அஞ்சுவது அஞ்சலில் அல்லாஹ்வின் தஞ்சம்

அஞ்ச வேண்டியதை அஞ்சி அடாத செயல்களைச் செய்யாது விடுவது அறிவுடைமை. பழிபாவங்களுக்குப் பயப்படாது பாதகங்கள் புரிவது அறிவின்மை.
Updated on
2 min read

அஞ்ச வேண்டியதை அஞ்சி அடாத செயல்களைச் செய்யாது விடுவது அறிவுடைமை. பழிபாவங்களுக்குப் பயப்படாது பாதகங்கள் புரிவது அறிவின்மை. பாவங்கள் செய்ய தூண்டுவது ஆசை. ஆசை அடங்காதது; துய்க்க துய்க்க மாய்ந்திடும் வரை மாளாது தாளாத துயரைத் தருவது. ஆசையை அறுக்க வேண்டும். ஆசையை மறுத்து மாண்புடன் வாழவைக்கும் வல்லோன் அல்லாஹ்விற்கு அஞ்சுவது.
முரண்பாடு இல்லாத இறை மறையில் ஒத்த கருத்துகளே ஓங்தி நிற்பதை நினைவு கூறும் அடியார்கள் மெய்சிலிர்ப்பர். அச்சிலிர்ப்பின் பிரதிபலிப்பே இறையச்சம். இறையச்சம் இறைவழிபாட்டில் ஈடுபடுத்தும். இறைவழிபாடு ஆசைக்கு அடிபணிந்து அநீதிக்கு ஆட்படாமல் தீயதை விட்டு விலகி நல்லதை நாடச் செய்வதை நவில்கிறது நற்குர்ஆனின் 39- 23 ஆவது வசனம்.
எவர் அல்லவாஹ்விற்கும் அவனுடைய தூதருக்கும் கட்டுப்பட்டு அல்லாஹ்விற்கு அஞ்சி அல்லாஹ்விற்கு மாறு செய்வதை விட்டு விலகினரோ அவர்கள் நிச்சயம் பெரும் பாக்கியம் பெற்றவர்கள் என்பதை எடுத்துரைக்கிறது 24-52 ஆவது வசனம். நற்பாக்கியமும் உயர்வும் உடைய அல்லாஹ்விற்கு அஞ்சி நடக்கும் அடியார்களே வெற்றி பெற்றவர்கள். "" இறை அச்சம் உடையோர் இறைவனைப் புற கண்களால் காணாத பொழுதும் இறைவனுக்கும் மறுமைக்கும் அஞ்சி மாறுபடாது இறை கட்டளைகளை நிறைவேற்றுவர் என்று இயம்புகிறது 21-49 ஆவது வசனம். போற்றற்குரிய நற்குணங்களில் முதலிடம் பெறுவது அல்லாஹ்விற்கு அஞ்சி வாழ்வது. அதில்தான் நிம்மதி நிலையாகக் கிடைக்கும். இறைவனின் கருணையையும் சிறப்பையும் இறை அச்சம் இறை அடியானின் இதயத்தில் பதிய வைக்கும். இறைவன் விலக்கியதை விட்டு இறையடியானை விலக்கிவிடும். இறையடியானின் உள்ளம் தூய்மை பெற்று நற்குணங்களால் நிரம்பி நிற்கும். இந்த இறை அச்சம் இறைவனை நெருங்க வைக்கும். இடப்பட்ட கட்டளைகளைக் கவனமாக செய்யும் மலக்குகளும் இறை அச்சத்துடன் இயங்குவதை இயம்புகிறது 16-50 ஆவது வசனம். 34-23 ஆவது வசனம் மனிதனைப் போல் இச்சைக்கு இறையாகாத மலக்குகளும் அச்சமுற்று இறைவனின் கட்டளைக்கு முழுமையாக கட்டுப்பட்டு அடிபணிந்து நிற்பார்கள் என்று அறிவிக்கிறது.
மாபெரும் மலைகளும் உயர்ந்து நிற்கும் சிகரங்களும் இறைவனின் அச்சத்தோடு நிற்பதை நினைவுறுத்துகிறது இணையில்லா குர்ஆனின் 59-21 ஆவது வசனம். உண்மையான விசுவாசிகளும் அவ்வாறே, அல்லாஹ்விற்கு அஞ்சவேண்டும். அது அக புற தூய்மையை பெற உதவும். இறையச்சம் இல்லாதிருப்பின் இவ்வுலக மாயைகளில் வீழ்ந்து தாழ்ந்து இவ்வுலகிலும் துன்புற்று மறுமையிலும் மாறா துயருக்கு உள்ளாக நேரும். ஒரு மலையின் மீது குர்ஆன் இறக்கப்பட்டிருந்தால் அம்மலை வெடித்து சிதறி இருக்கும் . அத்தகு குர்ஆன் அருளப்பட்ட நாம் அதனை உணர்ந்து இறைவனுக்கு அஞ்சி வாழவேண்டும். 
இறைவனை அறிந்த இறை தூதர்கள் இறை கட்டளைகளை எடுத்துரைப்பார்கள். அல்லாஹ்விற்கு மட்டுமே அஞ்சுவார்கள். அல்லாஹ்வை அன்றி வேறு எவருக்கும் எதற்கும் அஞ்சமாட்டார்கள் என்ற 33-39 ஆவது வசனத்தை வள்ளல் நபி (ஸல்) அவர்கள் "" உங்களை விட அல்லாஹ்விற்கு அதிகமாக அஞ்சுபவன் நான்'' என்று உரைத்து உறுதிபடுத்தினார்கள்.
