மும்மூர்த்திகள் அருள்புரியும் சுசீந்திரம் கோயில்!

பழையாற்றின் கரையில் ஓங்கியுயர்ந்த அடுக்கு கோபுரத்துடன்  தாணுமாலையன் ஆலயம் காட்சி தருகின்றது. தாணு-சிவன், மால்-விஷ்ணு, அயன்-பிரம்மா இம்மூவரும் ஒருவரோடொருவர் பின்னிப் பிணைந்துள்ள 
மும்மூர்த்திகள் அருள்புரியும் சுசீந்திரம் கோயில்!

பழையாற்றின் கரையில் ஓங்கியுயர்ந்த அடுக்கு கோபுரத்துடன் தாணுமாலையன் ஆலயம் காட்சி தருகின்றது. தாணு-சிவன், மால்-விஷ்ணு, அயன்-பிரம்மா இம்மூவரும் ஒருவரோடொருவர் பின்னிப் பிணைந்துள்ள ஒருவரே தாணுமாலையன் என்பது தெளிந்த கருத்து.
"அத்திரி " முனிவருக்கு, கற்பில் சிறந்த மனைவியான அனுசுயாவுக்கு, ஞானாரண்யத்தில் மும்மூர்த்திகளும் லிங்க வடிவில் தோற்றமளித்தனர்" என்று புராணம் கூறுகிறது. அத்திரி முனிவரின் மனைவி அனுசுயா தேவியின் கற்பை சோதிக்க எண்ணி முதியவர் வேடத்தில் ஆசிரமம் வந்த மும்மூர்த்திகளையும் சிறு பிள்ளைகளாக்கி அமுது ஊட்டியதாகவும், பின்பு முப்பெரும் தேவியர்கள் விருப்பப்படி அவர்களின் கணவன்களை திரும்பத் தந்ததாகவும் வரலாறு உள்ளது. இந்நிகழ்ச்சியை  நினைவூட்டவே மும்மூர்த்தியும் ஒரு மூர்த்தியாய் தாணுமாலயன் என்னும் பெயர் தாங்கி சுசீந்திரம் கோயில் கட்டப்பட்டது. 
இங்கு, மும்மூர்த்திகளையும் ஒரு சேர வணங்குவதற்கு இறைவன் வாய்ப்பளித்துள்ள இடம் சுசீந்திரம் கொன்றை மரத்தடி  சந்நிதியாகும். இப்பெருமை வேறு எந்த திருக்கோயிலுக்கும் இல்லாத  சிறப்பாகும். மேல்பாகம் விஷ்ணு நடுப்பாகம் சிவன், அடிப்பாகம் பிரம்மா எனக் கருதப்படுகிறது. இவ்வாலயத்தின் நந்தி வெள்ளை நிறத்தில் மிகப்பெரியதாக உள்ளது. இந்த நந்தியின் உயரம் 12 அடி, அகலம் 6 அடி, நீளம் 21 அடி ஆகும்.
இந்திரன் இங்கு வந்து புனிதமடைந்ததால் இவ்வூர் சுசீந்திரம் எனப் பெயர் பெற்றது. "சுசி" என்றால் புனிதம் (சுத்தம்) இந்திரன் சுத்தம் அடைந்த இடம் என்பதால் (சுசி + இந்திரன்) சுசீந்திரம் எனப் பெயர் வந்தது. இன்றும் தாணுமாலையனுக்கு அர்த்தசாம பூஜையை இந்திரன் நடத்துவதாக ஐதீகம். மேலும் இத்திருக்கோயிலில் மாலையில் பூஜை செய்தவரை அடுத்த நாள் காலை பூஜை செய்ய அனுமதிப்பதில்லை. உள்ளே எதுவும் மாறுதல்கள் கண்டால் அதை பிறரிடம் வெளியிடக்கூடாது என்ற ஐதீகப்படி அகம் கண்டதை புறம் கூறக்கூடாது என்ற நியதி கடைபிடிக்கப்படுகிறது.
