறையிட்டாள். பெரிய பெண்ணே அக்குழந்தையை வளர்க்க சம்மதித்தாள். சுலைமான் நபி  குழந்தையை சிறிய பெண்ணிடம் ஒப்படைத்தார்கள்.
தபூக் போருக்குப் புறப்பட்ட பொழுது  பூமான் நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் மாநபி (ஸல்) அவர்களின் பிரதிநிதியாக அலி (ரலி) அவர்களை நியமித்தார்கள். போரில் போரிட துடித்த வீரர் அலி (ரலி) அவர்கள் "" நாயகனே! என்னைப் பெண்களுக்கும் சிறுவர்களுக்குமா பிரதிநிதியாக நியமிக்கிறீர்கள்?'' என்று கேட்டார்கள். அண்ணல் நபி (ஸல்) அவர்கள் ""மூசா நபிக்குப் பதில் ஹாரூன் நபி இருந்த இடத்தில் நீங்கள் இருப்பதை விரும்பவில்லையா?'' என்று பதிலிறுத்த பாசநபி (ஸல்) அவர்களே இறுதி நபி அவர்களுக்குப்பின் நபித்துவம் யாருக்கும் இல்லை என்பதையும் எடுத்துரைத்தார்கள். மூசா நபி இறைவன் கட்டளைப்படி தூர்சினா மலையில் நோன்பிருந்து இறையருளைப் பெற சென்ற பொழுது அவர்களின் பிரதிநிதியாக அவர்களின் சகோதரர் ஹாரூன் நபியை நியமித்தது வரலாறு. இவ்வரலாற்றை வள்ளல் நபி (ஸல்) அவர்கள் விளம்பியதைக் கேட்டதும் வீரர் அலி (ரலி) திருப்தியுற்றார்கள்.
உமர் (ரலி) ஏமன் நாட்டிலிருந்து உதவிக்கு வந்த நேசப் படையினரிடம் விசாரித்து உவை ஸýப்னு ஆமீர் (ரஹ்) என்ற பெரியாரைச் சந்தித்தார்கள். அண்ணல் நபி அவர்கள் அறிவித்த அடையாளங்கள் அவரிடம் இருப்பதை உறுதி செய்தார்கள். அவர் எங்கு செல்கிறார் என்று கேட்டார்கள். அவர் கூபாவுக்குச் செல்வதாக பதில் கூறினார். கூபா மாவட்ட அதிகாரிக்கு மடல் எழுதி அவருக்கு ஆவன புரியுமாறு ஏற்பாடு செய்ய அப்பெரியாரிடம் அனுமதி கேட்டார்கள் உமர் (ரலி). அவரோ பிரபல்யம் இல்லாது பிரபஞ்சம் ஆளும் அல்லாஹ்வைத் தொழுது வணங்கி வாழ விரும்புவதாக விடையிறுத்தார். அடுத்த ஆண்டு கூபாவிலிருந்து ஹஜ்ஜுக்கு வந்த கூபாவாசி ஒருவரிடம் உமர் (ரலி) அப் பெரியாரைப் பற்றி விசாரித்தார்கள். அப்பெரியார் உவை ஸýப்னு ஆமிர் (ரஹ்) ஏழ்மையில் எளிய வாழ்வு வாழ்வதாக விடை கூறினார்.
செய்யது இப்னு சாபித் (ரலி) கற்றறிந்த அறிஞர். அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி) அவ்வறிஞரின் ஒட்டகத்தின் கயிற்றைப் பிடித்து கொண்டு நின்றார். ஒட்டகத்தின் கயிற்றைப் பிடித்து நின்ற இளைஞர் அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் கையைப் பற்றி பிடித்து முத்தமிட்டார் அறிஞர் செய்யது இப்னு சாபித் (ரலி). இளைஞர் அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் திடுக்கிட்டு வயதிலும் அறிவிலும் மூத்தவரான செய்யது இப்னு சாபித் (ரலி) சிறியவரான அவரின் கையை முத்தமிட்டது ஏன் என்று கேட்டார்கள். முஹம்மது நபி (ஸல்) அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களைச் சிறப்பிக்க சொல்லி இருக்கிறார்கள். அதனால் சிறப்பிற்குரிய உங்களைச் சிறப்பு செய்யவே உங்கள் கைகளை முத்தம் இட்டேன். நீங்கள் என் ஒட்டகத்தின் கயிற்றைப் பிடித்து வருவது உரிய செயல் அல்ல என்று விடை பகர்ந்தார்கள்.
அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கற்று, கற்றதைப் பிறருக்குக் கற்பிப்பவரை அல்லாஹ்வும் வானவர்களும் வானில்  உள்ளவையும் புற்றுக்குள் இருக்கும் எறும்பு உள்பட பூமியில் உள்ளவைகளும் கடலில் வாழும் மீன்களும் விரும்புவதால் கற்றறிந்த அறிஞர்களை மதித்து ஆங்காங்கே அவர்களுக்கு உதவிட எங்களுக்கு ஏந்தல் நபி (ஸல்) அவர்கள் எடுத்துரைத்தபடி அறிஞரான நீங்கள் அமர்ந்து செல்லும் ஒட்டகத்தின் கயிற்றைப் பிடித்து ஓட்டி வர நிற்கிறேன் என்றார்.
ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ஸ்பெயின் நாட்டை  அல்ஹகம் என்ற அரசர் ஆண்டார். இரக்கமும் நீதியும் மிக்க அரசர். ஒருசமயம், அரண்மனைக்கு அருகில் இருந்த ஒரு குடியானவனின் நிலத்தை அரண்மனையுடன் இணைத்துக் கொண்டார். குடியானவன் நீதிபதியிடம் முறையிட்டான். நீதிபதி அரண்மனைக்கு வந்தார்.  தொலைவில் அரசர் வருவதைக் கண்டார் நீதிபதி. நீதிபதி குதிரையிலிருந்து இறங்கி ஒரு பெரிய பையில் மண்ணை நிரப்பி குதிரையின் மீது தூக்கி வைக்க முயன்றார்; முடியவில்லை. அருகில் வந்த அரசரிடம் உதவி கோரினார் நீதிபதி. அரசர் அலட்சியமாக மண் பையைத் தூக்க முயன்று தூக்க முடியாமல் திணறினார்.
அப்பொழுது நீதிபதி அரசரிடம் அளவற்று பொருளாசை கொண்டு பிறர் பொருளைச் சேர்த்து  துய்த்தால் மறுமையில் வேதனை கடுமையாக இருக்கும் என்ற எழில்மறை குர்ஆனின் 89-19, 20, 25 ஆவது வசனங்களையும் பிறரின் ஒரு சாண் அளவு நிலத்தை அபகரிப்பவன் கழுத்தில் அல்லாஹ் ஏழடுக்கு பூமியை வளையமிடுவான் என்ற  அன்னை ஆயிஷா (ரலி) அறிவித்த நபி மொழியையும் அநியாயமாக அடுத்தவனின் ஒரு சாண் நிலத்தை எடுத்தவன் மறுமையில் ஏழு பூமிகளுக்கு அடியில் அழுத்தப்படுவான் என்று இப்னு உமர் (ரலி) உரைத்த உத்தம நபி (ஸல்) அவர்களின் சத்திய எச்சரிக்கையும் புகாரி நூலில் பதிவாகியுள்ளதை ஞாபகப்படுத்தி குடியானவன் நிலத்திலுள்ள ஒரு பை மண்ணை உங்களால் தூக்க முடியவில்லை. மறுமையில் நியாய தீர்ப்பு நாளில் குடியானவனிடம் அபகரித்த முழு நிலத்தையும் தோளில் எப்படி தூக்கிச் சுமப்பீர்கள் என்ற விவேகமான விவாதத்தின் உண்மையை உணர்ந்து  குடியானவனிடம் நிலத்தைத் திருப்பி கொடுத்தார் அரசர்.
பெண் ஞானி ராபியத்துல் அதவியா அவர்களைச் சந்தித்து அறிவுரை நல்க நாடிய மேதைகளை விளக்கைப் போலவும் ஊசியைப் போலவும் ஆகிவிட அறிவுறுத்தினார்கள். மேதைகள் விளக்கமாய் கூற வேண்டினர். விளக்குத் தன்னை எரித்துக் கொண்டு மக்களுக்கு ஒளி தருகிறது. நீங்கள் இருளில் இருக்கும் மக்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வரும் கல்வியைக் கற்பியுங்கள். கற்ற கல்வியால் பெற்ற அறிவு அவர்களுக்கும் மற்றவர்களுக்கும் பயன்பட உங்களைத் தியாகம் செய்யுங்கள்.
துணிகளால் ஆடை அணியாத நிர்வாண ஊசி மனிதர்களின் ஆடைகளைத் தைத்து மனிதர்களின் மானத்தை மறைக்க உதவுகிறது. மனிதர்களின் குறைகளை மறைத்து அவர்கள் கண்ணியமாக வாழ வழிகாட்டுங்கள். ஊசி போல் நீங்கள் தேவையற்றவர்களாக ஆவலை அடக்கி மக்கள் தேவையை பெற ஏவல் செய்யுங்கள்.
வீண் விவாதங்கள் விவகாரத்தை விகாரமாக்கி சிகரம் தொடும் சீர்கேட்டை உண்டாக்கி ஊரையும் நாட்டையும் கெடுக்கும். முக்கிய பிரச்னைகளில் மாற்று கருத்துடையோரும் ஏற்கும் வண்ணம்  திறன் அறிந்து கேட்டார் பிணிக்கும் தகையவாய் கேளாரும் வேட்ப விவேகமாய்  விவாதித்து எடுக்கும் முடிவால் மக்களும் பயன் பெறுவர்; நாடும் உயரும்.

 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com