பிள்ளை வளர்ப்பில் பெற்றோர்

உலகின் உன்னத வாழ்விற்கு அடிப்படை குழந்தைகள். இறைவன் தரும் சிறந்த செல்வம் குழந்தை.
Updated on
2 min read

உலகின் உன்னத வாழ்விற்கு அடிப்படை குழந்தைகள். இறைவன் தரும் சிறந்த செல்வம் குழந்தை. குழந்தை இறைவனின் கண்ணியமான கௌரவமான அன்பளிப்பு, இன்றைய குழந்தைகள் நாளைய நாட்டைத் திட்டமிட்டு கட்டமைத்து கட்டிக்காக்கும் காவலர்கள். அத்தகு தகுதியுடைவர்களாக குழந்தைகளை வளர்ப்பது பெற்றோரின் கடமை. ஒரு நாட்டின் எதிர்கால தொலை நோக்கு இலக்கை அடையும் திட்டமும் கிட்டும் வெற்றியும் இன்றைய இளைய தலை
முறையிடமே உள்ளது. முன்னோர்களின் மூத்தவர்களின் அனுபவ பாடங்களைப் பிள்ளைகளுக்குக் கற்பித்து அதனை உறுதியாக பற்றி பிடித்து இறுதியாக வெற்றி அடைய தடையறு வழியைக் காட்டுவது பெற்றோரின்கடமை. அப்பெரு முயற்சிகளில் பிள்ளைகள் பிறழாது செல்வதையும் கண்காணிக்க வேண்டும். உரிமைகளை வழங்கி உரிய முறையில் சரியான பாதையில் செல்ல பணிக்க வேண்டும். பெற்றோர் முன்னிலைப் படுத்துவதே பிள்ளைகளின் முன்னேற்ற படிகள். குர்ஆன் கூறும் நெறியில் இறைதூதர் வழியில் நிறைபணி ஆற்றும் நிரம்பிய அறிவைத் திறம்பட கற்க துணைபுரிய வேண்டும். 
பெற்றோர் பிள்ளைகளுக்காக இறைவனை வேண்டும் துஆ திரையின்றி இறைவனிடம் செல்வதாக செம்மல் நபி (ஸல்) அவர்கள் செப்பினார்கள். பிள்ளைகளைச் செயல்பட வைப்பதோடு அச்செயல் செம்மையுற அச்செயலால் நன்மை பெற நாளும் இறைவனை இறைஞ்ச வேண்டும். 
பிள்ளைகளிடையே பேதம் காட்ட கூடாது. எல்லா பிள்ளைகளையும் ஒரே மாதிரி சீராய் வளர்க்க வேண்டும். அதுவே சகோதர பாசத்தை வலுப்படுத்தும். குழந்தைகள் இடையே ஆண் பெண் வேறுபாடு காட்ட கூடாது. பிள்ளைகளை அதட்டாமல் உருட்டாமல் மிரட்டாமல் மென்மையாய் நன்மையை எடுத்துரைப்பது குழந்தைகளின் இதயத்தை மென்மை படுத்தும். மென்மையான இதயத்தில் அன்பு பீறிட்டு ஊறும்.
உமர் (ரலி) ஆட்சியில் அரசு பதவியில் இருந்த ஆமிர் (ரலி) கலீபாவைக் காண வந்தார்கள். அப்பொழுது வீட்டில் படுத்து இருந்த கலீபாவின் நெஞ்சில் அமர்ந்து பிஞ்சு குழந்தைகள் விளையாடி கொண்டிருந்தனர். இக்காட்சியைக் கண்ட ஆமிர் (ரலி) அவர்களின் முக மாற்றத்தை உணர்ந்த உமர் (ரலி) அவர்கள் ஆமிர் (ரலி) வீட்டில் இருக்கும் பொழுது அவரின் குழந்தைகள் அச்சத்தோடு அமைதியாக இருப்பார்கள் என்று பதில் அளித்தார். அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அருமை தோழர்களில் ஒருவரான ஆமிர் (ரலி) நபி வழியை நன்கு புரியாமல் அறியா குழந்தைகளிடம் அன்பு பாராட்டி பண்புடன் பழகாமல் பயமுறுத்தி வைப்பது நயமானது அல்ல என்று நேயமாய் பிள்ளைகளை வளர்க்க நினைவுறுத்தினார்கள். 