இத்திருக்கோயிலின் திருக்கோபுரம் 7 அடுக்கு கொண்டது. தொலைவில் இருந்தே நம்மை வரவேற்கும் இக்கோபுரம் ஏராளமான சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்ததும் ராமாயணம், மகாபாரதக் கதைகளை பச்சிலை சாறுகளைக் கொண்டு கண்ணைக் கவரும் வண்ணம் ஓவியங்களாகத் தீட்டப்பட்டுள்ளதும் காண்பதற்கரியதாகும். இத்திருக்கோயிலில் வசந்தோற்சவத்தின் போது நீரால் சூழப்பட்ட இம்மேடையில் சுசீந்திரம் பெருமான் உமையுடன் கொலு வீற்றிருப்பார். 
மண்டபத்தில் மேல் 12 ராசிகளும், நவகிரகங்களும் அமைந்திருப்பது இத்திருக்கோயிலின் தனிச் சிறப்பு. வசந்த மண்டபத்தின் பின்புறம் நீலகண்ட விநாயகர் தனது மனைவியை மடியில் அமர்த்தியிருக்கும் காட்சி குறிப்பிடத்தக்கது. இவ்வாலயத்தில் மிகப்பெரிய ஆஞ்சநேயர் சிலை வழிபாட்டில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
ராமேசுவரத்திற்கு அடுத்தப்படியாக  தென்னிந்தியாவின்  மிகப் பெரிய பிரகாரமும்,  பிரகாரத்தின் இருமங்கும் உள்ள தூண்களில் விளக்கேந்திய பாவை சிலைகளும், யாளிகளும் செதுக்கப்பட்டுள்ளது கண் கொள்ளாக் காட்சியாகும். வடக்கு பிரகாரத்தில் நுணுக்கம் நிறைந்த வேலைப்பாடுகள் கூடிய இசைத் தூண்கள் 24 தூண்களும், தென்புறம் 32 தூண்களும் ஒரே கல்லில் செதுக்கப்பட்டுள்ளன. இவற்றைத் தட்டினால் சப்த ஸ்வரங்களைக் கேட்கலாம். கல்லிலே கலை வண்ணம் கண்டதோடு, இசை வண்ணத்தையும் நிகழ்ச்செய்வது இத்திருக்கோயிலின் அற்புதத்தையும், சிற்பக் கலையின் களஞ்சியம் என்பதையும் தெளிவுபடுத்துகிறது.
அடுத்து, குலசேகர மண்டபத்தில் உயிரோவியங்களோ என்று வியக்கத்தக்க வண்ணம் அமைந்துள்ள இரு சிற்பங்களின் கையில் உள்ள நகங்கள், சூரிய ஒளி படும்போது உயிருள்ள உடலின் நகக் கண்கள் போன்று தோற்றம் தரும். கால் புறம் முன் பாதத்தில் நரம்புகள் புடைத்து எழுந்துள்ள காட்சி உயிருள்ள உடலின் தோற்றத்தைத் தருகிறது.
 இத்திருக்கோயிலில் திருமால், சிவன் இருவருக்கும் கொடிமரங்கள் உண்டு. திருவிழாக்களும் சிறப்பாக நடைபெறுகின்றன. அடுத்துள்ள செண்பக ராமன் மண்டபத்தில் ராமாயண, மகாபாரதக் காட்சிகள் மற்றும் பெண் விநாயகர் விக்னேஷ்வரியையும் தரிசிக்கலாம். மேற்கு பக்கம் கருவறையில் லிங்க வடிவில் இருக்கும் மும்மூர்த்திகளையும் (தாணு, மால், அயன்)  தரிசிக்கலாம்.  தாணுமாலையன்சுசீந்திரம் திருக்கோயிலின் பெரும் பகுதி சேர, சோழ, பாண்டியர்களால் கட்டப்பட்டது. கொன்றையடி சந்நிதி மிகவும் புராதனமானது. இங்குள்ள கொன்றை மரம் சுமார் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்டதாகக் கூறப்படுகிறது. மண்டபங்கள் பலவும் நாயக்க மன்னர் காலத்தில் கட்டப்பட்டவை ஆகும். இத்திருக்கோயில் திராவிடக் கட்டிடக் கலைக்குப் பெயர் பெற்றதுமாகும்.
நாகர்கோவில்- கன்னியாகுமரி நெடுஞ்சாலையில் நாகர்கோவிலில் இருந்து கிழக்கே 5 கி.மீ. தொலைவில் சுசீந்திரம் தாணுமாலயன் கோயில் உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com