நல்லூரில் கேசவவிண்ணகரம்!

ராஜராஜ சோழனுக்கு பல சிறப்பு பெயர்கள் இருந்தன. அப்பெயர்களில் ஒன்று "நித்ய வினோதன்' ஆகும். தஞ்சை மாவட்டத்தின் கீழ்ப்பகுதி  மற்றும் பாபநாசம்  வட்டத்தின் மேற்குப்பகுதி போன்றவற்றை உள்ளடக்கிய
நல்லூரில் கேசவவிண்ணகரம்!
Published on
Updated on
2 min read


ராஜராஜ சோழனுக்கு பல சிறப்பு பெயர்கள் இருந்தன. அப்பெயர்களில் ஒன்று "நித்ய வினோதன்' ஆகும். தஞ்சை மாவட்டத்தின் கீழ்ப்பகுதி  மற்றும் பாபநாசம்  வட்டத்தின் மேற்குப்பகுதி போன்றவற்றை உள்ளடக்கிய நிலப்பகுதி நித்யவினோத வளநாடு என்று அழைக்கப்படுகிறது. நல்லூர் நாடு என்பது  திருநல்லம் திருத்தலத்தின் அமைவிடத்தைக் குறிப்பிடுகிறது.  

நல்லூரில் கேசவவிண்ணகரம்:  நல்லூர்நாட்டு திருநல்லம் ஸ்ரீ கல்யாணசுந்தரேசுவரர் திருக்கோயிலிலுள்ள கல்வெட்டுகளுள் ஒன்று இந்த கேசவ விண்ணகரத்தை சுட்டுகின்றது. கேசவ விண்ணகரம் பஞ்சவன்மாதேவி சதுர்வேதிமங்கலத்தைச்  சேர்ந்ததாகும்.

கேசவவிண்ணகர் கல்வெட்டுப் பகுதிகள்:  நல்லூர் கல்யாணசுந்தரேசுவரர் கோயிலின் இரண்டாம் திருச்சுற்று கிழக்குச் சுவர் கல்வெட்டு பாபநாசம் வட்டக் கல்வெட்டுகள் வழி  அறியமுடிகிறது. இதன் காலம் மூன்றாம் ராஜராஜனின் ஆட்சி ஆண்டு மூன்றுக்கு நேர் ஆங்கில ஆண்டு கி.பி 1218 ஆகின்றது.  "ஸ்ரீ ராஜராஜதேவர்க்கு ஆண்டு 3 வது கன்னி(புரட்டாசி) ... நாயற்று பூர்வபக்ஷத்து சதுர்தசியும், புதன்கிழமையும் பெற்ற சதயத்து நாள் நித்யவினோத வளநாடு, நல்லூர்நாட்டு உடையார் திருநல்லூர் (நாயனார் கோயில்) ஆதி சண்டேச்வரர் திருவருளால் இந்நாயனார் கோயில்தானத்தாரும், கேசவ விண்ணகர் எம்பெருமான்கோயில் தானத்தாரும் எங்களில் இசைந்து இசைதீட்டு இட்டபரிசாவது' என்றவாறே    கல்வெட்டு தொடர்கின்றது.

கல்வெட்டின் அடிப்படையில் நல்லூர் கல்யாணசுந்தரேசுவரர் கோயில் ஸ்தானத்தாரும், கேசவவிண்ணகர் ஸ்தானத்தாரும் இணைந்து நிலப் பரிவர்த்தனை பண்ணிக்கொடுத்த வ்யவஸ்தை அறியமுடிகின்றது. "நித்யவினோத வளநாட்டு நல்லூர் நாட்டு உடையார் திருநல்லூர் நாயனார்' என்பதால் திருநல்லம் கல்யாணசுந்தரேசுவரர் சுட்டப்படுவது தெளிவு. இவ்வூருக்கு ""நித்யவினோத வளநாட்டு நல்லூர்நாட்டு நல்லூராகிய பஞ்சவன்மாதேவி சதுர்வேதிமங்கலம் என்ற மற்றொரு பெயருண்டென்பதை தஞ்சை பெரிய கோயில் கல்வெட்டு குறிப்பிடுகிறது. "நல்லூரான பஞ்சவன்மாதேவி சதுர்வேதி மங்கலத்து கேசவ விண்ணகர் எம்பெருமான்' என்பதால் பஞ்சவன்மாதேவி சதுர்வேதி மங்கலத்தின் ஆலயத்தைச் சேர்ந்தவரே இந்த ஆதிகேசவப் பெருமாள் என்பதும் உறுதிபடுகின்றது.