குழந்தைகளால் பெற்றோர் வாழ்வில் இனிமை ஏற்படுவது பெற்றோரின் உற்ற முறை வளர்ப்பின் மூலமே. பிள்ளைகளைப் பெற்றோர் சற்றும் பிணங்காது பேணி வளர்த்தால் பிள்ளைகளின் உளளங்களில் நல்ல சிந்தனைகள் ஊறும். ஊறும் சிந்தனைகள் ஊறு நேரா உயரிய வாழ்வை வழங்கும். அந்த நல்ல வாழ்வில் இலங்கும் பிள்ளைகளே இவ்வுலக வாழ்வின் அலங்காரங்கள் என்று அருமறை குர்ஆனின் 18-46 ஆவது வசனம் வர்ணிக்கிறது.
ஏழு வயது ஆனதும் தொழ பழக்க வேண்டும். இறை உணர்வையும் இறை அச்சத்தையும் குழந்தைகள் மனதில் பதிய வைக்க வேண்டும். இப்பதிவு பண்போடு ஒழுக்கம் பேணி வழுவாது வாழ அடிப்படை. பத்து வயதில் தொழுவதை உறுதிப் படுத்த வேண்டும் என்ற உத்தம நபி (ஸல்) அவர்களின் அறிவுரை அபூதாவூதில் உள்ளது. இவ்வாறு பயிற்சி தராத பெற்றோர் மறுமையில் குற்றவாளிகளாக விசாரிக்கப்படுவர். பிள்ளைகளிடம் அன்போடு பழகி உற்சாகம் ஊட்டி ஊக்கப்படுத்தி நற்பண்புகளைப் பயிற்றுவிக்க வேண்டும். 
பிள்ளைகளுக்குப் பிடிப்பதைப் படிக்க ஆவன செய்ய வேண்டும். அவர்களுக்குப் பிடிக்காத நமக்குப் பிடித்ததைப் படிக்க வற்புறுத்த கூடாது. விளைவு விபரீதமாகும். பள்ளியில் கல்லூரியில் பயின்றதை வீட்டில் திருப்பி படிக்க பயிற்சி செய்ய பழக்க வேண்டும். ஐயங்களை ஆசிரியரை அணுகி தெளிவு பெற துணை புரிய வேண்டும். அக்கம்பக்கம் உள்ள மாணவர்களோடு கலந்து பழகி உரையாடி கற்றதை கற்றதில் பெற்றதைப் பகிர்ந்து கொள்வது அறிவைப் பரவலாக்கி ஆற்றலைப் பெருக்கும். கலந்துரையாடலையும் பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும். அன்றாட வாழ்வில் அன்றைய நிகழ்வுகளில் நாட்டு நடப்பில் கற்றதைத் தொடர்பு படுத்தி பார்க்க பழக்க வேண்டும். இவ்வாறு வளர்க்கப் படும் இறைய தலைமுறை நாட்டின் அறிவுசார் மனித வளத்தைப் பெருக்கும். நேரத்தையும் காலத்தையும் வீணாக்காது பயன்படுத்த பயிற்றுவிக்க வேண்டும். உந்துதல் இன்றி உயரிய இலக்கை அடைய முடியாது என்பதை உணர்த்த வேண்டும். 
பிள்ளைகள் வளரும்பொழுது ஏற்படும் மாற்றங்களைக் கவனிக்க வேண்டும். அம்மாற்றங்கள் ஏற்றம் தருவதாக இருந்தால் அம்மாற்றத்தை ஊக்குவித்து உயர உதவ வேண்டும். அம்மாற்றம் தகாதது ஆயின் அதனைத் தவிர்த்திட தக்க முறையில் அறிவுறுத்தி நல்வழியில் திரும்பி நட்பு வட்டத்தைக் கண்காணிக்க வேண்டும். நண்பர்கள் நல்லவர்களாயின் அந்நட்பு தொடர துணை புரிய வேண்டும். தீய நண்பர்களாயின் நிதர்சன நடப்புகளை தீய நட்பின் தீமைகளை நேயமுடன் நயமாக எடுத்துரைத்து தீயவர்களை விட்டுவிலகி விவேகமாய் நடக்க நல்வழி காட்ட வேண்டும்.
பிள்ளைகளுக்குப் பெற்றோர் முன்
மாதிரியாக விளங்கி பிள்ளைகள் நல்ல முறையில் வளர்ந்து நல்லோராய் வாழ வழி காட்ட வேண்டும். வல்லோன் அல்லாஹ்வும் நல்லருள் புரிவான்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com