சிதையில் ஆடும் பெருமான்!

முன்பொரு முறை முனிவர்கள் பலரும் உலக மக்களின் நன்மை வேண்டி பாரத தேசத்தின் பல பகுதிகளிலும், முக்கியமாக தீர்த்தக்கரைகளில் யாகங்கள் நடத்தினர்.
சிதையில் ஆடும் பெருமான்!
Updated on
1 min read

முன்பொரு முறை முனிவர்கள் பலரும் உலக மக்களின் நன்மை வேண்டி பாரத தேசத்தின் பல பகுதிகளிலும், முக்கியமாக தீர்த்தக்கரைகளில் யாகங்கள் நடத்தினர். அப்படி ஒரு முறை சிலாத முனிவர் என்பவர் தஞ்சாவூர் அருகே வடவாற்றங்கரையில் யாகம் நடத்திக் கொண்டிருந்தார்.
உலக நலத்திற்காக தேவர்களும், முனிவர்களும் யாகம் செய்வதும், அசுரர்கள் அதைக் கலைப்பதும் காலந்தோறும் நடந்து கொண்டிருப்பவை தானே!. சிலாத முனிவரின் யாகத்தை தடுத்து நிறுத்தி அதைக் கலைத்துவிட வேண்டும் என்ற எண்ணத்துடன் தஞ்சன், தாரகன் என்ற இரு அரக்கர்கள் குதித்தார்கள். சிலாத முனிவரின் யாகத்தை சிதைக்க பல முயற்சிகள் மேற்கொண்டார்கள். மண்மழை (மண்மாரி) பொழியச் செய்தார்கள். பெருமழை பெய்யச் செய்தார்கள். இன்னும் ஏராளமான இடையூறுகள் கொடுத்தார்கள்.
சிலாத முனிவர் யாகம் நடத்தி மகா கெüரியான ஆனந்தவல்லியிடம் முறையிட்டார். அன்னை யாகத் தீயில் இருந்து எழுந்து வடவாற்றங்கரை மண் எடுத்து சக்கரம் செய்தாள். பின்னர் அந்த சக்கரத்தைக் கொண்டு தஞ்சன், தாரகன் ஆகிய இரண்டு அரக்கர்களையும் அழித்தாள்.
அசுரர்கள் சிவ வழிபாடு செய்து சிவ பக்தர்களாக இருந்ததால் இறைவன் அந்த அசுரர்களின் இறுதிக் காரியங்களை இந்த ஆற்றங்கரையில் செய்து அவர்களுக்கு முக்தியும் அருளினார். இறைவன் அசுரர்களின் இறுதிக் காரியத்திற்காக எலும்புகளை ஆற்றில் கரைத்த போது அவை பூக்களாகவும் முத்துக்களாகவும் உருமாரி மிதந்ததால் இவ்வூரில் பாயும் ஆறு மணிமுத்தாறு என்றழைக்கப்படுகிறது.
சிலாத முனிவருக்கு கிடைத்த அமுதம் பட்டு உருவான குளத்திற்கு "அமுத சாகரம்' என்று பெயர். அமுத சாகரத்தை பார்த்து அமர்ந்திருக்கும் அம்பாளுக்கு "அமுத மொழியாள்' என்பது திருநாமம். அசுரர்களின் உடல் சிதை மூட்டிய காரணத்தினால் இறைவனுக்கு சிதாநந்தீஸ்வரர் என்பது திருநாமம். "சிதாநந்தீஸ்வரர்' என்றால் "சிதையில் ஆடும் பெருமான்' என்று பொருள்.
கொங்கண சித்தரின் குருவான ரோமரிஷி சமாதி அமைந்த இடம் ஆலயத்தின் ஈசான மூலையில் அமைந்துள்ளது.
தஞ்சாவூரில் இருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் கரந்தை அருகில் (கரந்தை தமிழ்ச்சங்கம்) உள்ளது இந்த வடவாற்றங்கரை, பூக்குளம் சிதாநந்தீஸ்வரர் திருக்கோயில். இத்தலத்திற்கு வந்து வழிபடுபவர்களுக்கு நீண்ட நாள்களாக இருந்துவந்த நோய்கள் நீங்கும் என்பதும்; அகாலமரணம் ஏற்படாது என்பதும் ஐதீகம்.
தொடர்புக்கு: 97900 27338.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com