பெருமாளின் வாகனம் பெரிய திருவடி!

காசியபர் முனிவருக்குக் கத்ரு, வினதை என்று இரண்டு மனைவிகள் இருந்தனர். எதிலும் அவசரமும் பிடிவாதமும் காட்டுபவள் கத்ரு. பொறுமையாக இருந்தால் தீர்க்காயுள் உள்ள வாரிசுகள் கிடைக்கும்
பெருமாளின் வாகனம் பெரிய திருவடி!
Published on
Updated on
2 min read

காசியபர் முனிவருக்குக் கத்ரு, வினதை என்று இரண்டு மனைவிகள் இருந்தனர். எதிலும் அவசரமும் பிடிவாதமும் காட்டுபவள் கத்ரு. பொறுமையாக இருந்தால் தீர்க்காயுள் உள்ள வாரிசுகள் கிடைக்கும் என்று காசியபர் சொன்னதைக் கத்ரு ஏற்கவில்லை."தனக்கு உடனே நிறைய குழந்தைகள் வேண்டும். அவை, சில காலமே வாழ்ந்தாலும் பரவாயில்லை' என்று அவள் கூறியதால் அவளுக்கு ஆயிரம் பாம்புகள் பிறந்தன.
 வினதை தான் பொறுமையுடன் காத்திருப்பதாகக் கூறினாள். வினதைக்கு முதல் குழந்தையாக பிறந்த அருணன், உடலின் கீழ்ப்பகுதியில் சரியான வளர்ச்சியின்றி குறைப்பிரசவமாகப் பிறக்க நேரிட்டது. ஊனமாகப் பிறந்த அருணனை சூரியபகவான் தனது தேரோட்டியாக ஏற்றுக் கொண்டார். கிழக்குத் திசையில் தினமும் சூரியன் உதிக்கும் முன்பாக, அவருக்கு முன்னால் அமர்ந்து தேரை ஓட்டும் அருணனே முதலில் உதிப்பதாக ஐதீகம். எனவேதான் சூரியோதயத்தை அருணோதயம் என்றும் கூறுகின்றோம்.
 வினதை, கத்ருவிடம் ஒரு போட்டியில் தோற்றுப்போக, அவளுக்கும் அவள் பெற்ற பாம்புகளுக்கும் அடிமையாக வாழும் நிலை ஏற்படுகிறது. வினதையின் இரண்டாவது குழந்தையாக "வைநதேயன்' என்னும் கருடபகவான் பிறந்தார். பிறக்கும் போதே நல்ல அறிவாளியாகவும் பலசாலியாகவும் பிறந்த கருடபகவான் அடிமைப்பட்டிருந்த தம் அன்னையை விடுவிக்க விரும்பினார்.
 "தேவலோகத்திலிருக்கும் அமுத கலசத்தைக் கொண்டு வந்துகொடுத்தால் உன் அன்னையை விடுவிக்கிறேன்!' என்று கத்ரு நிபந்தனை விதிக்க, அதன்படி தேவலோகம் நோக்கிப் பறந்தார் கருடபகவான். நீண்ட சாகசப் பயணத்திற்குப் பிறகு இந்திரலோகத்தை அடைந்த கருடபகவான், பலத்த பாதுகாப்புடன் பாதுகாப்புப் பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்த அமுத கலசத்தை லாகவமாக எடுத்துக்கொண்டு வெளியேறினார். வழிமறித்த தேவேந்திரனிடம், கலசத்தை மட்டும் தன் அன்னையின் எதிரிகளுக்குக் காட்டிவிட்டு, அமிர்தத்தை ஒருதுளி கூட செலவழிக்காமல் பத்திரமாக திரும்பக் கொண்டுவந்து ஒப்படைப்பதாக வாக்களித்து விட்டுக் கிளம்பினார்.