""கற்றவர்கள் மன்னிப்பவனும் மிகைத்தவனுமாகிய அல்லாஹ்விற்கு அஞ்சுவதை 35-28 ஆவது வசனம் கூறுகிறது. கற்ற கல்வி அத்தகு அச்சத்தை அவர்களுக்குத் தந்து எச்சமின்றி ஏவலை எடுத்து நடக்க வைக்கும்; விலக்கலை விலக்க வைக்கும். மார்க்க அறிவும் அல்லாஹ்வைப் பற்றிய தெளிவும் படைப்புகளைப் பற்றிய சிந்தனையும் அல்லாஹ்வின் அச்சத்தை ஏற்படுத்தி நற்செயல்களில் ஈடுபட நற்றுணை புரியும். அல்லாஹ்விற்கு அஞ்சி வாழ்வோர் நற்பண்புகளைப் பெற்று நற்செயல்களில் ஆர்வம் உடையவராய் இருப்பர்'' என்று இயம்புகிறார் அறிஞர் ஹசன் பஸ்ரீ (ரஹ்) நூல்- தப்ஸீர் இப்னு கதிர்.
அல்லாஹ்விற்கு அஞ்சி வாழ்வோர் பெற்றோருக்கு பணிவிடை செய்வர், உறவுகளோடு இணக்கம் பேணுவர். நற்செயல்களை உறுதியாக செய்வர்; அல்லாஹ் கவனித்து கொண்டிருக்கிறான் என்பதை கவனத்தில் இருத்தி மற்றவர்களிடம் மரியாதையோடும் கருணையோடும் மென்மையாகவும் உண்மையாகவும் நடப்பர்.
கண்களின் சதிகளையும் உள்ளத்தில் மறைந்து இருப்பதையும் இறைவன் அறிவான் என்ற 40-19 ஆவது வசனப்படி கண்களின் சதி என்பது தடுக்கப்பட்டதை விலக்கப்பட்டதைப் பிறர் அறியாது கள்ள பார்வைப் பார்ப்பதைக் குறிக்கிறது. கள்ளப்பார்வை உள்ளத்தில் ஊசலாட்டத்தை உண்டு பண்ணும்; ஊசலாட்டம் மோசமான நாசகார செயல்களில் ஈடுபடுத்தும். இதனை உணர்ந்து உள்ளத்தில் உள்ளதை அறியும் அல்லாவின் ஆற்றலை அறிந்து வெளிச்சத்திலும் இருட்டிலும் பகிரங்கத்திலும் அந்தரங்கத்திலும் அல்லாஹ்விற்கு அஞ்சி வாழ வேண்டும். அப்படி அஞ்சி வாழும் பொழுது வஞ்ச மனத்தினனாய் நெஞ்சறிய தீயன செய்ய துணிய
மாட்டோம்.
அல்லாஹ்விற்கு அஞ்சி நடப்பவர் அடையும் நன்மைகளை நவில்கிறது 98-8 ஆவது வசனம். இறைவனுக்கு அஞ்சி உலக வாழ்வில் கிஞ்சிற்றும் இறை சட்டங்களிலிருந்து பிறழாது வழுவாது அனைத்திலும் நேர்மையை கடைப்பிடித்தவர்களை அல்லாஹ் பொருந்தி கொண்டு சொர்க்கத்தில் நிரந்தரமாக தங்க வைக்கிறான். இவ்
வசனத்தில் உள்ள அத்னுள் என்னும் அரபி சொல்லுக்கு நிரந்தரமானது நிலையானது என்று பொருள். இதனை 10-62, 63 வசனங்களும் உலகில் அல்லாஹ்வின் அச்சத்தோடு நியாயமாய் நேர்மையாய் வாழ்ந்தவர்கள். மறுமையில் அச்சம் அற்று சஞ்சலம் இன்றி சஞ்சரிப்பார்கள் என்பதை உறுதி செய்கின்றன. 36-11 ஆவது வசனம் அல்லாஹ்விற்கு அஞ்சி வாழ்பவர்களின் பாவங்களை மன்னித்து நற்கூலி வழங்குவதாக கூற , 79,40,41 ஆவது வசனங்கள் அல்லாஹ்வின் அச்சம் பாவங்களைப் போக்கி சொர்க்கம் செல்லும் தகுதியைத் தருவதை உறுதி செய்கின்றன. 
அல்லாஹ்விற்கும் அல்லாஹ்வின் தூதருக்கும் கீழ்படியுங்கள் என்று உரைக்கிற உத்தம குர்ஆனின் 4-59 ஆவது வசனப்படி இறைதூதரின் போதனைகளை ஏற்று 9-13 ஆவது வசனம் வலியுறுத்துகிறவாறு அல்லாஹ்விற்கு மட்டுமே அஞ்சி அதாவது அஞ்சுவது அஞ்சி விலக்கலை விட்டு விலகி ஏவலை எடுத்து நடந்து அல்லாஹ்விடம் நஞ்சம் அடைவோம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com