கேது தோஷம் போக்கும் ராஜபதி

தமிழ்நாட்டில் மன்னர்கள் காலத்தில் எழுப்பப்பட்ட பலத்திருக்கோயில்கள் சிறப்புற தினசரி பூஜைகளும் திருவிழாக்களும், பிரம்மோற்சவமும் பல கண்டு சிறந்தோங்கி இருந்தன.
கேது தோஷம் போக்கும் ராஜபதி
Published on
Updated on
2 min read

தமிழ்நாட்டில் மன்னர்கள் காலத்தில் எழுப்பப்பட்ட பலத்திருக்கோயில்கள் சிறப்புற தினசரி பூஜைகளும் திருவிழாக்களும், பிரம்மோற்சவமும் பல கண்டு சிறந்தோங்கி இருந்தன. காலப்போக்கில் இயற்கை சீற்றங்களால் கடல் கொண்டது. மேலும் ஆற்றுப்படுகைகளில் அமைந்திருந்த திருக்கோயில்கள் பெரு வெள்ளத்தால் அழிவுற்றும் அந்நியர் படையெடுப்புகளால் அழிக்கப்பட்டும் பல்வேறாக திருக்கோயில்கள் அழிந்துள்ளது வரலாறாகும்.
 முந்தைய திருநெல்வேலி மாவட்டத்தில் அகத்திய முனிவரின் சீடரான உரோமச முனிவர் தாமிரபரணி நதியில் மிதக்க விடப்பட்ட தாமரை மலர்களில் 8- ஆவது மலர் ஒதுங்கிய இடம் ராஜபதி, நவகயிலாய தலங்களில் எட்டாவது தலமாகும்.
 தற்போதைய தூத்துக்குடி மாவட்டத்தில் தென்திருப்பேரை அருகில் ராஜபதி என்ற கிராமத்தில் பல நூற்றாண்டுகளுக்கு முன் மதுரை சந்திரகுல பாண்டிய மன்னர்களால் அமைக்கப்பட்டது அருள்மிகு ஸ்ரீ செüந்தர நாயகி உடனுறை ஸ்ரீ கைலாச நாதர் திருக்கோயில். அக்காலத்தில் சீரும் சிறப்புமாக இருந்துள்ள இக்கோயில், காலப்போக்கில் கி.பி. 1648- இல் தாமிரபரணி நதியில் ஏற்பட்ட பெரும் வெள்ளத்தால் இத்திருக்கோயில் முழுவதுமாக அழிந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
 இதற்கு அடையாளமாக கோயில் இருந்த இடத்தில் திறந்தவெளியில் ஒரு சிறு கல்தூண் மட்டுமே இருந்தது. அதையே மக்கள் வணங்கி வழிபட்டு வந்தனர். பெரு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட கருங்கல் விக்ரஹங்கள் கரை ஒதுங்கிய இடங்களில் ஊர்மக்கள் விக்ரகங்களை எடுத்து தங்கள் கோயில்களில் வைத்து வழிப்பட்டு வருவதாக கூறுகின்றனர். ராஜபதி திருக்கோயிலில் இருந்த நந்தீஸ்வரர் தற்போது ஒட்டப்பிடாரத்தில் உள்ள உலகம்மன் திருக்கோயிலில் உள்ளதாகக் கூறுகின்றனர். இந்த நந்திக்கு அபிஷேகம் செய்வதால் ஆடுமாடுகளுக்கு நோய் வராது என்பது அப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது.
 திருநெல்வேலி-திருசெந்தூர் செல்லும் வழியில் தென் திருப்பேரை அருகில் குரும்பூர் - ஏரல் சாலையோரம்-தாமிரபரணியின் தென்கரைத் தலமாக ஆத்தூர் கால்வாய் அருகில் ஒன்றரை ஏக்கர் நிலப்பரப்பில் பசுமையான சோலைகளுக்கு இடையில் புதியதாக கோயில்கட்டி 30.05.2010இல் குடமுழுக்கு நடத்தப்பட்டது.
 திருக்கோயிலின் உட்பிரகார நுழைவு வாயிலில் அதிகாரநந்தி, சூரியன், சந்திரன், பலிபீடம் அடுத்து கொடிமரம் அமைந்துள்ளது. அதனருகில் பிரதோஷ நந்தி சந்நிதியும் அமைந்துள்ளது. மஹாமண்டபம், அர்த்த மண்டபம், கருவறை என்ற அமைப்பில் திருக்கோயில் அமைந்துள்ளது.