 அமுதகலசத்தைக் கண்ட கத்ருவும் பாம்புகளும் வினதையை உடனடியாக அடிமைத்தளையிலிருந்து விடுவித்தனர். தேவ அமுதத்தை நீராடிவிட்டுத்தான் சாப்பிடவேண்டும் என்று கூறிய கருடன் தர்ப்பைபுல்லைப் பரப்பி அதன் மீது கலசத்தை வைத்தார். அவர்கள் குளிக்கச் சென்றதும் தம் அன்னையை அழைத்துக்கொண்டு, அமுத கலசத்தையும் பழையபடி தேவலோகத்தில் கொண்டு போய் வைத்துவிட்டார் கருடன். நீராடிவிட்டுத் திரும்பி வந்த பாம்புகள், கலசம் வைத்த தர்ப்பைப் புல்லில் அமுதம் ஒட்டியிருக்கலாம் என்று நம்பிக் கூர்மையான தர்ப்பைப் புல்லை நக்கிப் பார்த்ததால் அவற்றின் நாக்குகள் பிளவுண்டன. இதனால்தான், பாம்புகள் இரட்டைநாக்குடன் இருப்பதாகச் சொல்வர்.
 கருடனுடைய பலம், சமயோசித அறிவு, ஆற்றல், வேகம் இவற்றைக் கண்ட மஹாவிஷ்ணு அவரைத் தம்முடைய வாகனமாக மகிழ்வுடன் ஏற்றுக் கொண்டுவிட்டார்.
 "ஆதிமூலமே' என்று கஜேந்திரன் எனும் யானை அழைக்க, அதைக்காப்பதற்கு எம்பெருமான் கிளம்பும் முன்னே கருடபகவான் அவரை ஏந்திச் செல்லத் தயாராகிவிட்டார் என்பர்.
 இவ்விதமாக, பகவானுக்கு வைகுந்தலோகத்தில் கைங்கரியம் செய்யும் நித்தியர்களில் ஒருவராக கருட பகவான் இருக்கிறார். ஸ்ரீ ஆளவந்தார் என்ற ஆசாரியர் கருடபகவானை வேதஸ்வரூபமானவர் என்று போற்றுகின்றார்.
 பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவத்தில் ஏற்றப்படும் கொடியிலும் கருடபகவானின் உருவமே இடம் பெறுகின்றது. பெரிய திருவடி என்று போற்றப் படும் கருடபகவான் எப்போதும் பெருமாளின் ஆணையை எதிர்நோக்கிக் காத்திருப்பதால், திருக்கோயில்களில் மூலஸ்தானத்திற்கு நேராகவே சந்நிதி கொண்டுள்ளார். பெருமாள் கோயில் திருவிழாக்களில் கருட வாகனமே முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
 நாச்சியார் திருக்கோயில் திவ்வியதேசத்தில் உறையும் கருடபகவானுக்கு, பெருமாளுக்கும் தாயாருக்கும் நிகரான விசேஷ வழிபாடுகள் நடக்கின்றன. பட்சிராஜன், கருடபகவான், வைநதேயன், விஹகேஸ்வரன் என்று பல திருப்பெயர்கள் கொண்ட இவரது தரிசனமும் குரலும் நல்ல சகுனமாகக் கருதப்படுகின்றது. திருக்கோயில் கும்பாபிஷேகம் போன்ற புனித நிகழ்வுகள் நடைபெறும் இடத்திற்கு மேலே கருடப்பறவைகள் வட்டமிடும் அதிசயத்தை இன்றைக்கும் காண்கிறோம்.
 ஸ்ரீ வேதாந்த தேசிகர் என்னும் ஆசாரியர் மீது பாம்புப் பிடாரன் ஒருவன் கொடிய விஷப்பாம்புகளை ஏவியபோது, அவர் கருடமந்திரத்தைச் சொல்லவும் உடனடியாக கருடப்பறவை தோன்றி அப்பாம்புகளைத் தூக்கிச்சென்றது. பின்னர் அந்தப் பிடாரனின் வேண்டுகோளுக்கிணங்க மீண்டும் கருடனை வேண்ட, பாம்புகளைப் போட்டுவிட்டுச் சென்றது. நாகதோஷம் உள்ளவர்கள், ஸ்ரீ வேதாந்த தேசிகர் இயற்றிய கருட தண்டகம் என்ற சுலோகத்தைக் கூறி கருட பகவானை வழிபடுவது சிறந்த பரிகாரமாகும். கருட பகவானின் அவதார தினம் ஆடிமாதம் (21-07-2018) சுவாதி நட்சத்திரமாகும்.
 - எஸ். ஸ்ரீதுரை
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com