ஆகமத்தில் ஆதிகேசவன்:   மேற்கு, வடமேற்குத் திசைகளில் திருமால் கோயில் கொண்டுள்ளமையை முறையே பாபநாசம்}சுந்தரப்பெருமாள் கோயிலுக்கு அருகில் நல்லூரிலும், திருவண்ணாமலையிலும் காணலாம் என்பதை தஞ்சை சரசுவதிமகால் வெளியீடான "தலவரலாற்று ஆய்வுக்கட்டுரைகள்' நூல் (ப.எண். 269&270) தெரிவிக்கின்றது. 

நல்லூர் ஸ்ரீ கல்யாண சுந்தரேசுவரர் திருத்தலத்தில் ஆதிகேசவனின் அமைவிடம் "உடையார் திருநல்லூர் நாயனார்கோயில் மேலை திருமடை விளாகத்து எல்லைக்கு மேற்கு இந்த கேசவவிண்ணகர் என்பதால் கல்யாண சுந்தரேசுவரர் கோயில் வெளித் திருச்சுற்றினைத் தாண்டி மேற்கில் கிழக்கு நோக்கியவாறு ஒரு வீடு போன்ற அமைப்பினுள்ளேயே வெகு கம்பீரமாகத் திருமகள், மண்மகள் புடைசூழ சுமார் 4 அடி உயரமுள்ள ஆதிகேசவப்பெருமாள் கோயில் கொண்டுள்ளார். 

நல்லூர் சிவன்கோயில் தரும் கல்வெட்டில் இந்த "கேசவ விண்ணகர்' மொத்தம் 8 முறை சுட்டப்பெற்றுள்ளது.  மேலுமிந்த கல்வெட்டுகளால் இவ்வெம்பெருமானுக்கு அளிக்கப்பட்டுள்ள  திருவிடையாட்ட மான நிலக்கொடைக் குறிப்பும், எம்பெருமான் கோயில் திருவடி பிடிக்கும் கோவிந்தபட்டன் என்பதால் இக்கோயிலின் அர்ச்சகர் பெயரும், கேசவ விண்ணகர் எம்பெருமான் கோயில் கணக்கு பனந்தாளுடையான்  உத்தமப் பிரியன் என்பதால் இப்பெரியாரே குறிப்பிட்ட கோயிலின் கணக்குப்பிள்ளை என்றும் அறியவருகின்றது. இச்செய்திகளைப் பாபநாசம் வட்டக்கல்வெட்டுகள் 137 முதல்139 வரையிலான பக்கங்களில்  நாம் காணலாம். 

இந்த ஆதிகேசவப் பெருமாள் கோயிலின் குடமுழுக்குவிழா ஜூன் மாதம்  20-6-2018 அன்று சீரும் சிறப்புமாக நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து தினமும் மண்டலாபிஷேக சிறப்புப் பூஜைகள் நடைபெறுகின்றன.

கும்பகோணம் அருகில் பாபநாசத்திலிருந்து கிழக்கே 5 கி.மீ. தொலைவிலுள்ள நல்லூரில் பாடல்பெற்ற அருள்மிகு கல்யாண சுந்தரேஸ்வரர் கோயிலின் பின்புறமுள்ளது ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் ஆலயம்.

தொடர்புக்கு:  திரு. ரமேஷ் - 99424 39209.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com