

திருநல்லூர் அருள்மிகு பஞ்சவர்ணேஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர் மாவட்டம், வலங்கைமான் வட்டத்தில் உள்ளது. சோழநாட்டுத் தென்கரைத் தலம். வலங்கைமானிலிருந்து 2. கி.மீ தொலைவில் உள்ளது. மாடக்கோயிலான இத்தலம் "சுந்தரகிரி' என்று அழைக்கப்படுகிறது.
திருநாவுக்கரச நாயனார் சில காலம் சமண சமயத்தைச் சார்ந்திருந்து, சிவபெருமான் அருளால் சைவ சமயத்திற்கு மீள வந்தார். திருப்பெண்ணாடகத்தில் இடபக்குறி, சூலக்குறி பொறிக்கப்பட்டார். திருநல்லூர் தலத்தில் அவருக்குத் திருவடி சூட்டப்பட்டதன் நினைவாக, பக்தர்களுக்குச் சடாரி போன்று திருவடி சூட்டப்படுகிறது. "நனைந்தனைய திருவடி என் தலைமேல் வைத்தார், நல்லூர் எம்பெருமானார் நல்லவாறே', என்று அப்பர் தேவாரம் கூறும்.
அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான அமர்நீதி நாயனார் வழிபட்ட தலம். அவர் தராசில் ஏறி சிவபதம் பெற்ற நிகழ்வு நடைபெற்றது இத்தலத்தில்தான். துலா மண்டபமும் குளக்கரையில் அவர் பெயரில் மடமும் உள்ளது.
முசுகுந்த மகாராஜா, இந்திரனிடமிருந்து தியாகராஜப் பெருமானைப் பெற்றுத் திருவாரூர் செல்லும் போது, இத்தலத்தில் மூன்று நாள்கள் இருந்ததாக வரலாறு. அருணகிரிநாதரும் பாடியுள்ளார்.
மூலவர் திருப்பெயர் பஞ்சவர்ணேஸ்வரர், கல்யாண சுந்தரேஸ்வரர்.சுயம்பு மூர்த்தி, ஒரு நாளில் ஐந்துமுறை நிறம் மாறுவதால் இறைவனுக்குப் "பஞ்சவர்ணேஸ்வரர்' என்ற பெயர் ஏற்பட்டது. பிருங்கி முனிவர் வண்டு வடிவமாய் இறைவனை வழிபட்டதால் சிவலிங்கத்தில் துளைகள் உள்ளன. மூலவருக்குப் பின்புறம், அகத்தியருக்குத் திருமணக்கோலங் காட்டிய, சுதை வடிவில் உள்ள, கல்யாணசுந்தரர் உருவத்தையும் தரிசிக்கலாம். திருமால், பிரமன், அகத்தியர் மூவரும் அருகில் உள்ளனர். அகத்திய லிங்கமும் அருகிலுள்ளது.
இறைவி திருப்பெயர் பர்வத சுந்தரி, கல்யாண சுந்தரி; தெற்கு நோக்கிய சந்நிதி; நின்ற திருக்கோலம். காசி விநாயகர், முருகன், நடராஜர், அஷ்டபுஜ காளி, சண்டேஸ்வரர் சந்நிதிகளும் அமர்நீதி நாயனார், குந்தி தேவி முதலியோரின் உருவங்களும் உள்ளன. தீர்த்தம் சப்தசாகர தீர்த்தம்; கோயில் எதிரில் உள்ளது.
மாசி மகம் கொண்டாடும் தலங்களில் சில: காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் மாசி மாதம் "பிரம்மோத்ஸவம்' நடைபெறும். மாசி மகம் அன்று நடைபெறும் "விசுவரூப தரிசனம்' மிகவும் சிறப்பான ஒன்றாகும். வல்லாள மகாராஜாவுக்குத் திதி கொடுக்க மாசி மகத்தன்று, திருவண்ணாமலை அண்ணாமலையார் பள்ளிகொண்ட பட்டு என்ற இடத்திற்கு எழுந்தருளுகிறார்.
திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி கோயிலில் மாசி மகத்தன்று "மகிழடி சேவை' உத்ஸவம் சிறப்பாக நடைபெறும்.
சிவபெருமானுக்கு முருகன் பிரணவத்தை உபதேசித்ததும் ஒரு மாசி மகத்தன்று தான். திருச்செந்தூரில் செந்திலாண்டவருக்கு மாசித் திருவிழா சிறப்பாக நடை
பெறும். அவ்வமயம், உருகு சட்ட சேவை, பச்சை, சிவப்பு, வெள்ளை சார்த்துதல் முதலிய விழாக்கள் நடைபெறும்.
திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் மாசி மகத்தன்று, திருநாவுக்கரசருக்குத் தெப்பத் திருவிழா நடைபெறும். இதற்கு "அப்பர் தெப்பம்' என்று பெயர். திருவேட்டக்குடி ஸ்ரீசுந்தரேஸ்வரருக்கு மீனவ மக்களால் கடலாடு விழா நடத்தப்படுகிறது. அதேபோன்று, திருக்கண்ணபுரம் ஸ்ரீசெüரிராஜப் பெருமாளுக்குத் திருமலைராயன்பட்டினம் மீனவ மக்கள் விழா நடத்துகின்றனர். திருவாரூர் மாவட்டம், ஸ்ரீவாஞ்சியம் வாஞ்சிநாத சுவாமி கோயிலில் மாசி மகப் பெருவிழாவில் எமனுக்கு காட்சி தரும் விழா நடைபெறுகிறது.
மாசி மகத்தன்று தீர்த்தவாரி நடைபெறும் தலங்கள் சில: வேலூர் மாவட்டம், திருவலம், ஸ்ரீவில்வநாதீஸ்வரருக்கு நிவா நதியில் தீர்த்தவாரி நடைபெறுகிறது. ஸ்ரீமுஷ்ணத்திலிருந்து 60. கி.மீ. தொலைவிலுள்ள கிள்ளை கடற்கரைக்கு தீர்த்தவாரிக்கு ஸ்ரீபூவராக சுவாமி எழுந்தருளுகிறார். வழியில் முகம்மதியர்கள் வரவேற்பு அளிக்கின்றனர். சென்னையில் உள்ள கோயில்களிலிருந்து உத்ஸவ மூர்த்திகள் தீர்த்தவாரிக்காக, மெரினா கடற்கரைக்கு எழுந்தருளுகின்றனர். அதேபோன்று, மகாபலிபுரம், கடலூர், புதுச்சேரி மற்றுமுள்ள கடற்கரைக்கு அருகிலுள்ள கோயில்களிலிருந்தும் தீர்த்தவாரிக்கு செல்வர்.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயிலில் மாசி மகத்தன்று லட்சக்கணக்கில் பெண்கள் பொங்கல் வைத்து வழிபடுகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.