 கருவறையின் உள்ளே நெடிதுயர்ந்த மேனியராக சதாசிவமூர்த்தியாக, ஸ்ரீ கைலாசநாதர் திருவருள் புரிகிறார். தனி சந்நிதியில் அம்பிகை செüந்தரநாயகி அங்குசம், பாசம் தாங்கி, அபய வரத முத்திரை காட்டி பக்தர்களின் குறைபோக்கி நல்லருள் புரிகிறார்.
 ராஜபதி தாமிரபரணி ஆற்றின் கரையில் உள்ள நவகயிலாய தலங்களில் ஒன்றாகும். இந்த ராஜபதி சிவன் கோயில் எட்டாவது கயிலாயத் தலமாகும். நவகிரகங்களில் கேது பகவான் பூஜித்த தலமுமாகும். ஆந்திராவில் உள்ள திருகாளஹஸ்தி போன்று ராஜபதி சிவன்கோயிலில் ராகு கேது தோஷமான கால சர்ப்பதோஷம் பரிகாரம் செய்வதால் இக்கோயிலை தென்காளஹஸ்தி என்று கூறுவர்.
 திருகாளஹஸ்தியில் உள்ள பாதாள விநாயகரை போன்று ராஜபதி திருக்கோயிலில் கண்ணிமூல கணபதியாக காளத்தி விநாயகர் அருள்பாலிக்கிறார். வள்ளி தெய்வானை சமேதராக ஸ்ரீசுப்ரமணியர் சந்நிதியும் அமையப் பெற்றுள்ளது. இங்கு, நவகிரகங்கள் இல்லாமல் நவலிங்கங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டு தனிச் சந்நிதியாக அமையப்பெற்றுள்ளது.
 தென்திசையில் தட்சணாமூர்த்தியும் மேற்கில் லிங்கோத்பவரும் வடக்கில் பிரம்ம தேவரும் வீற்றிருந்து அருளுகின்றனர்.
 சண்டேஸ்வரர் தனிச் சந்நிதி கொண்டு பேரருள் புரிகிறார். உட்பிரகாரத்தில் காலபைரவர் கருணையோடு நமக்கு பேரருள் புரிகிறார். நடராச சபையில் ஆடலரசனும் சிவசாமியும் மாணிக்க வாசகப் பெருமானும் ஒருங்கே வீற்றிருந்து அருளுகின்றனர்.
 திருக்கோயிலுக்கு வெளியே சுவாமி சந்நிதிக்கு எதிரில் பாலாவி திருக்குளம் முக்குளம் என்று அழைக்கப்படுகிறது. இக்குளத்தில் பாலாவி தீர்த்தமும் தாமிரபரணி தீர்த்தமும் பொன் முகிலி தீர்த்தமும் கலந்து வருவதால் இது பிதுர்தோஷம், நவகிரக தோஷம் நீங்கும் தீர்த்தமாக உள்ளது. இத்தல கைலாசநாதப் பெருமானை வணங்குவதால் எம பயம் நீங்கும். சண்டை சச்சரவுகள் நீங்கும், விஷம் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாகும். கேது தோஷங்கள் நீங்கும். ஞாயிறு மதியம் 12.00-1.30 மணி வரை, மற்றும் செவ்வாய் காலை 9.00 -10.30 மணி வரை பரிகார பூஜை நடைபெறுகிறது.
 இத்திருக்கோயிலில் தற்போது சுமார் ஐம்பது லட்ச ரூபாய் மதிப்பீட்டில் எழுநிலை ராஜகோபுரத் திருப்பணி நடைபெற்று வருகிறது. இத்திருப்பணிக்கு பொன் பொருள் உதவி செய்து எம்பெருமான் கைலாசநாதரின் திருவருளைப்பெறுவோம்.
 வழித்தடம் : திருநெல்வேலியிலிருந்து திருச்செந்தூர் செல்லும் வழியில் குரும்பூரிலிருந்து ஏரல் செல்லும் வழியில் சேது சுப்பிரமணியபுரம் சென்று அங்கிருந்து சிறிது தூரத்தில் கோயில் உள்ளது.
 தொடர்புக்கு: 98422 63681.
 - எழுச்சூர் க. கிருஷ்ணகுமார்
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com